திருநாவுக்கரசர் (திருவையாறில் கண்ட கயிலைக் காட்சி):

அப்பர் சுவாமிகள் கயிலை நாதரின் ஆணையினை ஏற்று, கயிலையில் இறைவர் தோற்றுவித்திருந்த குளத்தில் மூழ்கித் திருவருளால் திருவையாற்றுத் திருக்குளத்தினின்றும் வெளிப்பட்டு ஐயாறு ஆலய வாயிலை வந்திடைகின்றார். 

(1)
அக்கணமே ஐயாறு திருக்கோயில் மறைந்து, திசைகள் யாவிலும் திருக்கயிலைக் காட்சி நிறைந்து தோன்றுகின்றது. அங்கு அஷ்டலக்ஷ்மி நாயகரான ஸ்ரீமன் நாராயண மூர்த்தி; நான்முகக் கடவுள்; தேவேந்திரன் ஆகியோர் கயிலைப் பரம்பொருளான சிவமூர்த்தியைப் போற்றி செய்து வணங்கியிருக்கவும், ரிக்; யஜுர்; சாம; அதர்வணமாகிய நான்மறைகள் தனித்தனியே முழங்கியிருக்கவும் காண்கின்றார். 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 375)
காணும் அப்பெரும் கோயிலும் கயிலைமால் வரையாய்ப்
பேணு மால்அயன் இந்திரன் முதற்பெரும் தேவர்
பூணும் அன்பொடு போற்றிசைத்தெழும் ஒலி பொங்கத்
தாணு மாமறை யாவையும் தனித்தனி முழங்க

மேலும் தேவர்; தானவர்; சித்தர்; விச்சாதாரர்; இயக்கர்; மாதவ முனிவர்கள் ஆகிய எண்ணிறந்தோர் இருமருங்கிலும் நிறைந்து விளங்கிப் போற்றியிருக்கவும், தேவ அரம்பையர்கள் நடமிடவும், முழவொலி முழங்கியிருக்கவும், கங்கை உள்ளிட்ட நதி தேவதைகள் யாவும் வணங்கியிருக்கவும், சிவகணத் தலைவர்கள் பணிந்திருக்கவும், பூத வேதாள கணங்கள் சிவவாத்தியங்களை முழக்கியவாறு போற்றியிருக்கவும், இடப வாகனம் நின்றிருக்கவும், திருநந்திதேவர் அங்குள்ளோரை முறைப்படுத்தியிருக்கவும் பெருவியப்புடன் காண்கின்றார்.  

(2)
இறுதியாய் அவ்வெள்ளி மாமலையின் மிக உயர்ந்ததோர் பீடத்தில், இறைவரின் இடபாகத்து உரிமையுடைய; மரகதக் கொடி போலும்; உலகீன்ற நம் உமையன்னை அருகில் வீற்றிருக்க, பவளமலை போல் எழுந்தருளி இருக்கும்; ஆதிமுதற்பொருளான கயிலை மன்னவரைத் தரிசிக்கப் பெறுகின்றார் (வாக்கின் தனிஅரசரான) நம் சுவாமிகள். 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 379)
வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும்
தெள்ளு பேரொளிப் பவள வெற்பென இடப்பாகம்
கொள்ளு மாமலையாளுடன் கூட வீற்றிருந்த
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்

(3)
அம்மையப்பரின் தரிசனமாகிய அப்பேரின்பக் கடலைத் தன் இருவிழிகளாலும் முகர்ந்து முகர்ந்து பருகித் திளைக்கின்றார். உச்சி கூப்பிய கையினராய் எதிர் வீழ்ந்து பணிகின்றார். அகம் குழைந்துருக; மெய்யுணர்வினால் உடல் விதிர்விதிர்க்க, அச்சிவானந்தப் பெருநிலையில் சுவாமிகள் ஆடுகின்றார்; பாடுகின்றார்; அழுகின்றார்; தொழுகின்றார். 'இதற்கு மேல் சுவாமிகளுக்கு அங்கு நிகழ்ந்தவற்றை யாரே விளக்க வல்லார்? என்று நெகிழ்கின்றார் தெய்வச் சேக்கிழார். 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 380)
கண்ட ஆனந்தக் கடலினைக் கண்களால் முகந்து
கொண்டு கைகுவித்(து) எதிர் விழுந்தெழுந்து மெய்குலைய
அண்டர் முன்பு நின்றாடினார் பாடினார் அழுதார்
தொண்டனார்க்(கு) அங்கு நிகழ்ந்தன யார்சொல வல்லார்

(4)
சுவாமிகள் இச்சமயத்தில் 'பொறையுடைய பூமிநீரானாய் போற்றி'; 'பாட்டான நல்ல தொடையாய் போற்றி' எனும் இரு போற்றித் திருத்தாண்டகங்களை அருளிச் செய்கின்றார் ('வேற்றாகி விண்ணாகி' திருத்தாண்டகத்தை சுவாமிகள் கயிலையிலேயே அருளிச் செய்து விட்டதாகத் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார்)

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 381)
முன்பு கண்டு கொண்(டு), அருளின்ஆர் அமுதுண்ண மூவா
அன்பு பெற்றவர்; அளவிலா ஆர்வம்முன் பொங்கப்
பொன் பிறங்கிய சடையரைப் போற்று தாண்டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார்; எல்லையில் தவத்தோர்
-
(இறுதிக் குறிப்பு: கயிலைக் காட்சி மறைந்த பின்னரே 'மாதர்பிறைக் கண்ணியானை' திருப்பதிகத்தை நம் சுவாமிகள் பாடியதாகவும் சேக்கிழார் பெருமான் குறிக்கின்றார்)

No comments:

Post a Comment