திருநாவுக்கரசர் (சூலை நீங்கப் பெற்று 'திருநாவுக்கரசு' எனும் திருநாமம் பெறுதல்):

சிவபெருமானின் திருவருளால் மருள்நீக்கியாருக்குச் சூலைநோய் வந்தெய்த, அதன் கடுமையைத் தாங்க இயலாதவராய்த் திருவதிகையிலுள்ள தமக்கையாரின் திருமடம் சென்று சேர்ந்து, அவர்தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் தன்னைக் காத்தருளுமாறு வேண்டுகின்றார். திலகவதிப் பிராட்டியார் திருவருளைத் தொழுது, இளைய சகோதரருக்குத் திருநீறு அளித்துப் பின்னர் திருவதிகைப் பெருங்கோயிலிலுக்கு அழைத்துச் செல்கின்றார்.   

(1)
சுவாமிகள் கோபுரத்தினை முதற்கண் தொழுது, வெளிப் பிரகாரத்தினை வலமாக வந்து பணிந்து, கொடிமரத்திற்கு அருகில் வீழ்ந்து வணங்குகின்றார். அச்சமயம் திருவருளால் வீரட்டாணேஸ்வர முதல்வரைப் பாமாலையால் போற்றி செய்யும் மெய்யுணர்வு தோன்றப் பெறுகின்றார்,

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 69)
திரைக்கெடில வீரட்டானத்(து) இருந்த செங்கனக
வரைச் சிலையார் பெருங்கோயில் தொழுதுவலம் கொண்டிறைஞ்சித்
தரைத் தலத்தின் மிசைவீழ்ந்து தம்பிரான் திருவருளால்
உரைத்தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வுபெற உணர்ந்துரைப்பார்

(2)
'கூற்றாயினவாறு' எனும் ஒப்புவமையற்ற தேவாரப் பனுவலை அருளிச் செய்து, 'ஐயனே, இச்சூலை வந்தெய்த அடியவன் புரிந்த கொடுமையை உள்ளவாறு அறியேன். இனி உன் திருவடிகளுக்கு அடிமைத் தொண்டு புரிவதையே உறுதியெனக் கொண்டு வாழ்வேன். ஒருக்காலும் பிழையேன்! பெருமானே, வயிற்றைப் புரட்டிப் போட்டு வாட்டும் இவ்வலியை இனியொருக் கணமும் தாங்க இயலாது துடிக்கின்றேனே, காத்தருள்வது நின் கடனன்றோ' என்று முறையிட்டுக் கதறுகின்றார்,

(திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 1)
கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே!!!

(3)
வீரட்டானம் மேவும் தேவதேவரின் திருவருள் பரிபூரணமாய்க் கூடி வர, சுவாமிகள் அக்கணமே பெருவெப்பு நீங்கப் பெறுகின்றார். அப்பேரருட் செயல் கண்டு சுவாமிகளின் திருமேனியெங்கும் புளகமுறுகின்றது, கண்களினின்றும் அருவியென நீர் பொழிகின்றது. பெருமகிழ்ச்சியுற்றுச் செயலொன்றும் அறியாதவராய் நிலத்தின் மீது அங்குமிங்குமாய்ப் புரண்டு நெகிழ்கின்றார். 'இத்தனை ஆண்டு காலம் உன் திருவடிக்குப் பிழை புரிந்திருந்தும் இத்தகு பெருங்கருணையா?' என்று சிவானந்தப் பெருவெள்ளத்தில் முழுவதுமாய் மூழ்கித் திளைக்கின்றார்.   

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 72)
அங்கங்கள் அடங்க உரோமமெலாம் அடையப் புளகம்கண் முகிழ்த்தலரப்
பொங்கும்புனல் கண்கள் பொழிந்திழியப் புவிமீது விழுந்து புரண்டயர்வார்
இங்கென்செயல் உற்ற பிழைப்பதனால் ஏறாத பெருந்திடர் ஏறிடநின்
தங்கும் கருணைப்பெரு வெள்ளமிடத் தகுமோஎன இன்னன தாமொழிவார்

(4)
சொலற்கரிய தன்மையில் சுவாமிகள் போற்றிசைத்த பாமாலையால் திருவுள்ளம் பெரிதும் மகிழ்ந்தருளும் திருவதிகை முதல்வர் விண்ணொலியாய் 'இனி உன் நாமம் திருநாவுக்கரசு என்று ஏழுலகிலும் அன்புடன் அழைக்கப் பெற்று நிலை பெறுவதாகுக' என்று யாவரும் கேட்டு வியக்கும் தன்மையில் அருளிச் செய்கின்றார். 

(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 74)
மேவுற்ற இவ்வேலையில் நீடியசீர் வீரட்டம் அமர்ந்த பிரானருளால்
பாவுற்றலர் செந்தமிழின் சொல்வளப் பதிகத்தொடை பாடிய பான்மையினால்
நாவுக்கரசென்(று) உலகேழினும் நின் நன்னாமம் நயப்புற மன்னுகஎன்(று)
யாவர்க்கும் வியப்புற மஞ்சுறை வானிடையேஒரு வாய்மை எழுந்ததுவே

No comments:

Post a Comment