திருநாவுக்கரசர் (திருப்பைஞ்ஞீலி இறைவரால் பசி நீங்கப் பெற்ற அற்புத நிகழ்வு):

நாவுக்கரசு சுவாமிகள் திருச்சிராப்பள்ளி; திருக்கற்குடி; திருப்பராய்த்துறை உள்ளிட்ட தென்கரைத் தலங்கள் பலவும் தரிசித்துப் போற்றியவாறே, காவிரியின் வடகரையிலுள்ள திருப்பைஞ்ஞீலியின் எல்லையை வந்தடைகின்றார். 

(1)
நெடுந்தூரம் பயணித்து வந்த தன்மையாலும்; வெம்மையினாலும் கடும் பசி மற்றும் தாகம் மேலிட, சுவாமிகளின் உடல் தளர்வுறுகின்றது ('அழிவாம் பசி வந்தணைந்திட' என்கின்றார் தெய்வச் சேக்கிழார்). இருப்பினும் உளம் தளராதவராய் ஆலயம் நோக்கி முன்னேறிச் செல்கின்றார். மெய்த்தொண்டர் பசித்திருக்க ஞீலிவன முதல்வர் பொறுப்பரோ! நாவரசரின் மெய்வருத்தம் போக்கிட இறைவர் திருவுளம் பற்றுகின்றார், 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 304)
வழிபோம் பொழுது மிகஇளைத்து வருத்தம் உறநீர் வேட்கையொடும்
அழிவாம் பசி வந்தணைந்திடவும் அதற்குச் சித்தம் அலையாதே
மொழிவேந்தரு(ம்) முன் எழுந்தருள முருகார் சோலைப் பைஞ்ஞீலி
விழியேந்திய நெற்றியினார் தம்தொண்டர் வருத்தம் மீட்பாராய்!

(2)
சுவாமிகள் வரும் மார்க்கத்தில் புதியதோர் சோலை மற்றும் குளமொன்றினைத் தோற்றுவித்து, திருநீறு துலங்கும் அந்தணரின் வடிவு தாங்கி, பொதிசோறுடன் அடியவராம் வாக்கின் மன்னவரை எதிர்நோக்கி இருக்கின்றார், 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 305)
காவும் குளமும் முன்சமைத்துக் காட்டி வழிபோம் கருத்தினால்
மேவும் திருநீற்(று) அந்தணராய் விரும்பும் பொதிசோறும் கொண்டு
நாவின் தனி மன்னவர்க்கெதிரே நண்ணி இருந்தார் விண்ணின்மேல்
தாவும் புள்ளும் மண்கிழிக்கும் தனிஏனமும் காண்பரியவர் தாம்!!!

(3)
ஆளுடைய அரசுகள் அருகில் எழுந்தருளி வரவும், வேதியர் வடிவிலிருந்த விடையவர் 'மிகவும் களைப்புற்று வருந்தி இருக்கின்றீர். நம்மிடமுள்ள இப்பொதிசோற்றினை உண்டு இங்குள்ள குளத்து நீரையும் பருகிச் சற்று இளைப்பாறிச் செல்வீர்' என்று தாயினும் சாலப் பரிவுடன் கூறி அருள் புரிகின்றார்,
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 306)
அங்கண் இருந்த மறையவர்பால் ஆண்ட அரசும் எழுந்தருள
வெங்கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழிவந்(து) இளைத்திருந்தீர்
இங்கென் பாலே பொதிசோ(று) உண்டிதனை உண்டு தண்ணீர்இப்
பொங்கு குளத்தில் குடித்(து) இளைப்புப் போக்கிப் போவீர் எனப் புகன்றார்!
-
'சுவாமிகள் ஞீலிவனப் பரம்பொருளின் திருவருள் இது போலும்' என்றெண்ணி, மறுமொழி கூறாமல் சிவப்பிரசாதமான அச்சோற்றினை உண்டு, குளத்து நீரையும் பருகி மெய் வருத்தம் தீரப் பெறுகின்றார். பின்னர் மறையவரான வேத முதல்வர் சுவாமிகளிடம் பைஞ்ஞீலி செல்வதைக் கேட்டறிந்து, தாமும் அவ்விடமே செல்வதாகக் கூறி உடன் செல்கின்றார். 

(4)
ஆலயத்தை நெருங்கும் தருணத்தில் இறைவர் திருவுருவம் மறைத்தருள, சுவாமிகள் சற்றுத் திகைப்புற்றுப் பின் உடன் வந்தது ஞீலிவன இறைவரே என்றுணரப் பெறுகின்றார். அகமெலாம் குழைந்துருக 'அடியவனையும் ஒரு பொருளெனக் கொண்டு பெருங்கருணை புரிந்தனையே' என்று கண்ணருவி பொழிந்து அவ்விடத்திலேயே வீழ்ந்து வணங்கி எழுகின்றார், 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 309)
கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட
வேடம் அவர்முன் மறைத்தலுமே மெய்ம்மைத் தவத்து மேலவர்தாம்
ஆடல் உகந்தார் அடியேனைப் பொருளா அளித்த கருணை எனப்
பாடல் புரிந்து விழுந்தெழுந்து கண்ணீர் மாரி பயில்வித்தார்

(5)
ஆலயத்துள் புகுந்து கருவறையில் விளக்கமாய் எழுந்தருளி இருக்கும் ஞீலிவனப் பரஞ்சுடரைப் பாமாலையால் போற்றி செய்கின்றார், 
-
(திருப்பைஞ்ஞீலி தேவாரம் - திருப்பாடல் 1)
உடையர் கோவணம் ஒன்றும் குறைவிலர்
படைகொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்
சடையில் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே!!

No comments:

Post a Comment