திருஞானசம்பந்தரின் அவதார இரகசியம்:

சீகாழித் தோன்றலான நம் ஞான சம்பந்த வள்ளலைப் பொதுவில் முருகப் பெருமானின் அவதாரமாகவே போற்றும் சைவ சமய மரபு குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.

(1)
முதற்கண் சம்பந்த மூர்த்தியின் அவதார இரகசியத்தை அவர்தம் திருப்பாடல் வரிகளைக் கொண்டே அறிந்துணர முற்படுவோம். பின்வரும் திருப்பாடலில் 'மறக்குமாறிலாத என்னை மையல் செய்(து) இம்மண்ணின் மேல் பிறக்குமாறு காட்டினாய்' என்றருளிச் செய்கின்றார் காழி வேந்தர்,  

('வரைத்தலைப் பசும்பொனோடு' என்று துவங்கும் திருத்துருத்தி தேவாரம் - திருப்பாடல் 5)
துறக்குமா சொலப்படாய் துருத்தியாய்; திருந்தடி
மறக்குமாறிலாத என்னை மையல் செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்(டு)
இறக்குமாறு காட்டினாய்க்(கு) இழுக்குகின்ற(து) என்னையே

சிவபரம்பொருளின் குமார வடிவமே அறுமுகக் கடவுளெனும் சத்தியத்தைக் (கச்சியப்ப சிவாச்சாரியார் அருளியுள்ள) கந்தபுராணத்தின் பல்வேறு திருப்பாடல்கள் நமக்கு அறிவிக்கின்றன. ஆதலின் மேற்குறித்துள்ள காழிப் பிள்ளையாரின் அற்புதப் பிரகடனத்தை ஒருபொழுதும் அறுமுகக் கடவுளின் திருவாக்காகக் கொள்ளுதல் ஏற்புடையதன்று. சிவஞானப் பெருநிலையில் விளங்கியிருந்த ஒரு ஜீவான்மா இறைவரிடம் உரிமையோடு 'என்னை ஏன் இப்பிறவியில் ஆழ்த்தினாய்' என்று வினவுமுகமாகவே சிவஞானச் செல்வரின் இக்கூற்று அமைந்துள்ளது.

(2)
இனி நம் தெய்வச் சேக்கிழாரின் திருவாக்கும் சீகாழி அண்ணலின் அருளிச் செயலோடு ஓத்திருத்தலைக் காண்போம். 'திருவடி மறவாத் தன்மையில் விளங்கியிருந்த ஆன்மா ஒன்றினைச் சிவமூர்த்தி ஞானசம்பந்த மூர்த்தியாக அவதரிக்கச் செய்தருளினார்' என்ற பின்வரும் திருப்பாடலில் சேக்கிழார் பெருமானார் பதிவு செய்து போற்றுகின்றார்,

(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 55)
பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர்
மண்டுதவ மறைக்குலத்தோர் வழிபாட்டின் அளித்தருளத்
தொண்டின்நிலை தரவருவார் தொடர்ந்த பிரிவுணர்வொருகால்
கொண்டெழலும் வெருக்கொண்டாற் போல்அழுவார் குறிப்பயலாய்

'திருவடி மறவாத தன்மை' எனும் சொற்பிரயோகமும் உயிர் வர்க்கத்துக்கு மட்டுமே பொருந்தக் கூடியவொன்று, பரம்பொருள் வடிவினரான குமாரக் கடவுளுக்கு அன்று. 

(3)
எனில் மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய நம் அருணகிரிப் பெருமான் எண்ணிறந்த திருப்புகழ் திருப்பாடல்களில், ஞானசம்பந்த மூர்த்தியின் திருஅவதார நிகழ்வுகளை முருகப் பெருமானின் திருச்செயல்களாகவே போற்றியுள்ளாரே?' எனும் கேள்வியும் உடனெழுவது இயல்பே. 

இதற்கான விளக்கத்தினை நாம் ஆய்ந்தறிய முனைகையில், அவ்விளக்கமானது ஞானசம்பந்தரின் திருவாக்கு; தெய்வச் சேக்கிழாரின் திருவாக்கு; அருணகிரியாரின் திருவாக்கு ஆகிய மூன்றிற்கும் முரணின்றி அமைந்திருத்தல் மிகமிக அவசியம். 

பரம குருநாதரான நம் வாரியார் சுவாமிகள் 'அறுமுகக் கடவுளின் சாரூப முத்தி பெற்றுத் திருக்கயிலையில் திருத்தொண்டாற்றி வரும் முத்தான்மா ஒருவரையே சிவபெருமான் ஞானசம்பந்தராக இப்புவிமிசை அவதரிக்கச் செய்கின்றார்' என்றும், 'இதன் பொருட்டே அருணகிரிநாதர் உள்ளிட்ட அருளாளர்கள், உபச்சார மார்க்கமாகச் சம்பந்தச் செல்வரின் செயல்களை முருகப் பெருமானின் மீது ஏற்றிப் பாடியுள்ளனர்' என்றும் இதன் நுட்பத்தினைத் தெளிவுறுத்துகின்றார். 

(4)
மற்றொரு கோணம், பூரண சிவஞானம் சித்திக்கப் பெறாத ஆன்மாக்களிடம் பாலில்படுநெய் போலும் எழுந்தருளியுள்ள இறைவன், மலபரிபாகம்; சத்தினிபாதம் நிகழ்ந்தேறப் பெற்றுள்ள உத்தம ஆன்மாக்களிடம் மிக விளக்கமாய் எழுந்தருளி இருக்கின்றான். ஆதலின் சிவஞானப் பெருநிலையிலுள்ள நம் அருணகிரிப் பெருமான் ஒவ்வொருமுறை ஞானசம்பந்த மூர்த்தியை அகக் கண்களில் தரிசிக்கையிலும், அம்மூர்த்தியின் திருவுள்ளத்தில் மிக விளக்கமாய் எழுந்தருளியுள்ள அறுமுகக் கடவுளின் தரிசனமும் ஒருசேர அனுபவமாகின்றது. 

(5)
'ஞானசம்பந்தப் பெருமான் பசு வர்க்கமாகிய நம்முள் ஒருவர்' என்று அறிந்தும் உணர்ந்தும் அனுபவிப்பதே ரசமான; சுவையான; அற்புதமான அனுபவம். சீர்காழிச் செல்வர் திருத்தொண்டர்களின் தனிப்பெரும் தலைவர், பதியாகிய சிவபரம்பொருளோடு நம்மை இணைப்பிக்கும் தெய்வீகப் பாலமாய்த் திகழ்பவர் (சிவ சிவ)!!!.

