திருநாவுக்கரசர் (நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்):

(1)
நாவுக்கரசு சுவாமிகள் திருவதிகை மேவும் இறைவரால் தடுத்தாட்கொள்ளப் பெற்றுச் சமணம் விட்டொழிந்து, சைவ சமயம் பேணுகின்றார். இதனைக் கேளிவியுறும் சமணர்கள் அச்சமுற்று, பல்லவ வேந்தனிடம் 'நம்முடனிருந்த தருமசேனர் சூலையெனும் பொய் கூறிச் சைவம் சார்ந்துள்ளார், இனி நம் மதத்தையும் அழிக்க முனைவார்' என்று திரித்துக் கூறுகின்றனர்.

(2)
பல்லவனும் மதியிழந்து, 'அங்கனமாயின் அவரை இவ்விடம் அழைத்து வரச் செய்து தண்டிப்போம்' என்று ஆணையிடுகின்றான். உடன் அங்கிருந்த அமைச்சர்கள் படைகளுடன் விரைந்து, திருவதிகையிலுள்ள நாவுக்கரசு சுவாமிகளிடம்  சென்று அரசாணையைத் தெரிவிக்கின்றனர்.

(3)
நம் சுவாமிகளோ 'மூலமுதற் பொருளான சிவபெருமானின் திருவடிகளைச் சரணாகப் பற்றியுள்ளேன், ஆதலின் உங்கள் அரசரின் ஏவலுக்கு செவிசாய்க்கும் நிலையில் நாமின்று இல்லை' என்று சைவச் சிம்மமென முழங்குகின்றார். அச்சமயம் அடிகள் அருளிச் செய்த மறுமாற்றுத் திருத்தாண்டகம், 

(திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 1)
நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்
    நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம்; பணிவோம் அல்லோம்
    இன்பமே எந்நாளும் துன்பமில்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான
    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதில் 
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச் சேவடிஇணையே குறுகினோமே

(4)
சுவாமிகளின் சிவஞானப் பெருநிலையையும்; அதீத தெய்வத் தன்மையையும் உணரப் பெறும் பல்லவ அமைச்சர்கள் அடிகளின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, 'உங்களை அழைத்து வரத் தவறினால் அரச தண்டனைக்கு உள்ளாவோம், ஆதலின் தயவு கூர்ந்து உடன் வர வேண்டும்' என்று விண்ணப்பித்துக் கொள்கின்றனர். கருணையே வடிவான நம் அடிகளும், 'இனி நிகழஇருக்கும் செயல்களுக்கு நமை ஆளுடைய திருவதிகை முதல்வரின் திருவருள் துணை நிற்கும்' என்றிசைந்து, அவர்களுடன் செல்கின்றார்,

(திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 94)
ஆண்ட அரசு அருள்செய்யக் கேட்டவரும் அடிவணங்கி
வேண்டி அவர்க் கொண்டேக, விடையுகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டுவரும் வினைகளுக்கு எம்பிரான்உளன் என்றிசைந்திருந்தார்
மூண்டசினப் போர்மன்னன் முன்அணைந்தங்கு அறிவித்தார்

No comments:

Post a Comment