திருநாவுக்கரசர் (கனவில் அருள் பெற்ற திருத்தலங்கள்):

அப்பர் சுவாமிகள் திருமறைக்காட்டில் (ஞானசம்பந்த மூர்த்தியுடன்) எழுந்தருளியிருந்த சமயத்தில், நள்ளிரவு வேளையில் இறைவர் சுவாமிகளின் கனவில் தோன்றி 'நாம் வாய்மூரில் இருப்போம், தொடர்ந்து வருவாய்' என்றருள் புரிந்த நிகழ்வினைப் பெரிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார் (திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 276).  

அடிகளும் இந்நிகழ்விற்கென ஒரு திருப்பதிகத்தையே அருளிச் செய்துள்ளார்,

(திருவாய்மூர் - 'எங்கே என்னை' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 2)
மன்னு மாமறைக் காட்டு மணாளனார்
உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத்
தன்னை வாய்மூர்த் தலைவனாமா சொல்லி
என்னை வாவென்று போனார் அதென்கொலோ

இனி இப்பதிவில் நம் சுவாமிகள் கனவில் அருள் பெற்றுள்ள மேலும் 5 திருத்தலங்களை, அடிகளின் திருப்பாடல்கள் வாயிலாகவே சிந்தித்து மகிழ்வோம், 

(1)
பின்வரும் திருவொற்றியூர் திருப்பாடலில், 'கண்டேன்நான் கனவகத்தில், கண்டேற்கு எந்தன் கடும்பிணியும் சுடுந்தொழிலும் கைவிட்டவே' என்று பதிவு செய்கின்றார்,

(திருவொற்றியூர் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 1)
வண்டோங்கு செங்கமலம் கழுநீர் மல்கும்
    மதமத்தம் சேர் சடைமேல் மதியம் சூடித்
திண்தோள்கள் ஆயிரமும் வீசி நின்று
    திசைசேர நடமாடிச் சிவலோகனார்
உண்டார் நஞ்சுலகுக்கோர் உறுதி வேண்டி
    ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார்
கண்டேன்நான் கனவகத்தில் கண்டேற்கு எந்தன் 
    கடும்பிணியும் சுடுந்தொழிலும் கைவிட்டவே

(2)
பின்வரும் நல்லூர் திருப்பாடலில், 'நல்லூர்உறை நம்பனை நானொருகால் துஞ்சிடைக் கண்டு கனவின் தலைத்தொழுதேற்கு' என்று குறிக்கின்றார்,

(திருநல்லூர் - 'அட்டுமின் இல்பலி' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 4)
செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்தனைய
நஞ்சணி கண்டன், நல்லூர்உறை நம்பனை நானொருகால்
துஞ்சிடைக் கண்டு கனவின் தலைத்தொழுதேற்கு, அவன்தான்
நெஞ்சிடை நின்றகலான் பலகாலமும் நின்றனனே 

(3)
பின்வரும் காஞ்சீபுரத் திருப்பாடலில், 'எம்மை இன்துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே' என்று போற்றுகின்றார்,

(திருக்கச்சி ஏகம்பம் - 'நம்பனை' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 9)
பொன்திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந்தண் மார்பர்
நன்றியில் புகுந்தென்உள்ள(ம்) மெள்ளவே நவில நின்று
குன்றியில் அடுத்த மேனிக் குவளையம் கண்டர் எம்மை
இன்துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே

(4)
சுவாமிகள் புகலூரில் அருளிச் செய்துள்ள பின்வரும் பொதுத் திருப்பதிகப் பாடலில், 'சிட்டனைத் திருஆலவாயில் கண்டேன், தேவனைக் கனவில்நான் கண்டவாறே' என்று சொக்கநாதப் பரம்பொருள் கனவில் தோன்றியருளிய நிகழ்வினைக் குறிக்கின்றார். இத்திருப்பதிகத்தின் 11 திருப்பாடல்களில் , இந்த 6ஆம் திருப்பாடல் தவிர, வேறெந்த தலத்தையும் சுவாமிகள் குறிக்கவில்லை, இறைவரின் திருக்காட்சி மட்டுமே விவரிக்கப் பெற்றுள்ளது, 