திருஞானசம்பந்தர் (வீழிமிழலையில் சீகாழிக் காட்சி):

(1)
ஞானசம்பந்த மூர்த்தியும், நாவுக்கரசு சுவாமிகளும் சிறிது காலம் திருவீழிமிழலையில் எழுந்தருளி இருந்து, மிழலைநாதப் பரம்பொருளை முப்போதும் போற்றித் துதித்து வருகின்றனர். 

(2)
இந்நிலையில் சீர்காழி வாழ் அந்தணர்கள் மிழலைக்கு வருகை புரிந்து, ஆலயத்துள் இறைவரை வணங்கிப் பின்னர் ஆளுடைப் பிள்ளையாரின் திருமடத்திற்குச் சென்று பணிந்து, அவர்தம் திருவடிகளைத் தங்களின் சென்னி மீது சூடி, 'தோணிபுரத்திற்கு எங்களுடன் எழுந்தருளி வருகின்ற பேறு நாங்கள் பெறுதல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றனர். சீகாழி வேந்தரும், 'தோணிபுர இறைவரை வணங்க, மிழலைநாதப் பெருமானின் அருளைப் பெற்று நாளை செல்வோம்' என்று அருள் புரிகின்றார். 

(3)
அன்றிரவு பிள்ளையாரின் கனவினில் எழுந்தருளித் தோன்றும் சீகாழிப் பரம்பொருள் 'நாம் தோணிபுரத்து எழுந்தருளியுள்ள கோலத்தினை மிழலை விமானத்தருகிலேயே காட்டுவோம்' என்றருளிச் செய்கின்றார். 

(ஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 555)
தோணியில் நாம்அங்கிருந்த வண்ணம் தூமறை வீழிமிழலை தன்னுள்
சேணுயர் விண்ணின்று இழிந்த இந்தச் சீர்கொள் விமானத்துக் காட்டுகின்றோம்
பேணும் படியால் அறிதி என்று பெயர்ந்தருள் செய்யப், பெரும்தவஙகள்
வேணுபுரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத்தொடும் உணர்ந்தார்

(4)
பிள்ளையார் உறக்கம் நீங்கியெழுந்து, உடலெங்கும் புளகமுற, இறைவரின் திருக்குறிப்பை உணர்ந்து அதிசயம் அடைகின்றார். அன்றைய காலைப் பொழுதில், உச்சி கூப்பிய கையினராய் ஆலயத்துள் செல்ல, விமானத்தருகில் தோணிபுரத்துறையும் வேதமுதல்வர் திருக்காட்சி அளித்துப் பேரருள் புரிகின்றார், 

(ஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 556)
அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சிமேல் அங்கை கூப்பி
வெறியுற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண்ணிழி கோயிலில் சென்று புக்கு
மறியுற்ற கையரைத் தோணிமேல் முன்வணங்கும்படி அங்குக் கண்டு வாழ்ந்து
குறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார்

(5)
சிவஞானப் பிள்ளையார் இறைவரின் பேரருட்திறத்தினை வியந்து, உளமெலாம் உருகி, சீகாழியுறைப் பரம்பொருளே, அடியவனை ஆட்கொண்ட தலைவனே, முக்கண் முதல்வனே, நீ இவ்விதமாய் மிழலையில் தோன்றியருளும் காரணம் என்னவோ ஐயனே?' என்று வினவு முகமாகத் திருப்பதிகமொன்றினை அருளிச் செய்கின்றார்,

(திருவீழிமிழலை - ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1):
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற வாள்நுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழியா மறையோர்கள்ஏத்தப் புகலி நிலாவிய புண்ணியனே
எம்இறையே; இமையாத முக்கண் ஈச; என்நேச; இதென்கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே

(7)
பின்னர் பிள்ளையார் சீகாழி அந்தணர்களிடம், 'தொண்டரொடு யாம் காதலுடன் பல தலங்களைத் தரிசித்து வரும் திருக்குறிப்பால் புகலிப் பெருமான் தன் திருக்கோலத்தினை இவ்விடத்தே காட்டியருளினான்' என்றருளிச் செய்து, அவர்களுக்கு விடை கொடுத்து அருள் செய்கின்றார். மறையோர்களும் பிள்ளையாரின் திருவடி தொழுது, கவுணியர் குலத் தோன்றலைப் பிரிய மனமில்லாதவர்களாய் ஒருவாறு திரும்பிச் செல்கின்றனர்.

திருஞானசம்பந்தர் (திருவியலூரில் பெற்ற திருக்காட்சி):

(1)
ஞானசம்பந்த மூர்த்தி கஞ்சனூர்; மாந்துறை; திருமங்கலக்குடி முதலிய தலங்களைத் தரிசித்துப் போற்றியவாறே, தஞ்சை மாவட்டத்தில்; காவிரியின் வடகரையிலுள்ள திருவியலூரைச் சென்று சேர்கின்றார் (தற்கால வழக்கில் திருவிசநல்லூர்). இங்கு சிவபரம்பொருள் யோகானந்தீஸ்வரர்; புராதனேஸ்வரர்; வில்வாரண்யேஸ்வரர் எனும் திருநாமங்களிலும், உமையன்னை சாந்தநாயகி; சௌந்தர நாயகி எனும் திருப்பெயர்களோடும் எழுந்தருளி இருக்கின்றனர். சடாயு பூசித்துப் பேறு பெற்றுள்ள திருத்தலம்.

(2)
சீர்காழிச் செல்வர் இறைவரின் திருமுன்பாகச் சென்று பணிந்து, 'குரவம்கமழ்' எனும் பாமாலையால் ஆதிமூர்த்தியைப் போற்றி செய்யத் துவங்குகின்றார், 

(திருவியலூர் - ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
குரவம்கமழ் நறுமென்குழல் அரிவைஅவள் வெருவப்
பொருவெங்கரி படவென்றதன் உரிவை உடலணிவோன்
அரவும் மலைபுனலும் இளமதியும் நகுதலையும்
விரவும்சடை அடிகட்கிடம் விரிநீர் வியலூரே

(3)
ஆளுடைப் பிள்ளையார் உளமுருகப் பாடுகையில், கருவறையுள் யோகானந்தீஸ்வரப் பரம்பொருள் நேரில் எழுந்தருளித் தோன்றுகின்றார், ('அங்கண் அமர்வார் தம்முன்னே அருள்வேடம் காட்ட' என்றிதனைத் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார்),

(திருஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 294)
வெங்கண் விடைமேல் வருவார் வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப்பதிகத் தொடை சாத்தி
அங்கண் அமர்வார் தம்முன்னே அருள்வேடம் காட்டத் தொழுது
செங்கண் மாலுக்கு அரியார்தம் திருந்துதேவன்குடி சேர்ந்தார்

(4)
சீகாழி அண்ணலார் 5ஆம் திருப்பாடலில் 'கண்ணார் தரும் உருவாகிய கடவுள் இடம்' என்று இறைவர் திருக்காட்சி அளித்தருளிய பேரருள் திறத்தினை வியந்து போற்றுகின்றார்,

(திருவியலூர் - ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 5)
எண்ணார்தரு பயனாய்; அயன்அவனாய்; மிகு கலையாய்ப்
பண்ணார்தரு மறையாய்; உயர் பொருளாய்; இறை அவனாய்க்
கண்ணார் தரும் உருவாகிய கடவுள் இடம் எனலாம்
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரிநீர் வியலூரே

திருஞானசம்பந்தர் (நாவுக்கரசு சுவாமிகளுடனான முதல் சந்திப்பு):

ஞானசம்பந்தப் பெருமானாரும் அப்பர் சுவாமிகளும் மும்முறை (வெவ்வேறு சமயங்களில்) சந்தித்து அளவளாவி மகிழ்ந்துள்ளதாக சேக்கிழார் பெருமானார் பதிவு செய்கின்றார். அவற்றுள் முதல் சந்திப்பு குறித்த சில இனிய குறிப்புகளை இப்பதிவில் நினைவு கூர்ந்து மகிழ்வோம், 

(1)
நாவுக்கரசு சுவாமிகள் சீகாழிப் பிள்ளையாரின் அற்புதங்களைக் கேள்வியுற்று, அவரைத் தரிசித்து வணங்கப் பெரும் காதலோடு சீகாழி நோக்கி எழுந்தருளி வருகின்றார். சுவாமிகளின் வருகையினைக் கேள்வியுறும் சீகாழி வள்ளல் 'முன்செய் தவப்பயனால் சுவாமிகளின் தரிசனமாகிய இப்பேறு கிட்ட உள்ளது' என்று உளத்துள் கருதியவாறு, பெருவிருப்பமொடு சுவாமிகளை எதிர்கொண்டு அழைக்க, தொண்டர் குழாத்தொடு விரைகின்றார், 

(ஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 269)
வாக்கின் பெருவிறல் மன்னர் வந்தணைந்தார் எனக் கேட்டுப்
பூக்கமழ் வாசத் தடஞ்சூழ் புகலிப் பெருந்தகையாரும்
ஆக்கிய நல்வினைப் பேறென்று அன்பர் குழாத்தொடும் எய்தி
ஏற்கும் பெருவிருப்போடும் எதிர்கொள எய்தும் பொழுதில்

(2)
நாவுக்கரசு சுவாமிகளின் திருவேடத்தினைத் தெய்வச் சேக்கிழார் பின்வரும் திருப்பாடலில் அற்புதத் தன்மையில் காட்சிப் படுத்துகின்றார்.

சிந்தையில் (இறைவர் பாலும், அடியவர்களின் பாலும் கொண்டொழுகும்) இடையறா அன்பும், (வயது முதிர்ச்சியின் காரணமாக) திருமேனியில் அசைவும், திருமேனியில் பொருந்தியிருக்கும் கந்தைத் துணியே மிகைபோலும் என்றெண்ண வைக்கும் துறவுக் கோலமும், கைகளில் உழவாரப் படையும், (திருவருளின் திறத்தை எந்நேரமும் நினைந்துருகுவதால்) கண்களில் கண்ணீர் மழையும், திருநீற்றுக் கோலமும் கொண்டு அந்தமில்லாத திருவேடத்தினரான நாவுக்கரசு பெருமானார் எழுந்தருளி வருகின்றார், 

(ஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 270)
சிந்தை இடையறா அன்பும், திருமேனி தன்னில் அசைவும்
கந்தை மிகையாம் கருத்தும், கைஉழவாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும், வடிவில் பொலி திருநீறும்
அந்தமிலாத் திருவேடத்து அரசும் எதிர்வந்தணைய

(3)
சுவாமிகளைத் தரிசிக்கும் பிள்ளையார் 'இது நாள் வரையிலும் கருத்தில் வைத்துப் போற்றி வந்த மெய்த்தொண்டரின் திருவேடம் இன்றொரு உருவம் கொன்டது போல் இப்பெரியர் எழுந்தருளி வருகின்றனரே' என்று தொழுதவாறே சுவாமிகளை எதிர்கொள்கின்றார், 

(ஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 271)
கண்ட கவுணியக் கன்றும் கருத்தில் பரவு மெய்க்காதல்
தொண்டர் திருவேடம் நேரே தோன்றியதென்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்தங்கு அரசும் எதிர் வந்திறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழிஅருள் செய்தார்

(4)
இனி இந்நிகழ்வின் தொடர்ச்சியினை, அப்பர் சுவாமிகள் புராணத்தில் இடம்பெறும் பின்வரும் திருப்பாடலின் வாயிலாக உணர்ந்து மகிழ்வோம்,

சுவாமிகள் தொண்டர்கள் திருக்கூட்டத்தில் விரைந்து முன்னேறிச் சென்று சிவஞானப் பிள்ளையாரின் திருவடிகளை வணங்க, சீகாழி அண்ணலார் தன் மலர்க் கரங்களால் சுவாமிகளை எடுத்துத் தாமும் தொழுது, அதீத மதிப்பும் அன்பும் மேலிட 'அப்பரே' என்று அழைத்தருள, சுவாமிகள் 'அடியேன்' என்று அருளிச் செய்கின்றார், 

(அப்பர் சுவாமிகள் புராணம் - திருப்பாடல் 182)
தொழுதுஅணைவுற்று ஆண்டஅரசு அன்புருகத் தொண்டர் குழாத்திடையே சென்று
பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப் பணிந்தவர்தம் கரங்கள் பற்றி
எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி விடையின்மேல் வருவார் தம்மை
அழுதழைத்துக் கொண்டவர்தாம் 'அப்பரே' என, அவரும் அடியேன் என்றார்

திருஞானசம்பந்தர் (திருவாரூர் திருக்கோயிலில் தோன்றிய பேரொளிப் பிழம்பு):

ஞானசம்பந்த மூர்த்தி, எண்ணிறந்த தொண்டர்களும் உடன்வர, திருவாரூர் திருக்கோயிலின் பிரதான கோபுர வாயிலை வணங்கி, ஆலய வளாகத்துள் செல்கின்றார். அங்கு அளப்பிலா சிறப்பு பொருந்திய நீண்ட ஒளிப்பிழம்பின் வரிசையினைத் தரிசிக்கின்றார்.

