சுந்தரர் (சுந்தரரை வளர்த்த நரசிங்க முனையர் நாயன்மார்களுள் ஒருவரா? சில விளக்கங்கள்):

நம்பியாரூரர் எனும் திருப்பெயரில் இனிது வளர்ந்து வரும் சுந்தரருக்கு அப்பொழுது 21 மாதங்கள் கடந்திருந்த நிலையில், சிறுதேர்ப் பருவத்தினராகித் திருவீதிகளில் விளையாடி வருகின்றார். தளர் நடையிட்டுத் தேர் உருட்டி விளையாடும் சிவச்செல்வரின் பேரழகினைக் கண்ணுறும் அப்பகுதி மன்னரான நரசிங்க முனையர் என்பார், அன்பும் காதலும் மீதுரப் பெற்றோரின் அனுமதியுடன், அடியவர் பெருமக்களைப் போற்ற அவதரித்த ஆரூரரைத் தம்முடன் அழைத்துச் சென்று, அந்தணர் திருவும், அரசரின் திருவும் ஒருசேரப் பொலியுமாறு சீரும் சிறப்புமாய் வளர்த்து வருகின்றார். 

(திருமலைச்சருக்கம் - திருப்பாடல் 151)
நரசிங்க முனையர் என்னும் நாடுவாழ் அரசர் கண்டு
பரவரும் காதல் கூர  பயந்தவர் தம்பால் சென்று
விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்றுத் தங்கள்
அரசிளம் குமரற்கேற்ப அன்பினால் மகன்மை கொண்டார்

தெய்வச் சேக்கிழார் சுந்தரரை வளர்த்து வரும் இம்மன்னரை 'நரசிங்க முனையர்' என்று குறிக்கின்றார். இச்சிறு பெயர் ஒற்றுமையால் இவரை நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப் பெறும் 'நரசிங்க முனையரையர்' என்று கருதுவோரும் உளர். இருவரையுமே திருமுனைப்பாடி நாட்டு மன்னர் என்றே பெரிய புராணம் பதிவு செய்திருந்தாலும், நரசிங்க முனையரையரின் புராணத்தில் இடம்பெறும் 9 திருப்பாடல்களிலும் சுந்தரரைப் பற்றிய யாதொரு குறிப்புமில்லை, பெரிய புராணக் காவியத் தலைவரான நம் சுந்தரரை வளர்த்திருந்தவர் எனில் சர்வ நிச்சயமாய் நம் சேக்கிழார் பெருமான் அக்குறிப்பினைக் கடந்து சென்றிருக்க வாய்ப்பில்லை. 

சேக்கிழார் காலத்திற்கு முன்னரே அவதரித்திருந்த நம்பியாண்டார் நம்பிகளும், தம்முடைய திருத்தொண்டர் திருவந்தாதியில், நரசிங்க முனையரைய நாயனார் சுந்தரரை வளர்த்ததாகக் குறிக்கவில்லை. ஆதலின் சுந்தரரின் காலத்திற்கு முன்னரே நரசிங்க முனையரையர் எனும் நாயனார் அவதரித்துச் சிறப்புற்று விளங்கியிருக்க, 'நரசிங்க முனையர்' என்பார் அம்மரபில் பின்னாளில் தோன்றியுள்ள சிற்றரசரே என்பது தெளிவு. 

சுந்தரனார் திருத்தொண்டர் தொகையில் 'மெய்யடியான் நரசிங்க முனையரையற்கு அடியேன்' என்றும், திருநாவலூர் திருப்பதிகத்தின் இறுதிப் பாடலில் 'நரசிங்க முனையரையன் ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர்' என்றும் நரசிங்க முனையரைய நாயனாரைச் சேய்மைப் பதத்தில் வைத்தே போற்றியுள்ளார். சிறு பிராயத்திலிருந்தே வளர்த்து வளர்த்துள்ள அன்புக்குரியவர் எனில் தன்னுடன் தொடர்பு படுத்தியன்றோ குறித்திருப்பார், சடையனார்; இசைஞானியரை அனைத்து திருப்பதிகங்களிலும் தம்முடன் இணைத்தே குறித்து வந்துள்ளது கண்கூடு (சிவ சிவ).

No comments:

Post a Comment