திருநாவுக்கரசர் (சமணர்கள் மத யானையைக் கொல்ல ஏவுதல்)

நாவுக்கரசு சுவாமிகள் சமணம் துறந்து சைவம் பேணிய நிகழ்வினைத் தொடர்ந்து, கொடிய சமணர்களும் பல்லவ மன்னனும் பல்வேறு விதங்களில் சுவாமிகளை மாய்த்து விட முனைகின்றனர். நீற்றறையில் அடைத்தல் மற்றும் நஞ்சூட்டுதல் எனும் முதலிரு முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவ, மற்றொரு முயற்சியாக சுவாமிகளை மதயானையைக் கொண்டு இடறச் செய்ய முயல்கின்றனர். 

கொடிய மதம் கொண்டிருந்த அவ்வேழமானது வழியெங்கும் பெரும் சேதத்தை விளைவித்தவாறும், இடி முழக்கமென பெருவொலி எழுப்பியவாறும், கூற்றுவனைப் போன்று சுவாமிகளை நிறுத்தியிருக்கும் நிலப் பரப்பிற்கு விரைந்தோடி வருகின்றது. சுவாமிகள் ஆனையுரி போர்த்தருளும் முக்கண் முதல்வரின் திருவடிகளையே நினைந்தவாறு நின்றிருக்கின்றார்.

(1)
எவரொருவரும் அஞ்சிப் பதறியோடும் தன்மையில் அம்மத யானை வெகுண்டு எதிரில் வர, சுவாமிகள் ஒருசிறிதும் சலனமின்றி 'அஞ்சுவது யாதொன்றுமில்லை' எனும் அற்புதப் பாமாலையொன்றினை மகிழ்வுடன் பாடுகின்றார். 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 115)
அண்ணல் அருந்தவ வேந்தர் ஆனைதம் மேல்வரக் கண்டு
விண்ணவர் தம் பெருமானை விடைஉகந்தேறும் பிரானைச்
சுண்ணவெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப்பதிகத்தை
மண்ணுலகுய்ய எடுத்து மகிழ்வுடனே பாடுகின்றார்

(2)
'பவள வண்ணத் திருமேனியில் துலங்கும் வெண்மையான திருநீறு, திருமுடியில் பிறைச்சந்திரன்; திருஇடையில் புலித்தோல்; ஆரோகணிக்கவொரு வன்மையான காளை; திருமார்பில் விரவியோடும் பாம்புகள்; கெடில நதி இவைகளுடன் எழுந்தருளி இருக்கும் திருவதிகைப் பரம்பொருளின் திருவடிக்கு ஆட்பட்ட அடியவர்கள் நாம். ஆதலின் எதன் பொருட்டும் நாங்கள் அஞ்சுவதும் இல்லை, எங்களை அச்சமூட்டவல்ல யாதொன்றும் இனி தோன்றப் போவதுமில்லை' என்று உறுதிபட முழங்குகின்றார் சுவாமிகள், 

(திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 1)
சுண்ணவெண் சந்தனச் சாந்தும்; சுடர்த்திங்கள் சூளாமணியும்
வண்ண உரிவை உடையும்; வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண் முரணேறும்; அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும்; உடையார் ஓருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை!

(3)
வேத முதல்வரான சிவபெருமானின் திருவடிகளையே சரணமெனப் பற்றி, மெய்யன்பையே ஒரு கொள்கையாகக் கொண்டிருந்த நாவுக்கரசு சுவாமிகளை அம்மத வேழம் வலமாய் வந்து, எத்திசையுளோரும்  கண்டு வியக்குமாறு நிலத்தில் வீழ்ந்து வணங்குகின்றது,

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 117)
தண்டமிழ் மாலைகள் பாடித் தம்பெருமான் சரணாகக்
கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத்
தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்தெதிர் தாழ்ந்து நிலத்தில்
எண்திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம்

(4)
'ஆளுடைய அரசுகள்' என்று போற்றப் பெறும் நம் சுவாமிகளை அவ்வேழம் வணங்கி விலக, மீண்டும் அதனைச் சுவாமிகளின் மீது ஏவ முயன்ற காவலர்களையும்; உடனிருந்த சமணர்களையும் அம்மத யானை கொன்று குவிக்கத் துவங்குகின்றது,

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 118)
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ்வேழம் பெயரத்
தூண்டிய மேன்மறப் பாகர் தொடக்கி அடர்த்துத் திரித்து
மீண்டும் அதனை அவர்மேல் மிறைசெய்து காட்டிட வீசி
ஈண்டவர் தங்களையே கொன்(று) அமணர்மேல் ஓடிற்(று) எதிர்ந்தே

No comments:

Post a Comment