அச்சிவஒளி சுட்டும் மார்க்கத்தில் சென்று, ஒப்புவமையிலா தேவாசிரியன் மண்டபத்தினை ஆளுடைப் பிள்ளையார் வீழ்ந்து வணங்கியதாக தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார். 

(ஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 509)
மன்னு தோரண வாயில்முன் வணங்கிஉள் புகுவார்
தன்னுள் எவ்வகைப் பெருமையும் தாங்கிய தகைத்தாம்
பன்னெடும் சுடர்ப் படலையின் பரப்பினைப் பார்த்துச்
சென்னி தாழ்ந்து தேவாசிரியன் தொழுதெழுந்தார்

('அம்பிகையிடம் சிவஞானம் உண்ட பண்பினர் ஆதலின் சீகாழிப் பிள்ளையாருக்குச் சிவச்சுடரான இப்பேரொளி தரிசனம் கிட்டியது' என்பர் சமயச் சான்றோர்).

திருஞானசம்பந்தரும் அப்பர் சுவாமிகளும் (திருமறைக்காட்டில் நெகிழ்விக்கும் தரிசன அனுபவம்):

நாகப்பட்டின மாவட்டத்தில், காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது திருமறைக்காடு (வேதாரண்ய ஷேத்திரம்). இங்கு வேதாரண்யேஸ்வரப் பரம்பொருள் சிவலிங்கத் திருமேனியிலும், அதன் பின்னே அம்மையோடு கூடிய உருவத் திருமேனியிலும் அற்புதத் தன்மையில் எழுந்தருளி இருக்கின்றார். 

(1)
சம்பந்தப் பெருமானாரும் நாவுக்கரசு சுவாமிகளும் தல யாத்திரையாய்ச்  செல்லும் வழியில் இத்தலத்திற்கு வருகை புரிகின்றனர். இங்கு பன்னெடும் காலமாய் வேதங்களால் திருக்காப்பிடப் பெற்றிருந்த பிரதான கோபுர வாயிலைத் திறப்பிக்குமாறு அப்பர் சுவாமிகள் இறைவரிடம் விண்ணப்பித்து திருப்பதிகமொன்றினை அருளிச் செய்கின்றார். 

(2)
பின்னர் அவ்வாயிலின் வழியே இருபெரும் குருநாதர்களும் உச்சி கூப்பிய கையினராய் ஆலயத்துள் செல்கின்றனர். மூலக் கருவறையில் தாயினும் இனிய வேதவனப் பரம்பொருளைத் தரிசிக்கின்றனர், கண்களிலிருந்து அருவியாய் நீர் பெருகியோட, மேனி விதிர்விதிர்த்த நிலையில் நிலத்தில் திருமேனி பொருந்துமாறு விரைந்து வீழ்ந்து வணங்குகின்றனர்,

(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 584):
கோயிலுள் புகுவார் உச்சி குவித்த செங்கைகளோடும்
தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரைக் கண்டார்
பாயுநீர் அருவி கண்கள் தூங்கிடப் படியின் மீது
மேயின மெய்யராகி விதிர்ப்புற்று விரைவில் வீழ்ந்தார்

(3)
எல்லையில்லாத அன்பு மேலிடச் சிவானந்த வெள்ளத்தில் மூழ்குகின்றனர். உளமெலாம் நெகிழ்ந்து, எலும்புகளும் உருகுமாறு அம்மையப்பரைத் தரிசித்து, மீண்டும் மீண்டும் வீழ்ந்து பணிவதும் எழுவதுமாய், அதீத நெகிழ்ச்சியினால் நிற்கவும் இயலாமல்,  மொழிகள் தடுமாறிய நிலையிலேயே பாமாலைகளால் போற்றி செய்கின்றனர், 

(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 585):
அன்பினுக்களவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி
என்பு நெக்குருக நோக்கி இறைஞ்சிநேர் விழுந்த நம்பர்
முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி
மின்புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார்

(4)
எத்தகு உன்னதமான அனுபவம், இறைவரிடத்து கொள்ளும் அன்பின் அதீத முதிர்வே இத்தகைய பக்தி, சிவஞானப் பெருநிலையில் நின்றிருந்தும் இப்பெருமக்கள் எவ்விதம் உருகி உருகி வழிபடுகின்றனர் என்று எண்ணுந்தோறும் உள்ளம் நெகிழுமன்றோ! கல்லைப் பிசைந்து கனியாக்கி என்று இதனையே நம் மணிவாசகப் பெருந்தகையார் போற்றுகின்றார். 

ஆலயங்களில் வழிபடும் பொழுது, இப்பெருமக்களின் தரிசன அனுபவத்தில், கோடியில் ஒரு பங்கேனும் நமக்கு சித்திக்க வேண்டும் என்பதே நம்முடைய விண்ணப்பமாக இருத்தல் வேண்டும்.

திருஞானசம்பந்தர் (திருஆலவாய் - முதல் தரிசன அனுபவம்):

ஞானசம்பந்த மூர்த்தி எண்ணிறந்த தொண்டர்களுடன் திருஆலவாய் எனும் மதுரைப் பதிக்கு எழுந்தருளி வருகின்றார். தல எல்லையிலேயே குலச்சிறை நாயனார் எதிர்கொண்டு வரவேற்றுப் பணிந்து, சீகாழிப் பிள்ளையாரை ஆலவாய்த் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றார். 

(1)
பிள்ளையார் திருக்கருவறையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரப் பெருங்கடவுளைக் கண்கொண்ட பயனாய்த் தரிசிக்கின்றார். இறைவரின் பால் கொண்ட மெய்யன்பானது மென்மேலும் பெருக, திருமுன்னர் வீழ்ந்து வணங்குகின்றார். நிறைவு தோன்றவில்லை, மீளவும் பன்முறை வீழ்ந்து பணிந்து எழுகின்றார்,
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 665):
ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்தினிது இருந்த
காள கண்டரைக் கண்களின் பயன்பெறக் கண்டு
நீள வந்தெழும் அன்பினால் பணிந்தெழ நிறையார்
மீளவும் பலமுறை நிலமுற விழுந்தெழுவார்

