எம்பிராட்டி திலகவதியார், சைவ நன்னெறிக்குரிய சின்னங்களைத் தரித்துக் கொண்டு, திருவதிகை திருக்கோயிலில் அலகிடுதல்; மெழுகிடுதல்; மலர் பறித்து வீரட்டான இறைவருக்கு மலர்மாலை தொடுத்தல் முதலிய திருத்தொண்டுகளைப் புரிந்து வரும் நிலையில், இளைய சகோதரரான மருள்நீக்கியார் புறச்சமயம் பேணியிருந்த செய்தியைக் கேள்வியுற்றுச் சொல்லொணாத் துன்பத்திற்கு உள்ளாகின்றார்.
(1)
அனுதினமும் வீரட்டானேஸ்வரப் பரம்பொருளின் திருமுன்பு சென்று தொழுது, 'ஐயனே, அடியேனை ஆட்கொண்டு அடிமை கொண்டருள்வது மெய்யெனில், அடியேனுக்குப் பின்தோன்றிய இளவலைப் பரசமய குழியினின்றும் மீட்டருளி ஆட்கொள்ள வேண்டும்' என்று உளமுருகி பலகாலம் விண்ணப்பம் செய்து வருகின்றார்,
(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 46)
தூண்டுதவ விளக்கனையார் சுடரொளியைத் தொழுதென்னை
ஆண்டருளின் நீராகில் அடியேன்பின் வந்தவனை
ஈண்டுவினைப் பரசமயக் குழிநின்றும் எடுத்தருள
வேண்டுமெனப் பலமுறையும் விண்ணப்பம் செய்தனரால்
(2)
திருத்தொண்டின் நெறிபேணிச் செம்மையுற்றிருந்த அம்மையாரின் கனவில் அதிகை முதல்வர் எழுந்தருளித் தோன்றி, 'உன்னுடைய மனக் கவலையை ஒழிவாய், உன் உடன் பிறந்தவன் முற்பிறவியில் முனிவனாய் நமைஅடையப் பலகாலும் தவம் முயன்றவன், இனி அவனைச் சூலை தந்து ஆட்கொள்வோம்' என்றருளி மறைகின்றார்,
(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 48)
மன்னு தபோதனியார்க்குக் கனவின்கண் மழவிடையார்
உன்னுடைய மனக்கவலை ஒழிநீ உன் உடன்பிறந்தான்
முன்னமே முனியாகி எமையடையத் தவம்முயன்றான்
அன்னவனை இனிச்சூலை மடுத்தாள்வம் என அருளி
(3)
முற்பிறவியில் சிவமாம் பரம்பொருளை அடைய மேற்கொண்டிருந்த அரியபெரிய தவத்தில் சிறுகுறையொன்று நேர்ந்திருந்த வினைத் தொடர்ச்சியினால், இப்புவி வாழ; திருத்தொண்டின் திறம் வாழ, அடியவர் திருக்கூட்டம் உய்வு பெற; சைவப் பெருஞ்சமயம் தழைத்தோங்க; பரம குருநாதராகப் பரிணமிக்க இருக்கும் நம் சுவாமிகளுக்கு இறைவர் சூலையாம் பெருவெப்பு நோயினை அருளுகின்றார்,
(பெரிய புராணம்: திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 49)
பண்டுபுரி நற்றவத்துப் பழுதின் அளவிறை வழுவும்
தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக்
கண்தரு நெற்றியர் அருளக் கடும்கனல் போல் அடும்கொடிய
மண்டுபெரும் சூலைஅவர் வயிற்றினிடைப் புக்கதால்