('அண்டம் கடந்த' எனும் பொதுத் திருப்பதிகம் -- திருப்பாடல் 6)
பட்டமும் தோடுமோர் பாகம் கண்டேன்
    பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டி நின்று இலயங்கள் ஆடக் கண்டேன்
    குழைகாதில் பிறைசென்னி இலங்கக் கண்டேன்
கட்டங்கக் கொடிதிண்தோள் ஆடக் கண்டேன்
    கனமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருஆலவாயில் கண்டேன்
    தேவனைக் கனவில்நான் கண்டவாறே

(5)
பின்வரும் திருவதிகை திருப்பாடலில் 'கனவின்கண் திருவுருவம் தான் காட்டும்மே' என்று குறிக்கின்றார். இங்கு நம் சுவாமிகள் 'கண்டேன்' என்று நேரிடையாக குறிக்கவில்லை. ஆதலின் 'அடியவர்களின் கனவினில் இறைவர் தோன்றி அருள் புரியும் தன்மையினைக் குறிப்பதாகவும்' பொருள் கொள்ளலாம், அல்லது சுவாமிகளின் அனுபவ வாக்காகவும் கருதலாம், 

(திருவதிகை - 'சந்திரனை மாகங்கை' எனும் அப்பர் தேவாரம் - திருப்பாடல் 7)
குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை
    குறள்பூதம் முன்பாடத் தான் ஆடும்மே
கழலாடு திருவிரலால் கரணம் செய்து
    கனவின்கண் திருவுருவம் தான் காட்டும்மே
எழிலாரும் தோள்வீசி நடமாடும்மே
    ஈமப் புறங்காட்டில் ஏமம்தோறும்
அழலாடுமே, அட்ட மூர்த்தியாமே
    அவனாகில் அதிகை வீரட்டனாமே

சுந்தரர் தேவாரத்தில் நாவுக்கரசு சுவாமிகள் பற்றிய இனிய குறிப்புகள்:

(1)
(திருவாரூர் - திருத்தொண்டர் தொகை - திருப்பாடல் 4)
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
    திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்

(2)
வீழிமிழலையில் ஞானசமபந்த மூர்த்தி மற்றும் அப்பர் சுவாமிகளுக்கு இறைவர் படிக்காசு நல்கியருளிய நிகழ்வு,

(திருவீழிமிழலை - 'நம்பினார்க்கு அருள்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 8)
இருந்து நீர் தமிழோடு இசைகேட்கும்
    இச்சையால் காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே

(3)
மற்றுமொரு முறை அப்பர் சுவாமிகள் படிக்காசு பெற்ற நிகழ்வு,

(திருநாகைக்காரோணம் - 'பத்தூர் புக்கிரந்துண்டு' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 7)
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
    நிறை மறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசருளிச் செய்தீர் இன்றெனக்கருள வேண்டும் 
    கடல்நாகைக் காரோணம் மேவியிருந்தீரே

(4)
(திருவலிவலம் - 'ஊனங்கத்து உயிர்ப்பாய்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 5)
நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கு 
    அரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானை

(5)
இத்திருப்பாடலில் சுந்தரனார் 8 நாயன்மார்களின் திருப்பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் புரிந்த ஓரோர் செயல் உலகியல் பார்வையில் குற்றமாகக் கருதப் பெறினும், அதனைக் குணமெனக் கொண்டருளும் இறைவரின் பேரருளை வியந்து போற்றுகின்றார். அப்பர் சுவாமிகளை எய்திய குற்றமாக வன்தொண்டர் குறிப்பது 'முற்பகுதியில் புறச்சமயமான சமணத்தில் தொடக்குண்டது',