(2)
ஐவகை உறுப்புகளாலும் (பஞ்சாங்க நமஸ்காரம்), எட்டு உறுப்புகளாலும் (அஷ்டாங்க நமஸ்காரம்) எண்ணிறந்த முறை வணங்குகின்றார் ('அளவுபடாத வணக்கங்கள் செய்து' என்பது தெய்வச் சேக்கிழார் வாக்கு). இறைவரிடத்து உள்ள காதலின் அதீத நெகிழ்ச்சியினால் உடலெங்கும் மயிர்க்கூச்செரிய, சிவந்த மலர்க் கண்களினின்றும் வெளிப்படும் கண்ணருவியானது திருநீறு துலங்கும் திருமேனியெங்கிலுமாய் பரவியிருக்க, ஒருமையுற்று ஆதிமூர்த்தியின் திருவடிச் சீர்மையினைப் போற்றுகின்றார்,
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 666):
அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவின்றி வணங்கிப்
பொங்கு காதலின் மெய்ம்மயிர்ப் புளகமும் பொழியும்
செங்கண் நீர்தரும் அருவியும் திகழ் திருமேனி
எங்குமாகி நின்றேத்தினார் புகலியர் இறைவர்

(3)
'நீலமா மிடற்று ஆலவாயிலான்' எனும், இரு வரித் திருப்பாடல்களால் கோர்க்கப் பெற்றுள்ள 'திருஇருக்குக் குறள்' திருப்பதிகத்தினால் ஆலவாயுறைப் பரம்பொருளைப் போற்றி செய்கின்றார். சிவநெறி ஒழுக்கத்தினால் மேன்மையுற்று விளங்கும் குலச்சிறையாருடன் அன்பினால் கூடித் திளைத்து, ஆலவாய்ப் பேரரசியின் கேள்வரை மேலும் போற்றி மகிழ்கின்றார்,     
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 667):
நீலமா மிடற்று ஆலவாயான் என நிலவும்
மூலமாகிய திருஇருக்குக் குறள் மொழிந்து
சீல மாதவத் திருத்தொண்டர் தம்மொடும் திளைத்தார்
சாலு மேன்மையில் தலைச்சங்கப் புலவனார் தம்முன்

(4)
திருஇருக்குக்குறள் பாமாலையை நிறைவு செய்து மற்றுமொரு பனுவலால் சொக்கநாதப் பரஞ்சுடரைப் பணிந்தேத்துகின்றார் (இப்பனுவல் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை). பின்னர் ஒருவாறு நிறைவு பெற்றவராய் அரிதாய் அவ்விடத்தினின்றும் நீங்கி ஆலய முன்றிலுக்கு அருகில் செல்கின்றார்,

(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 668 ):
சேர்த்தும் இன்னிசைப் பதிகமும் திருக்கடைக் காப்புச்
சார்த்தி நல்லிசைத் தண்தமிழ்ச் சொல்மலர் மாலை
பேர்த்தும் இன்புறப் பாடி வெண்பிறைஅணி சென்னி
மூர்த்தியார் கழல் பரவியே திருமுன்றில் அணைய

திருஞானசம்பந்தர் (திருவதிகையில் பெற்ற திருநடனக் கோல தரிசனம்):

(1)
ஞானசமபந்த மூர்த்தி தலயாத்திரையாகச் செல்லும் வழியில் நடுநாட்டுத் தலமான திருவதிகையினைச் சென்றடைகின்றார். அப்பதி வாழ் மெய்த்தொண்டர்கள் எதிர்கொண்டு வணங்க, எதிர்தொழுதவாறே ஆலயத்துள் செல்கின்றார்,
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 964):
...
மிக்க சீர்வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம்முன்பு
தொக்க மெய்த் திருத்தொண்டர் வந்தெதிர் கொளத் தொழுதெழுந்து அணைவுற்றார்

(2)
திருக்கருவறையில் எழுந்தருளியுள்ள வீராட்டனேஸ்வரப் பரம்பொருளின் திருமுன்பு சென்று தரிசிக்கையில், அதிகையுறை ஆதிமூர்த்தி திருநடக்கோலம் காட்டிப் பேரருள் புரிகின்றார் ('திருநடம் புலப்படும்படி காட்ட' என்பது தெய்வச் சேக்கிழார் வாக்கு). சீகாழிச் செல்வர் உளமுருகி ஒருமையுற்ற சிந்தையுடன் இறைவரைப் பணிந்து, 'குண்டைக்குறள் பூதம்' எனும் பாமாலையால் போற்றி செய்கின்றார்,
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 965):
ஆதி தேவர் அங்கமர்ந்த வீரட்டானம் சென்றணைபவர் முன்னே
பூதம் பாட நின்றாடுவார் திருநடம் புலப்படும்படி காட்ட
வேத பாரகர் பணிந்துமெய் உணர்வுடன் உருகிய விருப்போடும்
கோதிலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்றெடுத்து ஏத்தி

(3)
திருக்கூத்தினைத் தரிசிக்கப் பெற்றமையால் ஒவ்வொரு திருப்பாடலின் இறுதியிலும் 'ஆடும் வீரட்டானத்தே' என்று குறித்து மகிழ்கின்றார் ஆளுடைப் பிள்ளையார்,
-
(திருவதிகை - திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
குண்டைக் குறள்பூதம் குழும அனலேந்திக்
கெண்டைப் பிறழ் தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலான் ஆடும் வீரட்டானத்தே
-
(திருவதிகை - திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 2)
அரும்பும் குரும்பையும் மலைத்த மென்கொங்கைக்
கரும்பின் மொழியாளோடுடன் கைஅனல் வீசிச்
சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ
விரும்பும் அதிகையுள் ஆடும் வீரட்டானத்தே

திருஞானசம்பந்தர் (பூந்துருத்தி எல்லையில் நாவுக்கரசு சுவாமிகளுடன் நெகிழ்விக்கும் 3ஆவது சந்திப்பு):

(1)
ஞானசம்பந்த மூர்த்தி நாவுக்கரசு சுவாமிகள் பூந்துருத்தியில் எழுந்தருளி இருப்பதைக் கேட்டறிந்து, அப்ப மூர்த்தியைத் தரிசிக்க பெருவிருப்பம் கொள்கின்றார் ('ஆண்ட அரசினைக் காணும் ஒப்பரிய பெருவிருப்பு மிக்கோங்க' என்பது தெய்வச் சேக்கிழார் வாக்கு). தொண்டர்கள் புடைசூழ, இறைவர் அருளிய சிவிகையில் ஆரோகணித்துத் திருக்கடையூரிலிருந்து பூந்துருத்திக்கு எழுந்தருளிச் செல்கின்றார்.     

