நால்வர் பெருமக்கள் (நினைவில் கொள்ள வேண்டிய முக்கியக் குறிப்புகள்):

திருஞானசம்பந்தர்:

அவதாரத் தலம் சீர்காழி, 3ஆம் வயதின் துவக்கத்தில் சீகாழி ஆலயத் திருக்குளத்தருகில் தோணிபுரீஸ்வரப் பரம்பொருளால் தடுத்தாட்கொள்ளப் பெற்று, திருநிலைநாயகி அம்மையினால் சிவஞானப் பால் ஊட்டப் பெற்ற தனிப்பெரும் குருநாதர். காலம் 7ஆம் நூற்றாண்டு, அவதாரக் காலம் 16 ஆண்டுகள்.

ஆதிமூர்த்தியான சிவபெருமானையும், உமையன்னையையும் அம்மையப்பராகப் போற்றி வழிபடும் சத்புத்திர மார்க்கத்தின் நெறி பேணிய அருளாளர். திருநாவுக்கரசு சுவாமிகளின் சமகாலத்தவர். முதல் மூன்று சைவத் திருமுறைகளின் ஞானாசிரியர். முத்தித் தலம் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஆச்சாள்புரம் எனும் திருநல்லூர் பெருமணம், திருக்கயிலைப் பெருவாழ்வு பெற்றுய்ந்த திருநட்சத்திரம் வைகாசி மூலம்.

திருநாவுக்கரசர் (அப்பர்):

அவதாரத் தலம் கடலூர் மாவட்டம் - பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவாமூர் (திருவாரூர் மாவட்டத்திலுள்ள  திருவாய்மூருக்கும் இத்தலத்திற்கும் சிறிது பெயர் ஒற்றுமை இருப்பினும், இரண்டும் வெவ்வேறு தலங்கள்). சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலம் திருவதிகை. காலம் 7ஆம் நூற்றாண்டு, ஞான சம்பந்த மூர்த்தியின் சமகாலத்து அருளாளர். அவதாரக் காலம் 81 ஆண்டுகள்.
பன்னிரு சைவத் திருமுறைகளுள் 4, 5, 6 திருமுறைகளின் ஞானாசிரியர். தனிப்பெரும் தெய்வமான சிவபரம்பொருளைத் தலைவராகவும், தன்னைத் தொண்டராகவும் கொண்டு வழிபடும் தாச மார்க்கத்தின் வழிநின்ற அருளாளர். சமயக் குரவர் நால்வருள் ஒருவராகப் போற்றப் பெறும் தனிப்பெரும் குருநாதர். இயற்பெயர் மருள் நீக்கியார், திருவதிகை இறைவர் சூட்டியருளிய திருப்பெயர் திருநாவுக்கரசர், ஞான சம்பந்த வள்ளல் பெருமதிப்புடன் அழைத்து மகிழ்ந்த  திருப்பெயர் 'அப்பர்'. திருக்கயிலைப் பதம் எய்திய திருநட்சத்திரம் சித்திரை சதயம், முத்தித் தலம் திருப்புகலூர்.

சுந்தரர்: 

மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய புண்ணிய சீலர், கற்ப கோடி வருடங்களுக்கு முன்னமே பிறவியாகிய பெருங்கடலைத் திருவருளின் துணை கொண்டு கடந்து, கயிலை மாமலையில் சிவபரம்பொருளுக்கு அணுக்கத் தொண்டராய் நிலைபெற்றிருந்த உத்தமத் தொண்டர். நம் பொருட்டு மண்ணுலகிற்கு இறைவரால் அனுப்புவிக்கப் பெற்ற வரம்பிலா சீர்மை பொருந்தியவர்.

அவதாரத் தலம் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருநாவலூர். தனிப்பெரும் தெய்வமான சிவமூர்த்தியால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலம் திருவெண்ணெய்நல்லூர். 

