சுந்தரர் (மும்முறை மேற்கொண்ட தில்லை யாத்திரை):

தம்பிரான் தோழரான நம் சுந்தரனார் மூன்று வெவ்வேறு சமயங்களில் தில்லைப் பரம்பொருளைத் தரிசித்துள்ள நிகழ்வுகளைத் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார். அது குறித்து இப்பதிவினில் சிந்தித்து மகிழ்வோம்.

(1)
முதலாவது தில்லை யாத்திரையைத் 'திருமலைச் சருக்கம்' எனும் பகுதியில், 20 திருப்பாடல்களில் மிக விரிவாகப் பதிவு செய்து போற்றுகின்றார் சேக்கிழார் பெருமானார் (திருப்பாடல் 237 முதல் 256 வரை). சிற்றம்பலத்தின் முன்புள்ள பஞ்சாட்சரப் படிகளில் வீழ்ந்தெழுந்து, அஞ்சலி கூப்பிய கையினராய், உளம் நெகிழ்ந்துருகி, கருவி கரணங்களின் ஞானம் அனைத்தையும் கண்களே கொள்ளுமாறு ஒருமையுற்றுப் பொன்னம்பலப் பரம்பொருளின் பேரழகுத் திருக்கோலத்தினை,  இமைக்கவும் கூடாமல் மென்மேலும் பருகித் திருவருளில் திளைக்கின்றார்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 252)
ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள, அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையேயாகக், குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக
இந்துவாழ் சடையான் ஆடும்ஆனந்த எல்லையில் தனிப்பெரும் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்

'சிற்சபேசப் பரம்பொருளின் அரிதினும் அரிதான திருநடக் கோலத்தினைத் தரிசிக்கக் கூட்டுவித்த இம்மானுடப் பிறவியே யாவற்றிலும் மேலான இன்பம் பயப்பதாக இருக்கின்றது' என்று வியந்து தொழுகின்றார் நம்பிகள் பெருமானார். 

(2)
2ஆவது தில்லை யாத்திரையை 'ஏயர்கோன் கலிக்காமர் புராணத்தின் 6 திருப்பாடல்களில்' விவரிக்கின்றார் சேக்கிழார் அடிகள் (திருப்பாடல் 111 முதல் 116 வரை). இம்முறை கொங்கு தேசத்திலுள்ள காஞ்சிவாய்ப் பேரூரில் தில்லைத் திருக்கோல தரிசனம் கிடைக்கப் பெற்றுப் பின் வழிதோறுமுள்ள திருத்தலங்களைத் தரிசித்துப் பரவியவாறே தில்லைப் பதியினை வந்தடைகின்றார். 

ஐவகை உறுப்புகளும்; எண்வகை உறுப்புகளும் நிலத்தில் பொருந்துமாறு பன்முறை பணிந்தெழுகின்றார். கண்ணருவி நெடுநேரம் பாய்ந்த வண்ணமிருக்கப் பொன்னம்பலம் மேவும் கூத்தர் பிரானின் திருவருள் வெள்ளத்தில் திளைத்துப் பெருநிறைவு காண்கின்றார் சுந்தரனார் ('கரவிலாதவரைக் கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள'). காஞ்சிவாய்ப் பேரூரில் பெற்று மகிழ்ந்த தில்லைத் திருக்காட்சியையும் நினைவு கூர்ந்தவாறு 'மடித்தாடும் அடிமைக்கண்' எனும் திருப்பதிகத்தினால் அம்பலவாணரைப் போற்றி செய்கின்றார்,

(சுந்தரர் தேவாரம் - திருத்தில்லை: திருப்பாடல் 1)
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழு நாளும் 
தடுத்தாட்டித் தருமனார் தமர் செக்கிலிடும்போது தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலும் கரிய பாம்பும்
பிடித்தாடிப் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாமன்றே

(3)
வன்தொண்டரின் 3ஆவது தில்லை யாத்திரையை ஏயர்கோன் கலிக்காமர் புராணத்தின் இரு திருப்பாடல்களில் பதிவு செய்கின்றார் தெய்வச் சேக்கிழார் (திருப்பாடல் 166, 167). குருகாவூரைத் தரிசித்துப் பரவிப் பின் அங்கிருந்து தில்லைக்குச் சென்று அம்பலத்தாடும் ஆதி மூர்த்தியைத் தரிசித்துப் பணிகின்றார்.

No comments:

Post a Comment