(2)
ஆளுடைப் பிள்ளையார் பூந்துருத்திக்கு அருகாமையில் வருவதனைக் கேள்வியுறும் அப்பர் பெருமானார் 'அடியவனை ஆளாக உடைய சீகாழிப் பிள்ளையாரை எதிர்கொண்டு வணங்குவது முற்பிறவிகளின் நல்வினையால் எய்தியுள்ள பெரும் பேறன்றோ' என்று அகமும் முகமும் மலர்கின்றார், 
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 931):
அந்தணர் சூளாமணியார் பூந்துருத்திக்கு அணித்தாக
வந்தருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டருளி
நந்தமை ஆளுடையவரை நாம்எதிர்சென்று இறைஞ்சுவது
முந்தைவினைப் பயனென்று முகமலர அகமலர்வார்

(3)
விரைந்து தல எல்லைக்குச் சென்று, சம்பந்தப் பிள்ளையார் எழுந்தருளி வரும் திருக்கூட்டத்தின் முன்பாக நிலமிசை வீழ்ந்து பணிந்து, பிள்ளையாரின் பாலுள்ள அன்பினால் நெகிழ்ந்துருகியவாறு அக்கூட்டத்துள் சென்று கலக்கின்றார் ('உள்ளம் உருக்கியெழு மனம்பொங்கத் தொண்டர் குழாத்துடன் அணைந்தார்' என்பது தெய்வச் சேக்கிழார் வாக்கு).

(4)
சிவஞானமுண்ட பிள்ளையாரின் சிவிகையைத் தாமும் தாங்கியவாறு உடன் செல்கின்றார். சம்பந்தப் பிள்ளையாரின் உள்ளத்தில் அக்கணமே திருவருட் குறிப்பினால் பெருஉணர்ச்சியொன்று தோன்றுகின்றது,
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 934):
வந்தணைந்த வாகீசர் வண்புகலி வாழ்வேந்தர்
சந்தமணித் திருமுத்தின் சிவிகையினைத் தாங்கியே
சிந்தைகளிப் புறவருவார் திருஞான சம்பந்தர்
புந்தியினில் வேறொன்று நிகழ்ந்திடமுன் புகல்கின்றார்

(5)
'அப்பர் இப்பொழுது எங்கு உள்ளார்' என்று சீகாழி அண்ணல் வினவியருள, திருத்தொண்டின் வேந்தரான சுவாமிகள், 'ஒப்பரிய தவம் செய்தேன், ஆதலின் உம்முடைய திருவடிகளைத் தாங்கிவரும் பேற்றினைப் பெற்று உம்முடனே வருகின்றேன்' என்று அருளிச் செய்கின்றார்,
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 935):
அப்பர்தாம் எங்குற்றார் இப்பொழுது என்றருள் செய்யச்
செப்பரிய புகழ்த் திருநாவுக்கரசர் செப்புவார்
ஒப்பரிய தவம்செய்தேன் ஆதலினால் உம்அடிகள்
இப்பொழுது தாங்கிவரப் பெற்றுய்ந்தேன் யான் என்றார்

(6)
தாண்டக வேந்தரின் அருள்மொழிகளைச் செவியுறும் பிள்ளையார் பெரிதும் அஞ்சி அக்கணமே சிவிகையினின்றும் நீங்கி, 'அப்பரே, எதன் பொருட்டு இவ்விதமாய்ச் செய்தருளினீர்?' என்று பதைப்புற்றுச் சுவாமிகளைப் பணிகின்றார். நாவசரசுப் பெருந்தகையாரும், 'சிவஞானம் உண்ட பிள்ளையாருக்கு இச்செயலை விடவும் செய்யத் தக்கதொரு தொண்டு உள்ளதோ?' என்று எதிர் வணங்கி நெகிழ்கின்றார்,
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 936):
அவ்வார்த்தை கேட்டஞ்சி அவனியின்மேல் இழிந்தருளி
இவ்வாறு செய்தருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும்
செவ்வாறு மொழிநாவர் திருஞானசம்பந்தர்க்கு 
எவ்வாறு செயத்தகுவது என்றெதிரே இறைஞ்சினார்

திருஞானசம்பந்தர் (மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்):

'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' எனும் சீகாழித் திருப்பதிகம் மிகப் பிரசித்தம். இப்பனுவல் மதுரைத் திருத்தலத்தில் பாடப் பெற்றதற்கான சூழலை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்.

(1)
ஞானசமபந்த மூர்த்தி மதுரையில் அறிவிலிகளான சமணர்களின் திறத்தினை முற்றிலும் அழித்தொழித்துத் திருநீற்றின் பெருநெறியினைப் பாண்டிய தேசமெங்கிலும் பரவச் செய்து, அங்கு சிறிது காலம் தங்கியிருந்து சோமசுந்தரப் பரம்பொருளைப் போற்றி வருகின்றார். 

(2)
இந்நிலையில் தந்தையாரான சிவபாத இருதயர் சம்பந்தப் பிள்ளையாரை மிகவும் நினைந்து, 'பாண்டி நாட்டிற்குச் சென்றுள்ள பிள்ளையாரின் நிலைகுறித்து அறிந்து வருவேன்' என்று சீகாழியிலிருந்து மதுரைத் தலத்திற்குப் பயணம் மேற்கொள்கின்றார்.

(3)
ஆலவாய்த் தலத்தைச் சென்றடைந்து, சொக்கநாதப் பரம்பொருளைத் தொழுது, அப்பதி வாழ் அன்பர்களிடம் பிள்ளையாரின் திருமடம் குறித்து கேட்டறிந்து அங்கு செல்கின்றார். 

(4)
திருமடத்திலுள்ள அன்பர்கள் தந்தையாரின் வருகை குறித்து சிவஞானமுண்ட பிள்ளையாரிடம் விண்ணப்பிக்க, 'எப்பொழுது வந்தருளினார்?' என்று வினவியவாறே பிள்ளையார் மடத்தினின்றும் வெளிவருகின்றார். 