(திருப்புன்கூர் - 'அந்தணாளன்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 4)
நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
    நாவினுக்கரையன் நாளைப் போவானும்
கற்ற சூதன் நற்சாக்கியன் சிலந்தி
    கண்ணப்பன் கணம்புல்லன் என்றிவர்கள்
குற்றம் செய்யினும் குணமெனக் கருதும் 
    கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்திரள் மணிக்கமலங்கள் மலரும்
    பொய்கைசூழ் திருப்புன்கூர் உளானே

(6)
இத்திருப்பாடலில் சுந்தரனார் 'நம் அப்பர் சுவாமிகள் 4900 பனுவல்களை அருளிச் செய்ததாக' குறிக்கின்றார், இதனை 4900 பாடல்கள் - 490 திருப்பதிகங்கள் என்று பொருள் கொள்வோரும் உளர், 4900 திருப்பதிகங்கள் என்று கூறுவோரும் உளர்,

(திருநின்றியூர் - 'திருவும் வண்மையும்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 2)
இணைகொள் ஏழெழு நூறிரும் பனுவல்
    ஈன்றவன் திருநாவினுக்கு அரையன்
கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற
    காதல் இன்னருள் ஆதரித்து அடைந்தேன்
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியும் 
    செல்வத் தென்திரு நின்றியூரானே

(7)
(திருக்கேதாரம் - 'வாழ்வாவது மாயம்' எனும் திருப்பதிகம் - திருப்பாடல் 10)
நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம்பந்தன்
யாவர் சிவனடியார்களுக்கு அடியான் அடித் தொண்டன்
தேவன் திருக்கேதாரத்தை ஊரன் உரை செய்த
பாவின் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே

திருநாவுக்கரசர் வாழ்ந்த இல்லம் (அப்பர் சுவாமிகள் திருக்கோயில், திருவாமூர் - கடலூர் மாவட்டம்):

அப்பர் சுவாமிகள் மற்றும் அவர்தம் தமக்கையார் திலகவதிப் பிராட்டியார் இருவரும் அவதரித்து, தாய்;தந்தையரான புகழனார்; மாதினியாருடன் இளம் பிராயத்தில் வாழ்ந்திருந்த இல்லமானது திருவாமூர் திருத்தலத்தில் அமைந்துள்ளது. சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி வாழ் அன்பர்களும், அடியவர் பெருமக்களும் இதனை அப்பர் சுவாமிகள் திருக்கோயிலாகப் புதுப்பித்துள்ளனர். திருப்புகழ் தலமான பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது இவ்வரிய திருக்கோயில்.

கருவாய்க் கிடந்துன் கழலே நினையும் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே

எம்பிராட்டி திலகவதியார்:

திருத்தொண்டின் வேந்தரான நம் நாவுக்கரசு சுவாமிகளுக்குக் குருவாகத் திகழ்ந்து, திருநீறு பூசி, சிவமாம் பரம்பொருளின் திருவடிகளுக்கு ஆட்படுத்தி அருள் புரிந்த தபோதனியார். 'தூண்டு தவ விளக்கனையார்' என்று இந்த அம்மையாரைப் போற்றிப் பணிகின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமானார்,

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 34)
தம்பியார் உளராக வேண்டுமென வைத்த தயா
உம்பருலகு அணையவுறு நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன் மணிநூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதியார் இருந்தார்

சுந்தரர் (பெரிய புராணத்தில் சுந்தரர் வரலாறு இடம்பெறும் பகுதிகள்):

திருமலைச் சருக்கத்தோடு கூடிய 73 பகுதிகளைக் கொண்ட பெரிய புராணம் சுந்தரரில் துவங்கி சுந்தரரில் முடிவுறுகிறது (முதலில் வெள்ளானைச் சருக்கம்; பின்னர் சுந்தரர் நீங்கலாக 62 நாயான்மார்கள்; 9 தொகையடியார்கள் ஆகியோருக்கு ஓரோர் பகுதி; இறுதியில் நிறைவுப் பகுதியான வெள்ளானைச் சருக்கம்). 

