திருநாவுக்கரசர் (திருவாரூரில் ஓர் அற்புத வரவேற்பு):

(1)
வாகீசப் பெருந்தகையார் பெருவேளூர்; விளமர் முதலிய தென்கரைத் தலங்களைத் தரிசித்துப் பரவியவாறே திருவாரூரின் எல்லையினை வந்தடைகின்றார். 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 217)
பெருவாச மலர்ச்சோலைப் பெருவேளூர் பணிந்தேத்தி
முருகாரும் மலர்க் கொன்றை முதல்வனார் பதிபிறவும்
திருவாரும் விளமருடன் சென்றிறைஞ்சி வாகீசர்
மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்தடைந்தார்

(2)
ஆளுடைய அரசுகள் எழுந்தருளி வருவதனை அறியப் பெறும் ஆரூர் வாழ் திருத்தொண்டர்கள், மாளிகைகள்; திருவீதிகள் இவைகளை நன்கு அணி செய்து; தோரணங்களை நாட்டி, திருவிளக்கு வரிசைகளால் நகரெங்கும் பொலிவுறச் செய்கின்றனர்,
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 218)
ஆண்டஅர(சு) எழுந்தருள ஆரூரில் அன்பர்கள்தாம்
நீண்டசடை முடியார்பால் நிறைந்தஅருள் பெற்றுடையார்
காண்தகு மாளிகைமாடம் கவின் சிறந்தோங்கிட எங்கும் 
சேண்திகழ் வீதிகள் பொலியத் திருமலி மங்கலம் செய்தார்

(3)
'சமணர்களின் கொடுஞ்செயல்களை திருவருள் திறத்தால் வென்று, பெருங்கடலில் கல்லொன்றையே தெப்பமாகக் கொண்டு சைவக் கரையேறிய தனிப்பெரும் குருநாதர் நம்மிடையே எழுந்தருளி வரப் பெற்றோம்' எனும் பெருங்களிப்பு மீதுர, நகர எல்லையில் திருநாவின் தனியரசரை எதிர்கொண்டு வணங்குகின்றனர். திருத்தொண்டின் வேந்தரும் அப்பெருமக்களை எதிர்வணங்கித் தொழுது, அவர்களுடன் இனிமையாய்க் கூடி மகிழ்ந்தவாறே நகருக்குள் எழுந்தருளிச் செல்கின்றார், 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 219)
வல்அமண் குண்டர்தம் மாயை கடந்து மறிகடலில்
கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால்
எல்லையில் தொண்டர் எயிற்புறம் சென்றெதிர் கொண்டபோது
சொல்லின் அரசர் வணங்கித் தொழு(து)உரை செய்தணைவார்

(4)
'பாதகச் சமணர்களுடன் பலகாலும் தொடக்குற்றுப் பின்னர் அதிகைப் பரம்பொருளின் திருவருளால் அப்பிணியினின்றும் நீங்கி உய்ந்த அடியவனுக்கு, இத்தொண்டர்க்கெல்லாம் தொண்டராகும் பெரும்பேறு சித்திக்கப் பெறுமோ?' என்று உளத்துள் நினைந்துருகியவாறே திருவீதிக்குள் மேலும் முன்னேறிச் செல்கின்றார் சுவாமிகள்,  
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 220)
பற்றொன்றிலா வரும் பாதகர் ஆகும் அமணர்தம்பால்
உற்ற பிணியொழிந்(து) உய்யப் போந்தேன் பெறலாவ(து) ஒன்றே
புற்றிடம் கொண்டான்தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமென்(று)
அற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள்ளணைந்தார்
-
(இச்சமயத்தில் நம் அப்பர் சுவாமிகள் அருளிய திருவாரூர் தேவாரம் - திருப்பாடல் 1)
குலம்பலம்பா வரு குண்டர் முன்னே நமக்குண்டு கொலோ
அலம்பலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்
சிலம்பலம்பா வரு சேவடியான் (தி)ருமூலட்டானம்
புலம்பலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே

(இறுதிக் குறிப்பு):
பின்னாளில் திருவாரூருக்கு வருகை புரியும் நம் சுந்தரனாருக்கும், அப்பர் சுவாமிகளுக்குத் தோன்றிய இதே உணர்வு தோன்றுவது, நினைவு கூர்ந்து மகிழத்தக்கவொரு ஒற்றுமை. தம்பிரான் தோழர் தேவாசிரிய மண்டபத்தைக் கடந்து செல்லுகையில், அங்கு வீற்றிருக்கும் அடியவர்களை 'இவர்க்(கு)யான் அடியான்ஆகப் பண்ணு நாள் எந்நாளோ?' என்று உளத்துள் தொழுதவாறே செல்லும் நிகழ்வினைப் பின்வரும் திருப்பாடலில் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்து போற்றுகின்றார், 
-
(பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 355)
கண்ணுதல் கோயில் தேவாசிரியனாம் காவணத்துள்
விண்ணவரொழிய மண்மேல் மிக்க சீரடியார் கூடி
எண்ணிலார் இருந்த போதில் இவர்க்(கு)யான் அடியான்ஆகப்
பண்ணு நாள் எந்நாளென்று பரமர்தாள் பரவிச் சென்றார்

No comments:

Post a Comment