திருநாவுக்கரசர் (திருவாரூர் தரிசனமும், தேவாசிரியன் மண்டபத்தில் ஏற்பட்ட மன வருத்தமும்):

நாவுக்கரசு சுவாமிகள், திருத்தொண்டர்களும் உடன்வர ஆரூர் ஆலயத்துள் செல்கின்றார். தேவாசிரியன் மண்டபத்தினைப் பணிந்திறைஞ்சிப் பின் பூங்கோயில் எனும் ஆரூர்ப் பரம்பொருளின் திருச்சன்னிதியைச் சென்றடைகின்றார்.  

(1)
புற்றிடம் கொண்ட புராதனரின் திருமுன்பு சென்று கண்களாரத் தரிசிக்கின்றார். விதிர்விதிர்த்து வீழ்ந்து பணிந்து, திருமேனி முழுதும் புளகமுற எழுந்து தொழுகின்றார். திருமூலட்டான முதல்வரின் மீதுற்ற மெய்யன்பு பல்கிப் பெருகிய வண்ணமிருக்க, அதீத நெகிழ்ச்சியால் கண்ணருவி பாய, அப்பெருநிலையில் ஆரூருறைப் பரம்பொருளின் திருவடிகளைப் போற்றி செய்கின்றார், 

(திருவாரூர் தேவாரம் - திருப்பாடல் 1)
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி
    கழலடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட்(கு) ஆரமுதமானாய் போற்றி
    அல்லலறுத்(து) அடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
    வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
    திருமூலட்டானனே போற்றி போற்றி

(2)
பின்னர் அச்சன்னிதியினின்றும் அரிதின் நீங்கி, பூங்கோயிலை வலம் வந்து வணங்கியவாறு தேவாசிரியன் மண்டபத்தினை மீண்டும் வந்தடைகின்றார். இச்சமயத்தில் சுவாமிகள் தாங்கொணா வேதனையால் உளம் வெதும்புகின்றார், 'இத்தன்மையரான இறைவரை; கருணைப் பெருங்கடலான முதல்வரை; அடியேனுக்குற்ற தனிப்பெரும் தலைவரை; வார்த்தைகளால் விளக்கவொண்ணா பெற்றி பொருந்திய திருவாரூர் தேவதேவரை, இதுநாள் வரையிலும் தொழாது பொழுதை அவமே போக்கினேனே' என்று வருந்தி, பழமொழிகளோடு முடிவுறும் 10 திருப்பாடல்களைக் கொண்ட பனுவலொன்றினால் தன் வேதனையை வெளிப்படுத்துகின்றார்,

(திருவாரூர் தேவாரம் - திருப்பாடல் 1)
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே
உய்யலாம் என்றெண்ணி உறிதூக்கி உழிதந்(து) என்உள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூரரைக்
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே!!

(மற்ற 9 திருப்பாடல்களின் இறுதி வரிகள்)
ஆரூரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே!!

ஆரூரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க மறம்விலைக்குக் கொண்டவாறே!!

ஆரூரரைப் 
பண்டெலாம் அறியாதே பனிநீரால் பாவை செயப் பாவித்தேனே!!

ஆருரரை
என்ஆகத்(து) இருத்தாதே ஏதன்போர்க் காதனாய் அகப்பட்டேனே!!!

ஆருரரை
எப்போதும் நினையாதே இருட்டறையின் மலடு கறந்(து) எய்த்தவாறே!!

ஆரூரில் வார் தேனை வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்தவாறே!!

ஆரூரரைப் 
பாவியேன் அறியாதே பாழூரில் பயிக்கம்புக்(கு) எய்த்தவாறே!!

சாராதே தவமிருக்க அவஞ்செய்து தருக்கினேனே

ஆரூரில் அம்மானை ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க இரும்பு கடித்(து) எய்த்தவாறே!!

No comments:

Post a Comment