திருநாவுக்கரசர் (காளத்தியில் கண்ணப்ப நாயனாரின் அற்புத தரிசனம்):

நாவுக்கரசு சுவாமிகள் தலயாத்திரையாகச் செல்லும் வழியில், ஆந்திர மாநிலத்திலுள்ள திருக்காளத்தியை வந்தடைகின்றார் (தற்கால வழக்கில் ஸ்ரீகாளஹஸ்தி). பஞ்ச பூத ஷேத்திரங்களுள் வாயுவின் அம்சமாய் போற்றப் பெறும் இத்தலத்தின் மலைக்கோயிலில் முக்கண் முதல்வர் 'காளத்தீஸ்வரர்; காளத்தியப்பர்' எனும் திருநாமங்களிலும், உமையன்னை ஞானப் பிரசன்னாம்பிகையாகவும் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றனர்.

கருவறைச் சன்னிதியின் உட்புறத்தில், இறைவரின் திருமுன்னர், சிவலிங்கத் திருமேனியின் வலதுபுறத்தில், சிவபிரானிடத்து கொள்ளும் மெய்யன்பு ஒரு திருவடிவம் தாங்கி வந்தது போல், கூப்பிய கரங்களுடன் அற்புதமான நின்ற திருக்கோலத்தில் கண்ணப்ப நாயனார் எழுந்தருளி இருக்கின்றார். 

காண்பதற்கரிய தரிசனம் இது. பொதுவில் கருவறைச் சன்னிதிக்கு வெளியிலிருந்தே தரிசனம் அனுமதிக்கப் படுவதால், அங்கிருந்து காளத்தி இறைவரை மட்டுமே தரிசிக்க இயலும். எனினும் அபிஷேகம்; சிறப்பு அர்ச்சனைகள் அல்லது விசேட நாட்கள் அல்லாத காலங்களில் உட்சென்று தரிசிக்க அனுமதி உண்டு. அன்பர்கள் எவ்விதமேனும் பிரயத்தனம் மேற்கொண்டு கண்ணப்ப நாயனாரைத் தரிசித்து வருதல் வேண்டும்.

(1)
இனி இவ்விசேட தரிசனம் தொடர்பாகத் திருஞானசம்பந்தர் வரலாற்றில் இடம்பெறும் அற்புதக் குறிப்பொன்றினை முதற்கண் சிந்தித்துப் பின்னர் அப்பர் அடிகளின் வரலாற்றிற்குள் செல்வோம், 
-
பின்வரும் திருப்பாடலில் 'காளத்தி இறைவரின் தரிசனப் பயனாக ஞானசம்பந்த மூர்த்திக்குக் கண்ணப்ப நாயனாரின் தரிசனப் பேறு கிட்டியது' ('கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்') என்று தெய்வச் சேக்கிழார் குறிக்கின்றார், 

[பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 1022)
...
சூழ்ந்துவலம் கொண்(டு) இறைவர் திருமுன்பெய்தித்
தொழுதுதலை மேற்கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்தெழுவார்; கும்பிட்ட பயன் காண்பார் போல்
மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்

எத்தகைய வரிகள்! சிவபுண்ணியங்களின் உறைவிடமாகவும், சைவ சமயத்தின் தனித்தலைமைக் குருமூர்த்தியாகவும் விளங்கும் நம் சம்பந்தப் பெருமானுக்கே 'காளத்தி இறைவரின் தரிசனப் பயனால் தான் கண்ணப்பரின் தரிசனப் பேறு கிட்டுகின்றதாம்'. எனில் மேருமலையினும் மேம்பட்ட கண்ணப்ப நாயனாரின் மெய்யன்பை எங்கனம் போற்றுவது? 

(2)
இனி அப்பர் சுவாமிகளின் வரலாற்றிற்குள் செல்வோம்,

திருத்தொண்டின் வேந்தர் காளத்தி மலையுறைப் பரம்பொருளைக் கண்களாரத் தரிசித்து 'என் கண்ணுளான்' எனும் திருத்தாண்டகத்தால் இறைவரைப் போற்றி செய்கின்றார்,

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 345)
காதணிவெண் குழையானைக் காளத்தி மலைக்கொழுந்தை
வேதமொழி மூலத்தை விழுந்திறைஞ்சி எழுந்துபெரும் 
காதல்புரி மனங்களிப்பக் கண்களிப்பப் பரவசமாய்
நாதனைஎன் கண்ணுளான் எனும் திருத்தாண்டகம் நவின்றார்

பின்னர் இறைவரின் திருமுன்பாக எழுந்தருளியுள்ள கண்ணப்ப நாயனாரின் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கிக் கண்ணருவி பாய; உச்சி கூப்பிய கையினராய்க் கருவறையினின்றும் வெளிப்பட்டு வருகின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 346)
மலைச்சிகரச் சிகாமணியின் மருங்குற முன்னே நிற்கும்
சிலைத் தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்திறைஞ்சி
அலைத்துவிழும் கண்ணருவி ஆகத்துப் பாய்ந்திழியத்
தலைக்குவித்த கையினராய்த் தாழ்ந்துபுறம் போந்தணைந்தார்

No comments:

Post a Comment