காலம் 7ஆம் நூற்றாண்டின் இறுதியும் 8ஆம் நூற்றாண்டின் துவக்கமும். அம்பிகை பாகனாரிடம் மீளா அடிமைத்திறம் பூண்டு, தோழமை உணர்வொடு பக்தி புரிந்து வழிபடும் தனித்துவமான 'சக மார்கத்தின்' நெறி நின்ற தகைமையாளர். திருத்தொண்டர் புராணமெனும் பெரிய புராணத்தின் பாட்டுடைத் தலைவர்.

தம்பிரான் தோழருக்குத் தேவியர் இருவர் (பரவையார்; சங்கிலி நாச்சியார்), கோட்புலி நாயனாரின் புதல்வியரைத் தம்முடைய குழந்தைகளாகவே ஏற்றருளிய தன்மையினால் நம் நம்பிகளுக்குப் புதல்வியரும் இருவர் (சிங்கடி; வனப்பகை).  

திருவாரூர் மேவும் மறைமுதல்வர் மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் என வன்தொண்டருக்குத் தோழரும் இருவர். 

அடியவர் பெருமக்களைத் தொகுத்துப் போற்றும் திருத்தொண்டத் தொகையினை அருளிச் செய்த பெருஞ்சிறப்பினால், சிவமூர்த்தியின் அருளாணையால், இந்திரன்; பிரமன்; பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணு மற்றுமுள்ள விண்ணவர்கள் யாவரும் எதிர்கொண்டு வரவேற்றுப் போற்றும் தன்மையில், (இறைவர்; உமையன்னை; விநாயகப் பெருமான்; கந்தக் கடவுள் ஆகியோர் மட்டுமே ஆரோகணித்தருளும்) ஈராயிரம் தந்தங்களைக் கொண்ட அயிராவணம் எனும் வெள்ளை யானையில் ஆரோகணித்துத் திருக்கயிலை சென்று சேர்ந்த பெருமகனார். 

பன்னிரு சைவத் திருமுறைகளுள் 7ஆம் திருமுறையின் ஞானாசிரியர். அவதாரக் காலம் 18 ஆண்டுகள், முத்தித் தலம் (கேரள தேசத்தின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள) திருஅஞ்சைக்களம் (தற்கால வழக்கில் திருவஞ்சிக்குளம்). திருக்கயிலைப் பதம் பெற்ற திருநட்சத்திரம் ஆடி சுவாதி.

மாணிக்கவாசகர்:

அவதாரத் தலம் மதுரை மாவட்டத்திலுள்ள திருவாதவூர். சிவபரம்பொருளால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலம் ஆவுடையார் கோயில் எனும் திருப்பெருந்துறை. தேவார மூவரின் காலத்திற்கு மிகமுற்பட்ட 3ஆம் நூற்றாண்டு காலத்தவர். 8ஆம் திருமுறையான திருவாசகம் மற்றும் திருக்கோவையாரின் ஞானாசிரியர். இயற்பெயர் வாதவூரர் என்று கூறுவர், திருப்பெருந்துறை இறைவர் சூட்டியருளிய திருப்பெயர் 'மாணிக்கவாசகர்'. அவதாரக் காலம் 32 ஆண்டுகள். முத்தித் தலம் தில்லை சிதம்பரம். சிவமுத்தி பெற்றுய்ந்த திருநட்சத்திரம் ஆனி மகம். 


திருஞானசம்பந்தரின் அவதார இரகசியம்:

சீகாழித் தோன்றலான நம் ஞான சம்பந்த வள்ளலைப் பொதுவில் முருகப் பெருமானின் அவதாரமாகவே போற்றும் சைவ சமய மரபு குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.

