திருநாவுக்கரசர் (மாண்ட பாலகன் மீண்டெழுந்த அற்புத நிகழ்வு):

தம் இல்லத்திற்கு எழுந்தருளி வந்த நாவுக்கரசு சுவாமிகளிடம் அப்பூதியார் அமுது செய்யுமாறு விண்ணப்பிக்க, சுவாமிகளும் அதற்கிசைகின்றார். ஆளுடைய அரசுகள் அவர்தம் திருமாளிகையுள் சிவயோகத்தில் வீற்றிருக்க, அப்பூதியாரின் திருத்துணைவியார் பெரும் ஆர்வத்துடன் வகை வகையான திருவமுதினை விரைவுடன் அமைக்கின்றார்.

(1)
தோட்டத்திற்கு இலை பறிக்கச் செல்லும் அப்பூதியாரின் குமாரனை விதிவசத்தால் அரவம்தீண்டி விடுகின்றது. அப்பாலகனோ அதனை ஒருசிறிதும் பொருட்படுத்தாமல், விரைந்து சென்று சுவாமிகளுக்கான இலையினைத் தாயிடம் சேர்ப்பித்து மறுகணமே தன் இன்னுயிரையும் துறக்கின்றான். இது கண்ட அப்பூதியார் 'ஆ கேட்டோம், இதனை அறிந்தால் நம் குருநாதர் அமுது செய்ய இசையார்' என்று பதறியவாறு அச்சடலத்தினை மறைக்கின்றனர். 

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 206)
தீயவிடம் தலைக்கொள்ளத் தெருமந்து செழும்குருத்தைத்
தாயர் கரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல்நாகம்
மேயபடி உரைசெய்யான்; விழக்கண்டு கெட்டொழிந்தேம்
தூயவர் இங்(கு) அமுதுசெயத் தொடங்கார் என்றது ஒளித்தார்

(2)
பின்னர் அப்பூதியார் தன் உணர்வுகளை முழுவதுமாய் மறைத்துக் கொண்டு சுவாமிகளைத் திருவமுது செய்தருள விண்ணப்பிக்க, சுவாமிகளோ திருவருள் குறிப்பினால் அவர்தம் உள்ளத் தடுமாற்றத்தினை அறியப் பெற்று அத்துன்பத்தினைப் போக்க விழைகின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 207)
தம்புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி
எம்பெருமான் அமுதுசெய வேண்டுமென வந்திறைஞ்ச
உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம்
நம்பர் திருவருளாலே அறிந்தருளி நவைதீர்ப்பார்

(3)
'புதல்வன் மரணத்தையும் மறைத்து அடியவர்க்கு அமுது செய்விக்க விழைகின்றனரே' என்று சுவாமிகள் அவர்கள் மீது அளவிறந்த கருணை கொண்டவராய், அருகிலுள்ள சிவாலயத்திற்கு முன்பாக அப்பாலகனின் சடலத்தினைக் கொணர்விக்கச் செய்கின்றார். பின்னர் 'ஒன்றுகொலாம்' எனும் திருப்பதிகமொன்றினை சுவாமிகள் அமைத்துப் பாட, முக்கண் முதல்வரின் திருவருளால் மாண்ட குமாரன் உயிர்பெற்று எழுகின்றான், 

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 208)
அன்றவர்கள் மறைத்ததனுக்(கு) அளவிறந்த கருணையராய்க்
கொன்றைநறும் சடையார்தம் கோயிலின்முன் கொணர்வித்தே
ஒன்றுகொலாம் எனப்பதிகம் எடுத்(து) உடையான் சீர்பாடப்
பின்றைவிடம் போய்நீங்கிப் பிள்ளை உணர்ந்தெழுந்(து) இருந்தான்

(4)
அருமைச் செல்வன் உயிர் பெற்றதற்கு ஒருபுறம் மகிழ்ந்தாலும், 'நம் குருநாதரான சுவாமிகள் இன்னமும் அமுது செய்யாத நிலை உருவாகிற்றே' என்று அப்பூதியார் மிகத் தளர்வெய்தி, சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகின்றார். இந்நிலை அறியும் சுவாமிகளும் அவர்தம் இல்லத்திற்கு விரைந்து எழுந்தருளிச் சென்று அனைவருடனும் அமுது செய்து மகிழ்கின்றார். சில காலம் அப்பதியிலேயே அப்பூதியாருடன் எழுந்தருளி இருக்கின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 209)
அருந்தனயன் உயிர்பெற்ற அதுகண்டும் அமுதுசெயா(து)
இருந்ததற்குத் தளர்வெய்தி இடர்உழந்தார் துயர்நீங்க
வருந்தும்அவர் மனைப்புகுந்து வாகீசத் திருமுனிவர்
விருந்தமுது செய்தருளி விருப்பினுடன் மேவுநாள்

(5)
பின்னர் அப்பூதியாரும் உடன்வர, சுவாமிகள் திருப்பழனத் தலத்திற்கு மீண்டுமொரு முறை யாத்திரை மேற்கொண்டு, 'சொல்மாலை பயில்கின்ற குயிலினங்காள்' எனும் திருப்பதிகத்தினால் திருப்பழனப் பரம்பொருளைப் போற்றி செய்கின்றார். இதன் இறுதித் திருப்பாடலில், அப்பூதியாரின் சிவவேள்வித் திருத்தொண்டினை 'அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி' என்று சிறப்பித்துப் பாடுகின்றார்,  

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 210)
திங்களூர் தனில்நின்றும் திருமறையோர் பின்செல்லப்
பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதிபுகுந்து
தங்குபெரும் காதலொடும் தம்பெருமான் கழல்சார்ந்து
பொங்கிய அன்பொடு வணங்கி முன்னின்று போற்றிசைப்பார்

No comments:

Post a Comment