(5)
சிவபாத இருதயர் பிள்ளையாரைத் தொழுதவாறே அருகில் செல்ல, சீகாழி அண்ணலும் தந்தையாரை எதிர்தொழுது மகிழ்கின்றார். இப்பிறவியின் தந்தையாரைக் கண்ட கணத்திலேயே, எப்பிறவிக்கும் தந்தையான, தன்னைப் பிறவித் தளையினின்றும் நீக்கியருளிய தோணிபுரப் பரம்பொருளின் திருவடிகளை நினைகின்றார்,  
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 879):
சிவபாத இருதயர் தாம் முன்தொழுது சென்றணையத்
தவமான நெறியணையும் தாதையார் எதிர்தொழுவார்
அவர் சார்வு கண்டருளித் திருத்தோணி அமர்ந்தருளிப்
பவபாசம் அறுத்தவர்தம் பாதங்கள் நினைவுற்றார்

(6)
தந்தையாரின் முன்னே இரு மலர்க்கரங்களையும் கூப்பியவாறு 'அரிய தவத்தையுடைய பெரியீர், ஏதுமறியா மழலைப் பருவத்தில் சிவஞான அமுதளித்து எமை ஆட்கொண்ட தோணிபுர இறைவரும் அம்மையும் எங்கனம் எழுந்தருளி இருக்கின்றனர்?' என்று உளமுருக வினவுகின்றார்,  
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 880):
இருந்தவத்தோர் அவர்முன்னே இணைமலர்க்கை குவித்தருளி
அருந்தவத்தீர் எனைஅறியாப் பருவத்தே எடுத்தாண்ட
பெருந்தகைஎம் பெருமாட்டி உடனிருந்ததே என்று
பொருந்துபுகழ்ப் புகலியின்மேல் திருப்பதிகம் போற்றிசைத்தார்

(7)
சீகாழி இறைவரின் மீதுள்ள அளப்பரிய காதலினால் பெருமகிழ்ச்சி மேலிட, கண்களினின்றும் நீரானது அருவியாய்ப் பெருகியோட, 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' எனும் சீகாழித் திருப்பதிகத்தினை அருளிச் செய்கின்றார்,
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 881):
மண்ணில்நல்ல என்றெடுத்து மனத்தெழுந்த பெருமகிழ்ச்சி
உள்நிறைந்த காதலினால் கண்ணருவி பாய்ந்தொழுக
அண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் அருள்செய்தார்
தண்ணறும்பூஞ் செங்கமலத் தாரணிந்த தமிழ்விரகர்
-
(திருக்கழுமலம் - ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃது உறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

திருஞானசம்பந்தர் (திருமருகல் ஆலயக் கருவறையில் திருச்செங்காட்டங்குடி திருக்காட்சி):

(1)
சம்பந்தப் பெருமானார் தலயாத்திரையாக திருச்செங்காட்டங்குடியைச் சென்றடைகின்றார். சிறுத்தொண்ட நாயனார் மகிழ்வுடன் எதிர்கொள்ள, ஆலயத்துள் சென்று கணபதீஸ்வரப் பரம்பொருளைப் பணிந்தேத்துகின்றார். பின்னர் சிறுத்தொண்டரின் இல்லத்தில் சிறிது காலம் தொண்டர்களுடன் அன்பினால் கூடி மகிழ்ந்திருந்து, சிறுத்தொண்டரிடம் விடைபெற்று, திருமருகல் தலத்திற்குப் பயணித்துச் செல்கின்றார்.

(2)
திருமருகலில் மாணிக்கவண்ணப் பெருமானைப் போற்றி செய்து அப்பதியிலேயே சிறிது காலம் எழுந்தருளி இருக்கின்றார். அந்நாட்களில் ஆலயத்தருகில் பாம்பினால் மாண்ட வணிகனொருவனைத் திருவருளால் உயிர்ப்பித்து, அவனுக்கும் அவனுடன் வந்திருந்த சிவபக்தையான காரிகை ஒருத்திக்குமாய்த் திருமணம் செய்வித்து அருள் செய்கின்றார். 

(3)
இந்நிலையில் சிறுத்தொண்ட நாயனார் திருமருகலுக்குச் சென்று சீகாழிப் பிள்ளையாரிடம் 'நீங்கள் மீண்டும் எங்கள் பதியான செங்காட்டங்குடிக்கு எழுந்தருளி வருதல் வேண்டும்' என்று விண்ணப்பித்துக் கொள்கின்றார். உடன் சிவஞானப் பிள்ளையாருக்குச் செங்காட்டங்குடி மேவும் உத்திராபதீஸ்வரப் பரம்பொருளை மீண்டுமொரு முறை தரிசித்துப் போற்றும் ஆர்வம் பெருகுகின்றது. மருகல் இறைவரின் அருளைப் பெற்றுவர ஆலயத்துள் செல்கின்றார்,
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 484):
மற்றவர்க்கு விடைகொடுத்தங்கு அமரு நாளில்
   மருகல் நகரினில்வந்து வலிய பாசம்
செற்றபுகழ்ச் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும்
   செங்காட்டங்குடியில் எழுந்தருள வேண்டிப்
பற்றியெழும் காதல்மிக மேன்மேல் சென்று
   பரமனார் திறத்துன்னிப் பாங்கரெங்கும்
சுற்றும் அருந்தவரோடும் கோயிலெய்திச்
   சுடர்மழு ஆண்டவர்பாதம் தொழுவான் புக்கார்

(4)
திருக்கருவறையில் மருகலுறை முதல்வர் 'கணபதீஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள திருக்கோலத்தினை' விளக்கமாகக் காட்டியருள் புரிகின்றார்,
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 485):
புக்கிறைஞ்சி எதிர்நின்று போற்றுகின்றார்
   பொங்குதிரை நதிப்புனலும் பிறையும் சேர்ந்த
செக்கர்முடிச் சடைமவுலி வெண்ணீற்றார் தம்
   திருமேனி ஒருபாகம் பசுமையாக
மைக்குலவு கண்டத்தார் மருகல் கோயில்
   மன்னுநிலை மனம்கொண்டு வணங்குவார்முன்
கைக்கனலார் கணபதீச்சரத்தின் மேவும்
   காட்சி கொடுத்தருளுவான் காட்டக் கண்டார்

(5)
காழிப் பிள்ளையார் கண்ணருவி பொழிய, அளப்பரிய காதலுடன் அம்பிகை பாகனாரின் திருவருளை வியந்து, 'மருகலுறை ஆதியே! நீ இவ்விதமாய் கணபதீஸ்வரத் திருக்கோலத்தில் காட்சி அளித்தருள்வது எதன் பொருட்டு ஐயனே?' என்று உளமுருகப் பாடிப் பரவுகின்றார்,  
-
(திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் - திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
அங்கமும் வேதமும் ஓதும்நாவர்; அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செங்கயலார் புனல் செல்வமல்கு சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
கங்குல் விளங்கெரி ஏந்தியாடும் கணபதியீச்சரம் காமுறவே

(6)
இவ்வாறாக இறைவரின் அருளைப் பெற்றுச் சிறுத்தொண்டருடன் திருச்செங்காட்டங்குடி பதிக்கு மீண்டும் எழுந்தருளிச் சென்று, அங்கு சிறிது காலம் தங்கியிருந்து, மதி சூடும் அண்ணலாரை முப்போதும் போற்றி வருகின்றார்.

