திருநாவுக்கரசர் (திலகவதி அம்மையாரை வணங்கித் திருநீறு பெறுதல்)

சிவபெருமானின் திருவருளால் சமணப் பள்ளியிலிருந்த மருள்நீக்கியாரைச் சூலையாம் வெப்புநோய் பற்றுகின்றது. தாங்கொணாத வலியால் துடிக்கின்றார், செய்வதறியாது திகைத்துப் பதறுகின்றார். சமண மந்திரங்கள் ஒருசிறிதும் பலனளிக்கவில்லை. 'இனி சைவமாம் செந்நெறி சார்ந்தொழுகும் தமக்கையாரின் திருவடிகளைச் சேர்ந்து இத்துயரினின்று உய்வு பெறுவேன்' என்றெண்ணி, திருவதிகை நோக்கி இரவோடு இரவாக பயணித்து அம்மையாரின் திருமடத்தினைச் சென்றடைகின்றார். 

(1)
திருமேனி நிலத்தில் பொருந்த, அம்மையாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, 'நம்குலம் செய்த மாதவத்தின் பயனெனத் தோன்றிய அம்மையே, இனிச் சற்றும் தாமதியாது அடியேன் உற்ற இந்நோயினின்றும் உய்வு பெறும் மார்க்கத்தினை உரைத்து அருள் புரிவீர்' என்று விண்ணப்பிக்கின்றார். 

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 63)
வந்தணைந்து திலகவதியார் அடி மேலுற வணங்கி
நந்தமது குலம்செய்த நற்றவத்தின் பயன்அனையீர்
இந்தஉடல் கொடும்சூலைக் கிடைந்தடைந்தேன் இனிமயங்கா(து)
உய்ந்து கரையேறு நெறி உரைத்தருளும் எனஉரைத்து
(2)
சிவஞானச் சுடரான அம்மையார் தன் பாதங்களில் வீழ்ந்திருக்கும் இளைய சகோதரரை கருணையோடு நோக்குகின்றார். தனை அடிமை கொண்டருளும் திருவதிகைப் பரம்பொருளின் திருவருளை நினைந்து தொழுது, 'பரசமயக் குழியில் வீழ்ந்து பெரும் துயர் அடைந்துள்ளீர், இனி எழுவீர்' என்று அருளிச் செய்கின்றார், 

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 64)
தாளிணைமேல் விழுந்த அரும்தம்பியார் தமைநோக்கி
ஆளுடைய தம்பெருமான் அருள்நினைந்து கைதொழுது
கோளில் பரசமய நெறிக்குழியில் விழுந்தறியாது
மூளும் அரும்துயர் உழந்தீர் எழுந்திரீர் எனமொழிந்தார்
(3)
மருள்நீக்கியார் வலியால் நடுங்கியவாறே ஒருவாறு எழுந்து தொழுகின்றார். திருத்தொண்டின் திறத்தால் செம்மையுற்றிருந்த அம்மையார், 'நம் தலைவரான திருவதிகை முதல்வரின் திருவருள் கூடவிருக்கும் தருணம் இதுவே. தன் திருவடிகளைச் சரணமெனப் பற்றுவோரின் பிறவிப்பிணி போக்கியருளும் அப்பெருமானுக்கு இனி அடிமைத்திறம் பூண்டு பணிசெய்யக் கடவீர்' என்றருளிச் செய்கின்றார், 

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 65)
மற்றவ்வுரை கேட்டலுமே மருள்நீக்கியார் தாமும்
உற்றபிணி உடல்நடுங்கி எழுந்துதொழ; உயர்தவத்தோர்
கற்றை வேணியர் அருளே காணுமிது; கழலடைந்தோர்
பற்றறுப்பார் தமைப்பணிந்து பணிசெய்வீர் எனப்பணித்தார்

(4)
அம்மையாரின் கட்டளையை சுவாமிகள் சிரமேற்கொண்டு தொழுதவாறு நிற்கின்றார். அம்மையார் மீண்டுமொரு முறை திருவருளை நினைந்து, தம்பியாரை அதிகை ஆலயத்துள் இட்டுச் செல்ல முறைமைப்படுத்தும் முகமாக, சிவமூர்த்தியின் திருவெண்ணீற்றினை ஸ்ரீபஞ்சாட்சர மந்திரத்தை ஓதியவாறு அளிக்கின்றார், 

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 66)
என்றபொழு(து) அவர்அருளை எதிரேற்றுக் கொண்டிறைஞ்ச
நின்ற தபோதனியாரும் நின்மலன் பேரருள்நினைந்து
சென்று திருவீரட்டம் புகுவதற்குத் திருக்கயிலைக்
குன்றுடையார் திருநீற்றை அஞ்செழுத்தோதிக் கொடுத்தார்

(5)
சுவாமிகள் 'பெருவாழ்வு பெற்றேன்' என்று வணங்கி, அம்மையாரிடமிருந்து அத்தூய வெண்ணீற்றினைப் பெற்றுக் கொள்கின்றார். தன் திருமேனி முழுவதும் அதனை ஆர்வத்துடன் தரித்துக் கொண்டு, தனை உய்விக்க அதிகை ஆலயம் நோக்கி முன்செல்லும் அம்மையாரைப் பின்தொடர்ந்து செல்கின்றார். 

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 67)
திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப்
பெருவாழ்வு வந்ததெனப் பெருந்தகையார் பணிந்தேற்றங்(கு)
உருவார அணிந்து தமக்(கு) உற்றவிடத்(து) உய்யுநெறி
தருவாராய்த் தம்முன்பு வந்தார்பின் தாம்வந்தார்

No comments:

Post a Comment