(1)
முதற்கண் சம்பந்த மூர்த்தியின் அவதார இரகசியத்தை அவர்தம் திருப்பாடல் வரிகளைக் கொண்டே அறிந்துணர முற்படுவோம். பின்வரும் திருப்பாடலில் 'மறக்குமாறிலாத என்னை மையல் செய்(து) இம்மண்ணின் மேல் பிறக்குமாறு காட்டினாய்' என்றருளிச் செய்கின்றார் காழி வேந்தர்,  

('வரைத்தலைப் பசும்பொனோடு' என்று துவங்கும் திருத்துருத்தி தேவாரம் - திருப்பாடல் 5)
துறக்குமா சொலப்படாய் துருத்தியாய்; திருந்தடி
மறக்குமாறிலாத என்னை மையல் செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்(டு)
இறக்குமாறு காட்டினாய்க்(கு) இழுக்குகின்ற(து) என்னையே

சிவபரம்பொருளின் குமார வடிவமே அறுமுகக் கடவுளெனும் சத்தியத்தைக் (கச்சியப்ப சிவாச்சாரியார் அருளியுள்ள) கந்தபுராணத்தின் பல்வேறு திருப்பாடல்கள் நமக்கு அறிவிக்கின்றன. ஆதலின் மேற்குறித்துள்ள காழிப் பிள்ளையாரின் அற்புதப் பிரகடனத்தை ஒருபொழுதும் அறுமுகக் கடவுளின் திருவாக்காகக் கொள்ளுதல் ஏற்புடையதன்று. சிவஞானப் பெருநிலையில் விளங்கியிருந்த ஒரு ஜீவான்மா இறைவரிடம் உரிமையோடு 'என்னை ஏன் இப்பிறவியில் ஆழ்த்தினாய்' என்று வினவுமுகமாகவே சிவஞானச் செல்வரின் இக்கூற்று அமைந்துள்ளது.

(2)
இனி நம் தெய்வச் சேக்கிழாரின் திருவாக்கும் சீகாழி அண்ணலின் அருளிச் செயலோடு ஓத்திருத்தலைக் காண்போம். 'திருவடி மறவாத் தன்மையில் விளங்கியிருந்த ஆன்மா ஒன்றினைச் சிவமூர்த்தி ஞானசம்பந்த மூர்த்தியாக அவதரிக்கச் செய்தருளினார்' என்ற பின்வரும் திருப்பாடலில் சேக்கிழார் பெருமானார் பதிவு செய்து போற்றுகின்றார்,

(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 55)
பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர்
மண்டுதவ மறைக்குலத்தோர் வழிபாட்டின் அளித்தருளத்
தொண்டின்நிலை தரவருவார் தொடர்ந்த பிரிவுணர்வொருகால்
கொண்டெழலும் வெருக்கொண்டாற் போல்அழுவார் குறிப்பயலாய்

'திருவடி மறவாத தன்மை' எனும் சொற்பிரயோகமும் உயிர் வர்க்கத்துக்கு மட்டுமே பொருந்தக் கூடியவொன்று, பரம்பொருள் வடிவினரான குமாரக் கடவுளுக்கு அன்று. 

(3)
எனில் மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய நம் அருணகிரிப் பெருமான் எண்ணிறந்த திருப்புகழ் திருப்பாடல்களில், ஞானசம்பந்த மூர்த்தியின் திருஅவதார நிகழ்வுகளை முருகப் பெருமானின் திருச்செயல்களாகவே போற்றியுள்ளாரே?' எனும் கேள்வியும் உடனெழுவது இயல்பே. 

இதற்கான விளக்கத்தினை நாம் ஆய்ந்தறிய முனைகையில், அவ்விளக்கமானது ஞானசம்பந்தரின் திருவாக்கு; தெய்வச் சேக்கிழாரின் திருவாக்கு; அருணகிரியாரின் திருவாக்கு ஆகிய மூன்றிற்கும் முரணின்றி அமைந்திருத்தல் மிகமிக அவசியம். 

பரம குருநாதரான நம் வாரியார் சுவாமிகள் 'அறுமுகக் கடவுளின் சாரூப முத்தி பெற்றுத் திருக்கயிலையில் திருத்தொண்டாற்றி வரும் முத்தான்மா ஒருவரையே சிவபெருமான் ஞானசம்பந்தராக இப்புவிமிசை அவதரிக்கச் செய்கின்றார்' என்றும், 'இதன் பொருட்டே அருணகிரிநாதர் உள்ளிட்ட அருளாளர்கள், உபச்சார மார்க்கமாகச் சம்பந்தச் செல்வரின் செயல்களை முருகப் பெருமானின் மீது ஏற்றிப் பாடியுள்ளனர்' என்றும் இதன் நுட்பத்தினைத் தெளிவுறுத்துகின்றார். 

