திருநாவுக்கரசர் (சமணர்கள் மறைத்த சிவாலயத்தை வெளிப்படச் செய்த அற்புத நிகழ்வு):

(1)
நாவுக்கரசு சுவாமிகள் தலயாத்திரையாகச் செல்லும் வழியில் தஞ்சை மாவட்டத்திலுள்ள பழையாறையைச் சென்றடைகின்றார். நெறியற்ற சமணர்கள் அங்குள்ள 'வடதளி' எனும் சிவாலய விமானத்தின் மீது பொய்மையான சமண விமானமொன்றினை எழுப்பியதோடு, மூலக் கருவறையில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத் திருமேனியையும் மறைத்திருந்த நிகழ்வினைக் கேள்வியுற்று உளம் வெதும்புகின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 294)
செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல்பொழுதின்
மையல் அமணர் மறைத்த வடதளியில் மன்னும் சிவனாரைக்
கைகள் கூப்பித் தொழுதருளக் கண்டவாற்றால் அமணர்கள்தம்
பொய்கொள் விமானம் எனக்கேட்டுப் பொறாத உள்ளம் மிகப்புழுங்கி

(2)
முக்கண் முதல்வரின் திருவருளை நினைந்து 'எந்தையே! உனது திருமேனி வெளிப்படவும், இக்கொடுஞ்செயல் புரிந்த சமணர்களின் திறம் அழிந்துபடவும் அருள் புரிவாய் ஐயனே!' என்று விண்ணப்பித்து, 'அது வரையிலும் அடியேன் இவ்விடத்தை விட்டு அகலாது உண்ணா நோன்பினையும் மேற்கொள்வேன்' என்று உறுதி கொள்கின்றார். வடதளி மேவும் அண்ணலார் அடிகளின் கருத்தினை முற்றுவிக்கத் திருவுள்ளம் கொண்டு அப்பகுதி வேந்தனின் கனவில் எழுந்தருளிச் செல்கின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 296)
வண்ணம் கண்டு நான்உம்மை வணங்கிஅன்றிப் போகேன்என்(று)
எண்ணமுடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே
அண்ணலாரும் அதுவுணர்ந்தங்(கு) அரசு தம்மைப் பணிவதற்குத்
திண்ணமாக மன்னனுக்குக் கனவில் அருளிச் செய்கின்றார் 

(3)
'அறிவிலிகளாகிய சமணர்கள் மறைக்க நாம் மறைந்திருந்தோம்! நாவரசன் நமை வணங்கும் பொருட்டு நம் திருமேனியை வெளிக்கொணர்ந்து, நன்னெறி ஒழுகா சமணர்களைத் தண்டித்து முற்றிலுமாய் அவ்விடம் விட்டு அகற்றுவாய்' என்று மன்னவனுக்குக் கட்டளையிட்டு மறைகின்றார். உடன் கண்விழிக்கும் அரசன் திருவுளக் குறிப்பை உணர்ந்து, உச்சிக் கூப்பிய கையினனாய்ப் பழையாறைப் பரம்பொருளை இறைஞ்சுகின்றான், 

(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 297)
அறிவில் அமணர் நமைமறைப்ப இருந்தோம் என்றங்(கு) அடையாளக்
குறிகள் அறியச் செய்தருளி நம்மை அரசு கும்பிடுவான்
நெறியில் அமணர் தமையழித்து நீக்கிப் போக்கென்றருள் புரியச்
செறிவில் அறிவுற்(று) எழுந்தவனும் செங்கை தலைமேல் குவித்திறைஞ்சி

(4)
பின்னர் மந்திரிகளுக்கு இறைக் கட்டளையைத் தெரிவித்து, அனைவரும் உடன்வர வடதளி ஆலயம் நோக்கி விரைகின்றான். இறைவர் அருளியிருந்த குறிப்பின் வழிநின்று, ஆலய மறைப்பினை நீக்கிச் சிவலிங்கத் திருமேனியை வெளிப்படச் செய்கின்றான். அச்சமணப் பள்ளியிலிருந்த ஆயிரம் சமணர்களையும் தண்டித்துத் தூரறுக்கின்றான். பொய்மையான சமண விமானத்தையும் இடித்தொழித்து, மதியும் அரவும் சூடும் பழையாறை முதல்வருக்குப் புதியதொரு விமானமொன்றைப் புதுக்குகின்றான். 

சிவாகம முறைப்படி நித்ய நைமித்திக பூசனைகள் சிறப்புற நடந்தேற நிபந்தங்களை அமைத்துப் பின்னர் நாவுக்கரசு சுவாமிகளின் திருவடி தொழுது நடந்தேறிய நிகழ்வுகளைத் தெரிவிக்கின்றான். 

(5)
திருநாவின் தனியரசர் அகமிகக் குளிர்ந்து புரவலனுக்கு ஆசி கூறி, ஆறாக் காதலுடன் வடதளி ஆலயத்துள் செல்கின்றார். திருக்கருவறையில் விளக்கமாய் எழுந்தருளியுள்ள பழையாறைப் பரஞ்சுடரைத் தொழுதிறைஞ்சிப் பாமாலையால் போற்றி செய்கின்றார், 

(பழையாறை வடதளி தேவாரம் - திருப்பாடல் 1)
தலையெலாம் பறிக்கும் சமண் கையருள்
நிலையினான் மறைத்தால் மறைக்கொண்ணுமே
அலையினார் பொழிலாறை வடதளி
நிலையினான் அடியே நினைந்து உய்மினே!!


No comments:

Post a Comment