திருநாவுக்கரசர் (கனவில் அருள் பெற்ற திருத்தலங்கள்):

அப்பர் சுவாமிகள் திருமறைக்காட்டில் (ஞானசம்பந்த மூர்த்தியுடன்) எழுந்தருளியிருந்த சமயத்தில், நள்ளிரவு வேளையில் இறைவர் சுவாமிகளின் கனவில் தோன்றி 'நாம் வாய்மூரில் இருப்போம், தொடர்ந்து வருவாய்' என்றருள் புரிந்த நிகழ்வினைப் பெரிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார் (திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 276).  

அடிகளும் இந்நிகழ்விற்கென ஒரு திருப்பதிகத்தையே அருளிச் செய்துள்ளார்,

(திருவாய்மூர் - 'எங்கே என்னை' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 2)
மன்னு மாமறைக் காட்டு மணாளனார்
உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத்
தன்னை வாய்மூர்த் தலைவனாமா சொல்லி
என்னை வாவென்று போனார் அதென்கொலோ

இனி இப்பதிவில் நம் சுவாமிகள் கனவில் அருள் பெற்றுள்ள மேலும் 5 திருத்தலங்களை, அடிகளின் திருப்பாடல்கள் வாயிலாகவே சிந்தித்து மகிழ்வோம், 

(1)
பின்வரும் திருவொற்றியூர் திருப்பாடலில், 'கண்டேன்நான் கனவகத்தில், கண்டேற்கு எந்தன் கடும்பிணியும் சுடுந்தொழிலும் கைவிட்டவே' என்று பதிவு செய்கின்றார்,

(திருவொற்றியூர் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 1)
வண்டோங்கு செங்கமலம் கழுநீர் மல்கும்
    மதமத்தம் சேர் சடைமேல் மதியம் சூடித்
திண்தோள்கள் ஆயிரமும் வீசி நின்று
    திசைசேர நடமாடிச் சிவலோகனார்
உண்டார் நஞ்சுலகுக்கோர் உறுதி வேண்டி
    ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார்
கண்டேன்நான் கனவகத்தில் கண்டேற்கு எந்தன் 
    கடும்பிணியும் சுடுந்தொழிலும் கைவிட்டவே

(2)
பின்வரும் நல்லூர் திருப்பாடலில், 'நல்லூர்உறை நம்பனை நானொருகால் துஞ்சிடைக் கண்டு கனவின் தலைத்தொழுதேற்கு' என்று குறிக்கின்றார்,

(திருநல்லூர் - 'அட்டுமின் இல்பலி' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 4)
செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்தனைய
நஞ்சணி கண்டன், நல்லூர்உறை நம்பனை நானொருகால்
துஞ்சிடைக் கண்டு கனவின் தலைத்தொழுதேற்கு, அவன்தான்
நெஞ்சிடை நின்றகலான் பலகாலமும் நின்றனனே 

(3)
பின்வரும் காஞ்சீபுரத் திருப்பாடலில், 'எம்மை இன்துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே' என்று போற்றுகின்றார்,

(திருக்கச்சி ஏகம்பம் - 'நம்பனை' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 9)
பொன்திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந்தண் மார்பர்
நன்றியில் புகுந்தென்உள்ள(ம்) மெள்ளவே நவில நின்று
குன்றியில் அடுத்த மேனிக் குவளையம் கண்டர் எம்மை
இன்துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே

(4)
சுவாமிகள் புகலூரில் அருளிச் செய்துள்ள பின்வரும் பொதுத் திருப்பதிகப் பாடலில், 'சிட்டனைத் திருஆலவாயில் கண்டேன், தேவனைக் கனவில்நான் கண்டவாறே' என்று சொக்கநாதப் பரம்பொருள் கனவில் தோன்றியருளிய நிகழ்வினைக் குறிக்கின்றார். இத்திருப்பதிகத்தின் 11 திருப்பாடல்களில் , இந்த 6ஆம் திருப்பாடல் தவிர, வேறெந்த தலத்தையும் சுவாமிகள் குறிக்கவில்லை, இறைவரின் திருக்காட்சி மட்டுமே விவரிக்கப் பெற்றுள்ளது, 

('அண்டம் கடந்த' எனும் பொதுத் திருப்பதிகம் -- திருப்பாடல் 6)
பட்டமும் தோடுமோர் பாகம் கண்டேன்
    பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டி நின்று இலயங்கள் ஆடக் கண்டேன்
    குழைகாதில் பிறைசென்னி இலங்கக் கண்டேன்
கட்டங்கக் கொடிதிண்தோள் ஆடக் கண்டேன்
    கனமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருஆலவாயில் கண்டேன்
    தேவனைக் கனவில்நான் கண்டவாறே

(5)
பின்வரும் திருவதிகை திருப்பாடலில் 'கனவின்கண் திருவுருவம் தான் காட்டும்மே' என்று குறிக்கின்றார். இங்கு நம் சுவாமிகள் 'கண்டேன்' என்று நேரிடையாக குறிக்கவில்லை. ஆதலின் 'அடியவர்களின் கனவினில் இறைவர் தோன்றி அருள் புரியும் தன்மையினைக் குறிப்பதாகவும்' பொருள் கொள்ளலாம், அல்லது சுவாமிகளின் அனுபவ வாக்காகவும் கருதலாம், 

(திருவதிகை - 'சந்திரனை மாகங்கை' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 7)
குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை
    குறள்பூதம் முன்பாடத் தான் ஆடும்மே
கழலாடு திருவிரலால் கரணம் செய்து
    கனவின்கண் திருவுருவம் தான் காட்டும்மே
எழிலாரும் தோள்வீசி நடமாடும்மே
    ஈமப் புறங்காட்டில் ஏமம்தோறும்
அழலாடுமே, அட்ட மூர்த்தியாமே
    அவனாகில் அதிகை வீரட்டனாமே

No comments:

Post a Comment