(4)
மற்றொரு கோணம், பூரண சிவஞானம் சித்திக்கப் பெறாத ஆன்மாக்களிடம் பாலில்படுநெய் போலும் எழுந்தருளியுள்ள இறைவன், மலபரிபாகம்; சத்தினிபாதம் நிகழ்ந்தேறப் பெற்றுள்ள உத்தம ஆன்மாக்களிடம் மிக விளக்கமாய் எழுந்தருளி இருக்கின்றான். ஆதலின் சிவஞானப் பெருநிலையிலுள்ள நம் அருணகிரிப் பெருமான் ஒவ்வொருமுறை ஞானசம்பந்த மூர்த்தியை அகக் கண்களில் தரிசிக்கையிலும், அம்மூர்த்தியின் திருவுள்ளத்தில் மிக விளக்கமாய் எழுந்தருளியுள்ள அறுமுகக் கடவுளின் தரிசனமும் ஒருசேர அனுபவமாகின்றது. 

(5)
'ஞானசம்பந்தப் பெருமான் பசு வர்க்கமாகிய நம்முள் ஒருவர்' என்று அறிந்தும் உணர்ந்தும் அனுபவிப்பதே ரசமான; சுவையான; அற்புதமான அனுபவம். சீர்காழிச் செல்வர் திருத்தொண்டர்களின் தனிப்பெரும் தலைவர், பதியாகிய சிவபரம்பொருளோடு நம்மை இணைப்பிக்கும் தெய்வீகப் பாலமாய்த் திகழ்பவர் (சிவ சிவ)!!!.

திருஞானசம்பந்தர் (வீழிமிழலையில் சீகாழிக் காட்சி):

(1)
ஞானசம்பந்த மூர்த்தியும், நாவுக்கரசு சுவாமிகளும் சிறிது காலம் திருவீழிமிழலையில் எழுந்தருளி இருந்து, மிழலைநாதப் பரம்பொருளை முப்போதும் போற்றித் துதித்து வருகின்றனர். 

(2)
இந்நிலையில் சீர்காழி வாழ் அந்தணர்கள் மிழலைக்கு வருகை புரிந்து, ஆலயத்துள் இறைவரை வணங்கிப் பின்னர் ஆளுடைப் பிள்ளையாரின் திருமடத்திற்குச் சென்று பணிந்து, அவர்தம் திருவடிகளைத் தங்களின் சென்னி மீது சூடி, 'தோணிபுரத்திற்கு எங்களுடன் எழுந்தருளி வருகின்ற பேறு நாங்கள் பெறுதல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றனர். சீகாழி வேந்தரும், 'தோணிபுர இறைவரை வணங்க, மிழலைநாதப் பெருமானின் அருளைப் பெற்று நாளை செல்வோம்' என்று அருள் புரிகின்றார். 

(3)
அன்றிரவு பிள்ளையாரின் கனவினில் எழுந்தருளித் தோன்றும் சீகாழிப் பரம்பொருள் 'நாம் தோணிபுரத்து எழுந்தருளியுள்ள கோலத்தினை மிழலை விமானத்தருகிலேயே காட்டுவோம்' என்றருளிச் செய்கின்றார். 

(ஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 555)
தோணியில் நாம்அங்கிருந்த வண்ணம் தூமறை வீழிமிழலை தன்னுள்
சேணுயர் விண்ணின்று இழிந்த இந்தச் சீர்கொள் விமானத்துக் காட்டுகின்றோம்
பேணும் படியால் அறிதி என்று பெயர்ந்தருள் செய்யப், பெரும்தவஙகள்
வேணுபுரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத்தொடும் உணர்ந்தார்

(4)
பிள்ளையார் உறக்கம் நீங்கியெழுந்து, உடலெங்கும் புளகமுற, இறைவரின் திருக்குறிப்பை உணர்ந்து அதிசயம் அடைகின்றார். அன்றைய காலைப் பொழுதில், உச்சி கூப்பிய கையினராய் ஆலயத்துள் செல்ல, விமானத்தருகில் தோணிபுரத்துறையும் வேதமுதல்வர் திருக்காட்சி அளித்துப் பேரருள் புரிகின்றார், 

(ஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 556)
அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சிமேல் அங்கை கூப்பி
வெறியுற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண்ணிழி கோயிலில் சென்று புக்கு
மறியுற்ற கையரைத் தோணிமேல் முன்வணங்கும்படி அங்குக் கண்டு வாழ்ந்து
குறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார்

(5)
சிவஞானப் பிள்ளையார் இறைவரின் பேரருட்திறத்தினை வியந்து, உளமெலாம் உருகி, சீகாழியுறைப் பரம்பொருளே, அடியவனை ஆட்கொண்ட தலைவனே, முக்கண் முதல்வனே, நீ இவ்விதமாய் மிழலையில் தோன்றியருளும் காரணம் என்னவோ ஐயனே?' என்று வினவு முகமாகத் திருப்பதிகமொன்றினை அருளிச் செய்கின்றார்,

(திருவீழிமிழலை - ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1):
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற வாள்நுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழியா மறையோர்கள்ஏத்தப் புகலி நிலாவிய புண்ணியனே
எம்இறையே; இமையாத முக்கண் ஈச; என்நேச; இதென்கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே

(7)
பின்னர் பிள்ளையார் சீகாழி அந்தணர்களிடம், 'தொண்டரொடு யாம் காதலுடன் பல தலங்களைத் தரிசித்து வரும் திருக்குறிப்பால் புகலிப் பெருமான் தன் திருக்கோலத்தினை இவ்விடத்தே காட்டியருளினான்' என்றருளிச் செய்து, அவர்களுக்கு விடை கொடுத்து அருள் செய்கின்றார். மறையோர்களும் பிள்ளையாரின் திருவடி தொழுது, கவுணியர் குலத் தோன்றலைப் பிரிய மனமில்லாதவர்களாய் ஒருவாறு திரும்பிச் செல்கின்றனர்.

திருஞானசம்பந்தர் (திருவியலூரில் பெற்ற திருக்காட்சி):

(1)
ஞானசம்பந்த மூர்த்தி கஞ்சனூர்; மாந்துறை; திருமங்கலக்குடி முதலிய தலங்களைத் தரிசித்துப் போற்றியவாறே, தஞ்சை மாவட்டத்தில்; காவிரியின் வடகரையிலுள்ள திருவியலூரைச் சென்று சேர்கின்றார் (தற்கால வழக்கில் திருவிசநல்லூர்). இங்கு சிவபரம்பொருள் யோகானந்தீஸ்வரர்; புராதனேஸ்வரர்; வில்வாரண்யேஸ்வரர் எனும் திருநாமங்களிலும், உமையன்னை சாந்தநாயகி; சௌந்தர நாயகி எனும் திருப்பெயர்களோடும் எழுந்தருளி இருக்கின்றனர். சடாயு பூசித்துப் பேறு பெற்றுள்ள திருத்தலம்.

(2)
சீர்காழிச் செல்வர் இறைவரின் திருமுன்பாகச் சென்று பணிந்து, 'குரவம்கமழ்' எனும் பாமாலையால் ஆதிமூர்த்தியைப் போற்றி செய்யத் துவங்குகின்றார், 

(திருவியலூர் - ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
குரவம்கமழ் நறுமென்குழல் அரிவைஅவள் வெருவப்
பொருவெங்கரி படவென்றதன் உரிவை உடலணிவோன்
அரவும் மலைபுனலும் இளமதியும் நகுதலையும்
விரவும்சடை அடிகட்கிடம் விரிநீர் வியலூரே

(3)
ஆளுடைப் பிள்ளையார் உளமுருகப் பாடுகையில், கருவறையுள் யோகானந்தீஸ்வரப் பரம்பொருள் நேரில் எழுந்தருளித் தோன்றுகின்றார், ('அங்கண் அமர்வார் தம்முன்னே அருள்வேடம் காட்ட' என்றிதனைத் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார்),

(திருஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 294)
வெங்கண் விடைமேல் வருவார் வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப்பதிகத் தொடை சாத்தி
அங்கண் அமர்வார் தம்முன்னே அருள்வேடம் காட்டத் தொழுது
செங்கண் மாலுக்கு அரியார்தம் திருந்துதேவன்குடி சேர்ந்தார்

(4)
சீகாழி அண்ணலார் 5ஆம் திருப்பாடலில் 'கண்ணார் தரும் உருவாகிய கடவுள் இடம்' என்று இறைவர் திருக்காட்சி அளித்தருளிய பேரருள் திறத்தினை வியந்து போற்றுகின்றார்,

(திருவியலூர் - ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 5)
எண்ணார்தரு பயனாய்; அயன்அவனாய்; மிகு கலையாய்ப்
பண்ணார்தரு மறையாய்; உயர் பொருளாய்; இறை அவனாய்க்
கண்ணார் தரும் உருவாகிய கடவுள் இடம் எனலாம்
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரிநீர் வியலூரே

திருஞானசம்பந்தர் (நாவுக்கரசு சுவாமிகளுடனான முதல் சந்திப்பு):

ஞானசம்பந்தப் பெருமானாரும் அப்பர் சுவாமிகளும் மும்முறை (வெவ்வேறு சமயங்களில்) சந்தித்து அளவளாவி மகிழ்ந்துள்ளதாக சேக்கிழார் பெருமானார் பதிவு செய்கின்றார். அவற்றுள் முதல் சந்திப்பு குறித்த சில இனிய குறிப்புகளை இப்பதிவில் நினைவு கூர்ந்து மகிழ்வோம், 

(1)
நாவுக்கரசு சுவாமிகள் சீகாழிப் பிள்ளையாரின் அற்புதங்களைக் கேள்வியுற்று, அவரைத் தரிசித்து வணங்கப் பெரும் காதலோடு சீகாழி நோக்கி எழுந்தருளி வருகின்றார். சுவாமிகளின் வருகையினைக் கேள்வியுறும் சீகாழி வள்ளல் 'முன்செய் தவப்பயனால் சுவாமிகளின் தரிசனமாகிய இப்பேறு கிட்ட உள்ளது' என்று உளத்துள் கருதியவாறு, பெருவிருப்பமொடு சுவாமிகளை எதிர்கொண்டு அழைக்க, தொண்டர் குழாத்தொடு விரைகின்றார், 

(ஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 269)
வாக்கின் பெருவிறல் மன்னர் வந்தணைந்தார் எனக் கேட்டுப்
பூக்கமழ் வாசத் தடஞ்சூழ் புகலிப் பெருந்தகையாரும்
ஆக்கிய நல்வினைப் பேறென்று அன்பர் குழாத்தொடும் எய்தி
ஏற்கும் பெருவிருப்போடும் எதிர்கொள எய்தும் பொழுதில்

(2)
நாவுக்கரசு சுவாமிகளின் திருவேடத்தினைத் தெய்வச் சேக்கிழார் பின்வரும் திருப்பாடலில் அற்புதத் தன்மையில் காட்சிப் படுத்துகின்றார்.