திருஞானசம்பந்தர் (திருவாரூர் தல யாத்திரை - ஆலயம் அடையுமுன்பே பாடிய 4 திருப்பதிகங்கள்)

ஆரூரிலிருந்து புகலூருக்கு எழுந்தருளி வரும் அப்பர் சுவாமிகளைப் புகலூர் எல்லையிலேயே சென்று சம்பந்தப் பிள்ளையார் எதிர்கொள்ள, இரு அருளாளர்களும் வணங்கி மகிழ்கின்றனர். சுவாமிகளின் வாயிலாக ஆரூரின் சிறப்பினைக் கேட்கப் பெறும் சீகாழிப் பிள்ளையாருக்கு ஆரூரின் பால் அளவிலாத ஆர்வம் பெருகுகின்றது. அடிகளைப் புகலூரில் எழுந்தருளி இருக்குமாறு விண்ணப்பித்து, தொண்டர்களோடு ஆரூருக்கு அக்கணமே யாத்திரை மேற்கொள்கின்றார். 

(1)
வழியில் திருவிற்குடி தலத்தினைத் தரிசித்துப் பின்னர், 'பாடலன் நான்மறை' எனும் ஆரூர்ப் பனுவலைப் பாடியவாறே பயணித்துச் செல்கின்றார்,
-
(திருவாரூர் - ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
பாடலன் நான்மறையன்; படிபட்ட கோலத்தன்; திங்கள்
சூடலன்; மூவிலைய சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரி கொண்டு, எல்லி
ஆடலன்; ஆதிரையன்; ஆரூர் அமர்ந்தானே

(2)
ஆரூரின் எல்லையை நெருங்குகையில், அப்பதி பொன்னுலகு போல் சிறப்புற்று விளங்குவதைக் கண்டு பெருமகிழ்வுற்று, 'பருக்கையானை மத்தகத்து' எனும் பாமாலையை அருளிச் செய்து, திருப்பாடல்கள் தோறும் அந்நகரின் சிறப்புகளைப் பட்டியலிட்டு 'அந்தண் ஆரூர் என்பதே' என்று போற்றி, தொண்டர்களோடு பாடிஆடியவாறே மேலும் முன்னேறிச் செல்கின்றார்,
-
(திருவாரூர் - ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
பருக்கையானை மத்தகத்து அரிக்குலத்து உகிர்ப்புக
நெருக்கிவாய நித்திலம் நிரக்குநீள் பொருப்பன்ஊர்
கருக்கொள் சோலை சூழநீடு மாட மாளிகைக் கொடி
அருக்கன் மண்டலத்து அணாவும் அந்தண் ஆரூர் என்பதே

(3)
நகருக்குள் செல்லுகையில், நமையெல்லாம் ஆரூரை வழிபட ஆற்றுப்படுத்தும் விதமாய், 'சித்தம் தெளிவீர்காள்' எனும் திருஇருக்குக்குறள் திருப்பதிகத்தினை அருளிச் செய்கின்றார்,
-
(திருவாரூர் - திருஇருக்குக் குறள் - ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
சித்தம் தெளிவீர்காள்; அத்தன் ஆரூரைப்
பத்தி மலர் தூவ முத்தியாகுமே

(4)
ஆரூர் வாழ் திருத்தொண்டர்கள் நகர் முழுவதையும் பெருஞ்சிறப்புடன் அலங்கரித்துச் சீகாழி அண்ணலாரை எதிர்கொண்டு வணங்க, பிள்ளையாரும் அவர்களை எதிர்வணங்கி மகிழ்ந்து, அந்நிலையிலேயே 'ஆரூருறைப் பரம்பொருள் எளியேனை ஏற்றுக் கொள்வாரோ?' என்று வினவுமுகமாக 'அந்தமாய்' எனும் பாமாலையை அருளிச் செய்கின்றார், 
-
(திருவாரூர் - ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
அந்தமாய் உலகுஆதியும் ஆயினான்
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தையே புகுந்தான் திருவாரூர்எம்
எந்தை தான்எனை ஏன்றுகொளும் கொலோ

(இவ்வாறாக திருவாரூர் ஆலயத்துள் புற்றிடங்கொண்ட புராதனரைத் தரிசிக்கும் முன்னரே நம் சம்பந்தப் பிள்ளையார் ஆரூருக்கு 4 திருப்பதிகங்களை அருளிச் செய்துள்ளார் எனில் அப்பதியின் அளப்பரிய சீர்மையினை விளக்கவும் ஒண்ணுமோ?)

திருஞானசம்பந்தர் (திருவண்ணாமலை எல்லையில் பாடிய திருப்பதிகம்):

(1)
ஞானசம்பந்த மூர்த்தி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அறையணிநல்லூர் எனும் தலத்தினைத் தரிசித்துப் போற்றி, அம்மலையினை வலமாக வந்து பணிகின்றார் (தற்கால வழக்கில் அறகண்டநல்லூர்). பின் அன்பர்கள் காட்ட, அங்கிருந்தவாறே சோலைகள் சூழ்ந்த திருவண்ணாமலையினைத் தரிசிக்கின்றார், 
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 969):
சீரின் மன்னிய பதிகம் முன்பாடி அத்திருஅறையணிநல்லூர்
வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர் தம் மலைமிசை வலங்கொள்வார்
பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாடொறும் பணிந்தேத்தும் 
காரின் மல்கிய சோலைஅண்ணாமலை அன்பர் காட்டிடக் கண்டார்

(2)
அம்மலையானது அண்ணாமலைப் பரம்பொருளின் திருவுருவம் போன்று காட்சி தருதலைக் கண்களாரத் தரிசித்து, கைதொழுது, பெருகும் காதலுடன் 'உண்ணாமுலை உமையாளொடும்' எனும் அற்புதப் பாமாலையினைப் பாடியவாறே, தொண்டர்களும் உடன்வர, திருவண்ணாமலை திருத்தலத்தினைச் சென்றடைகின்றார்,
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 970):
அண்ணாமலை அங்கமரர் பிரான் வடிவு போன்று தோன்றுதலும்
கண்ணால் பருகிக் கைதொழுது கலந்து போற்றும் காதலினால்
உண்ணாமுலையாள் எனும் பதிகம் பாடித் தொண்டருடன் போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணாமலையைச் சென்று சேர்வுற்றார்
-
(திருவண்ணாமலை - ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை; திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள்  மழலை முழவதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே