திருநாவுக்கரசர் (திருவண்ணாமலை தரிசன அனுபவமும், தல தரிசனப் பயன்களும்):

நாவுக்கரசு சுவாமிகள் தல யாத்திரையாகச் செல்லும் வழியில், பஞ்சபூதத் தலங்களுள் அக்கினி ஷேத்திரமாகப் போற்றப் பெறும் திருவண்ணாமலையைச் சென்றடைகின்றார். 

(1)
தொலைவிலிருந்தே மலையுருவில் எழுந்தருளியுள்ள அண்ணாமலைப் பரம்பொருளை உச்சி கூப்பிய கையினராய்த் தொழுகின்றார். பின்னர் ஆலயத்துள் சென்று திருச்சன்னிதியினை வலமாய் வந்து, அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலைப் பரஞ்சுடரின் திருமுன்பு வீழ்ந்து பணிகின்றார். அண்ணாமலையாரின் திருக்கோல தரிசன இன்பத்தில் மூழ்கித் திளைக்கின்றார். 'இப்பெருமானை இத்தன்மையில் தரிசித்துப் பணியும் சிவானுபவமானது சிவமுத்திப் பேற்றினும் மேலானதன்றோ' என்று வியந்து போற்றி செய்கின்றார். 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 312)
செங்கண் விடையார் திருவண்ணாமலையைத் தொழுது வலம்கொண்டு
துங்க வரையின் மிசையேறித் தொண்டர் தொழும்புக்(கு) எதிர்நிற்கும்
அங்கன் அரசைப் பணிந்தெழுந்து திளைத்துத் திருநாவுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார்
-
(குறிப்பு: சுவாமிகளுக்கு முன்னர் தில்லையிலும் இவ்வகையிலான அனுபவம் சித்திக்கப் பெற்று 'மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று போற்றியுள்ளது இவ்விடத்தில் நினைவு கூரத் தக்கது) 

(2)
இவ்வற்புத தரிசன சமயத்தில் அப்பர் சுவாமிகள் மலையுருவிலும் திருக்கருவறையிலும் இருவேறு திருவடிவங்களில் எழுந்தருளியுள்ள அண்ணாமலை ஆதியைக் கைதொழுவதால் விளையும் நற்பலன்களைப் பின்வரும் திருப்பதிகப் பாடல்களில் பட்டியலிடுகின்றார்,
-
(திருவண்ணாமலை தேவாரம் - திருப்பாடல் 1)
பட்டி ஏறுகந்தேறிப் பல இ(ல்)லம்
இட்டமாக இரந்துண்(டு) உழிதரும்
அட்ட மூர்த்தி அண்ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே!!
 -
(மற்ற 9 திருப்பாடல்களின் இறுதி வரிகள்)
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நற்றவத்தொடு ஞானத்திருப்பரே

அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நல்லவாயின நம்மை அடையுமே

ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போகும் நம் மேலை வினைகளே

ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப்போம் நம(து) உள்ள வினைகளே

அட்ட மூர்த்தி அண்ணாமலை மேவிய
நட்டமாடியை நண்ண நன்காகுமே

ஆணிப் பொன்அன அண்ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே

அண்டத்தோங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டு போகு(ம்) நம் மேலை வினைகளே

..அண்ணாமலை
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்
கந்த மாமலர் சூடும் கருத்தனே

...அண்ணாமலை கைதொழப்
பறையும் நாம்செய்த பாவங்களானவே

No comments:

Post a Comment