திருநாவுக்கரசர் (திருவீழிமிழலை தரிசன அனுபவம் - படிக்காசு பெற்று வறுமை போக்குதல்):

(1)
சோழ நாட்டின் காவிரித் தென்கரையில், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருவீழிமிழலை. தல யாத்திரையாக செல்லும் வழியில் ஞானசம்பந்த மூர்த்தியும், நாவுக்கரசு சுவாமிகளும் வீழிமிழலையைச் சென்றடைகின்றனர். அங்குள்ள சிவ வேதியர்களும், அடியவர் பெருமக்களும் சைவத்துறை சிறக்கத் தோன்றிய இருபெரும் குருநாதர்களை எதிர்கொண்டு வரவேற்றுப் பணிகின்றனர். 

(2)
சம்பந்தப் பெருமானாரும் உடன்வர, அப்பர் சுவாமிகள் ஆலயத்துள் புகுந்து, திருச்சன்னிதியை வலமாகச் சென்று வணங்கி, இறைவரின் திருமுன்பாக வீழ்ந்து பணிந்து எழுகின்றார், அதீத நெகிழ்ச்சியினால் அகம் குழைந்துருகி விம்முகின்றார்,

(திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 252)
சென்றுள் புகுந்து திருவீழிமிழலை அமர்ந்த செங்கனகக்
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து, திரு
முன்றில் வணங்கி முன்னெய்தி முக்கண் செக்கர்ச் சடைமவுலி
வென்றி விடையார் சேவடிக்கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார்

(3)
உச்சி கூப்பிய கையினராய், இறைவரின் பால் கொண்டுள்ள அன்பு மென்மேலும் பெருகிய வண்ணமிருக்க, கண்ணருவி பாய, 'திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே' எனும் கருத்தமைந்த திருப்பதிகத்தினால் வீழிமிழலைப் பரம்பொருளைப் போற்றி செய்கின்றார், 

(திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 253)
கைகள் குவித்துக் கழல்போற்றிக் கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியும் கண்ணருவி விரவப் பரவும் சொல்மாலை
செய்ய சடையார் தமைச்சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று 
உய்யு நெறித் தாண்டகம் மொழிந்தங்கு ஒழியாக் காதல் சிறந்தோங்க

(திருவீழிமிழலை - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 1)
போரானை ஈருரிவைப் போர்வையானைப்
    புலியதளே உடையாடை போற்றினானைப்
பாரானை மதியானைப் பகல்ஆனானைப்
    பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற
நீரானைக் காற்றானைத் தீயானானை
    நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்
தேரானைத், திருவீழிமிழலையானைச்
    சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

(4)
சில தினங்கள் அப்பதியிலேயே தனித்தனி திருமடங்களில் எழுந்தருளியிருந்து, வீழிமிழலை முதல்வரை முப்போதும் போற்றி வருகின்றனர். அச்சமயம் அப்பகுதி முழுவதிலும் மழையின்மையால் கடும் பஞ்சம் நிலவத் துவங்குகின்றது, அனைவரும் வறுமையினால் வாட்டமுறுகின்றனர். 

(5)
அன்றிரவு இரு சமயக் குரவர்களின் கனவிலும் வீழிமிழலை அண்ணலார் எழுந்தருளிச் சென்று 'இவ்வறுமையின் தீமை உங்களை அண்டாது எனினும் உம்மை வழிபடும் அடியவர்களின் பொருட்டு நாள்தோறும் பொற்காசு தருவோம்' என்றருளிச் செய்கின்றார்,  

(திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 257)
கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டமுறீர் எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று
கோலம் காண எழுந்தருளிக் குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார்

(6)
அன்று முதல் அருளாளர்கள் இருவரும், திருக்கோயிலின் இருவேறு பலி பீடங்களின் மீது இறைவர் அருளும் பொற்காசினைக் கொண்டு, தத்தமது திருமடங்களில் அன்பர்கள் அனைவருக்கும் உணவளித்து அருள் செய்கின்றனர்.

No comments:

Post a Comment