சிந்தையில் (இறைவர் பாலும், அடியவர்களின் பாலும் கொண்டொழுகும்) இடையறா அன்பும், (வயது முதிர்ச்சியின் காரணமாக) திருமேனியில் அசைவும், திருமேனியில் பொருந்தியிருக்கும் கந்தைத் துணியே மிகைபோலும் என்றெண்ண வைக்கும் துறவுக் கோலமும், கைகளில் உழவாரப் படையும், (திருவருளின் திறத்தை எந்நேரமும் நினைந்துருகுவதால்) கண்களில் கண்ணீர் மழையும், திருநீற்றுக் கோலமும் கொண்டு அந்தமில்லாத திருவேடத்தினரான நாவுக்கரசு பெருமானார் எழுந்தருளி வருகின்றார், 

(ஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 270)
சிந்தை இடையறா அன்பும், திருமேனி தன்னில் அசைவும்
கந்தை மிகையாம் கருத்தும், கைஉழவாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும், வடிவில் பொலி திருநீறும்
அந்தமிலாத் திருவேடத்து அரசும் எதிர்வந்தணைய

(3)
சுவாமிகளைத் தரிசிக்கும் பிள்ளையார் 'இது நாள் வரையிலும் கருத்தில் வைத்துப் போற்றி வந்த மெய்த்தொண்டரின் திருவேடம் இன்றொரு உருவம் கொன்டது போல் இப்பெரியர் எழுந்தருளி வருகின்றனரே' என்று தொழுதவாறே சுவாமிகளை எதிர்கொள்கின்றார், 

(ஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 271)
கண்ட கவுணியக் கன்றும் கருத்தில் பரவு மெய்க்காதல்
தொண்டர் திருவேடம் நேரே தோன்றியதென்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்தங்கு அரசும் எதிர் வந்திறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழிஅருள் செய்தார்

(4)
இனி இந்நிகழ்வின் தொடர்ச்சியினை, அப்பர் சுவாமிகள் புராணத்தில் இடம்பெறும் பின்வரும் திருப்பாடலின் வாயிலாக உணர்ந்து மகிழ்வோம்,

சுவாமிகள் தொண்டர்கள் திருக்கூட்டத்தில் விரைந்து முன்னேறிச் சென்று சிவஞானப் பிள்ளையாரின் திருவடிகளை வணங்க, சீகாழி அண்ணலார் தன் மலர்க் கரங்களால் சுவாமிகளை எடுத்துத் தாமும் தொழுது, அதீத மதிப்பும் அன்பும் மேலிட 'அப்பரே' என்று அழைத்தருள, சுவாமிகள் 'அடியேன்' என்று அருளிச் செய்கின்றார், 

(அப்பர் சுவாமிகள் புராணம் - திருப்பாடல் 182)
தொழுதுஅணைவுற்று ஆண்டஅரசு அன்புருகத் தொண்டர் குழாத்திடையே சென்று
பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப் பணிந்தவர்தம் கரங்கள் பற்றி
எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி விடையின்மேல் வருவார் தம்மை
அழுதழைத்துக் கொண்டவர்தாம் 'அப்பரே' என, அவரும் அடியேன் என்றார்

திருஞானசம்பந்தர் (திருவாரூர் திருக்கோயிலில் தோன்றிய பேரொளிப் பிழம்பு):

ஞானசம்பந்த மூர்த்தி, எண்ணிறந்த தொண்டர்களும் உடன்வர, திருவாரூர் திருக்கோயிலின் பிரதான கோபுர வாயிலை வணங்கி, ஆலய வளாகத்துள் செல்கின்றார். அங்கு அளப்பிலா சிறப்பு பொருந்திய நீண்ட ஒளிப்பிழம்பின் வரிசையினைத் தரிசிக்கின்றார்.

அச்சிவஒளி சுட்டும் மார்க்கத்தில் சென்று, ஒப்புவமையிலா தேவாசிரியன் மண்டபத்தினை ஆளுடைப் பிள்ளையார் வீழ்ந்து வணங்கியதாக தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார். 

(ஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 509)
மன்னு தோரண வாயில்முன் வணங்கிஉள் புகுவார்
தன்னுள் எவ்வகைப் பெருமையும் தாங்கிய தகைத்தாம்
பன்னெடும் சுடர்ப் படலையின் பரப்பினைப் பார்த்துச்
சென்னி தாழ்ந்து தேவாசிரியன் தொழுதெழுந்தார்

('அம்பிகையிடம் சிவஞானம் உண்ட பண்பினர் ஆதலின் சீகாழிப் பிள்ளையாருக்குச் சிவச்சுடரான இப்பேரொளி தரிசனம் கிட்டியது' என்பர் சமயச் சான்றோர்).

திருஞானசம்பந்தரும் அப்பர் சுவாமிகளும் (திருமறைக்காட்டில் நெகிழ்விக்கும் தரிசன அனுபவம்):

நாகப்பட்டின மாவட்டத்தில், காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது திருமறைக்காடு (வேதாரண்ய ஷேத்திரம்). இங்கு வேதாரண்யேஸ்வரப் பரம்பொருள் சிவலிங்கத் திருமேனியிலும், அதன் பின்னே அம்மையோடு கூடிய உருவத் திருமேனியிலும் அற்புதத் தன்மையில் எழுந்தருளி இருக்கின்றார். 

(1)
சம்பந்தப் பெருமானாரும் நாவுக்கரசு சுவாமிகளும் தல யாத்திரையாய்ச்  செல்லும் வழியில் இத்தலத்திற்கு வருகை புரிகின்றனர். இங்கு பன்னெடும் காலமாய் வேதங்களால் திருக்காப்பிடப் பெற்றிருந்த பிரதான கோபுர வாயிலைத் திறப்பிக்குமாறு அப்பர் சுவாமிகள் இறைவரிடம் விண்ணப்பித்து திருப்பதிகமொன்றினை அருளிச் செய்கின்றார். 

(2)
பின்னர் அவ்வாயிலின் வழியே இருபெரும் குருநாதர்களும் உச்சி கூப்பிய கையினராய் ஆலயத்துள் செல்கின்றனர். மூலக் கருவறையில் தாயினும் இனிய வேதவனப் பரம்பொருளைத் தரிசிக்கின்றனர், கண்களிலிருந்து அருவியாய் நீர் பெருகியோட, மேனி விதிர்விதிர்த்த நிலையில் நிலத்தில் திருமேனி பொருந்துமாறு விரைந்து வீழ்ந்து வணங்குகின்றனர்,

(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 584):
கோயிலுள் புகுவார் உச்சி குவித்த செங்கைகளோடும்
தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரைக் கண்டார்
பாயுநீர் அருவி கண்கள் தூங்கிடப் படியின் மீது
மேயின மெய்யராகி விதிர்ப்புற்று விரைவில் வீழ்ந்தார்

(3)
எல்லையில்லாத அன்பு மேலிடச் சிவானந்த வெள்ளத்தில் மூழ்குகின்றனர். உளமெலாம் நெகிழ்ந்து, எலும்புகளும் உருகுமாறு அம்மையப்பரைத் தரிசித்து, மீண்டும் மீண்டும் வீழ்ந்து பணிவதும் எழுவதுமாய், அதீத நெகிழ்ச்சியினால் நிற்கவும் இயலாமல்,  மொழிகள் தடுமாறிய நிலையிலேயே பாமாலைகளால் போற்றி செய்கின்றனர், 

(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 585):
அன்பினுக்களவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி
என்பு நெக்குருக நோக்கி இறைஞ்சிநேர் விழுந்த நம்பர்
முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி
மின்புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார்

(4)
எத்தகு உன்னதமான அனுபவம், இறைவரிடத்து கொள்ளும் அன்பின் அதீத முதிர்வே இத்தகைய பக்தி, சிவஞானப் பெருநிலையில் நின்றிருந்தும் இப்பெருமக்கள் எவ்விதம் உருகி உருகி வழிபடுகின்றனர் என்று எண்ணுந்தோறும் உள்ளம் நெகிழுமன்றோ! கல்லைப் பிசைந்து கனியாக்கி என்று இதனையே நம் மணிவாசகப் பெருந்தகையார் போற்றுகின்றார். 

ஆலயங்களில் வழிபடும் பொழுது, இப்பெருமக்களின் தரிசன அனுபவத்தில், கோடியில் ஒரு பங்கேனும் நமக்கு சித்திக்க வேண்டும் என்பதே நம்முடைய விண்ணப்பமாக இருத்தல் வேண்டும்.