திருத்தொண்டர் புராணத்தின் காவிய நாயகர் நம் சுந்தர மூர்த்தி சுவாமிகளே. ஆதலின் வன்தொண்டரின் திருப்பெயர் கொண்ட ஒரு தனிப்பகுதி என்பதில்லாமல், பின்வரும் 7 பிரதானப் பகுதிகளில் தம்பிரான் தோழரின் வரலாற்றினைத் தெய்வச் சேக்கிழார் விவரித்துப் போற்றுகின்றார்.

(திருமலைச் சருக்கம்): 
நம்பியாரூரர் அவதார நோக்கத்தில் துவங்கி, திருமண நிகழ்வில் தடுத்தாட்கொள்ளப் பெறுதல்; திருவதிகையில் திருவடி தீட்சை, சிதம்பர தரிசனம்; சீர்காழி எல்லையில் சிவ தரிசனம்; திருவாரூரில் தம்பிரான் தோழராதல்; பரவையாருடனான திருமணம் ஆகிய நிகழ்வுகளில் பயணித்துப் பின்னர் தேவாசிரியன் மண்டபத்தில் திருத்தொண்டர் தொகையினை அருளிச் செய்யும் நிகழ்வு வரையில் இப்பகுதி விவரிக்கின்றது. 

(விறன்மிண்ட நாயனார் புராணம்): 
விறன்மிண்டனார் சுந்தரரின் மீது முனிவு கொள்ளுதல்; பின்னர் வன்தொண்டர் அருளிச் செய்த திருத்தொண்டர் தொகையினைச் செவிமடுத்து அகமிகக் குளிர்ந்து வன்தொண்டரை வாழ்த்துதல்' முதலிய அரிய நிகழ்வுகள் (11 திருப்பாடல்களைக் கொண்ட) இப்புராணத்தில் மட்டுமே பேசப் பெறுகின்றது. 

(சோமாசி மாற நாயனார் புராணம்) 
சோமாசி மாற நாயனார் சுந்தரருடன் பெருநட்பு பேணிய அரியதொரு குறிப்பு (6 திருப்பாடல்களைக் கொண்ட) இப்பகுதியில் மட்டுமே பேசப் பெறுகின்றது. 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்):
குண்டையூரிலுள்ள நெல்மலைகளைச் சிவகணங்கள் திருவாரூரில் சேர்ப்பிக்கும் நிகழ்வில் துவங்கி, புகலூரில் பொன் பெறுதல்; முதுகுன்ற ஆற்றிலிட்டுத் திருவாரூர் குளத்தில் பொன்னை எடுத்தல்; இருவேறு தலங்களில் இறைவரால் பசி நீங்கப் பெறுதல்; ஒற்றியூரில் சங்கிலியாருடன் திருமணம்; கண் பார்வை மறைதல்; காஞ்சி  மற்றும் திருவாரூரில் இழந்த கண் பார்வையைப் பெற்று மகிழ்தல்; பரவையாரிடம் சிவபெருமான் தூது; கலிக்காம நாயனார் முனிவு கொண்டு பின்னர் நட்பு பாராட்டுதல்; கலிக்காமருடன் திருப்புன்கூர் தல தரிசனம் முதலிய பிரதான நிகழ்வுகள் இப்பகுதியில் பேசப்பெறுகின்றன. 

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்):
சேரமான் பெருமாள் நாயனார் அறிமுகப் படலத்தில் துவங்கி, சேரனாருக்கு இறைவர் சுந்தரரை அறிவித்தல்; சேரர்கோன் சுந்தரரோடு நட்பு பாராட்டுதல்; சுந்தரரோடு திருத்தல யாத்திரை; வன்தொண்டர் சேரனாருடன் அஞ்சைக்களம் செல்லுதல்; அஞ்சைக்கள தரிசனம்; திருவாரூருக்கு மீள வருதல்; திருமுருகன்பூண்டியில் வேடர் பரி நிகழ்வு முதலிய பிரதான நிகழ்வுகளை இப்பகுதி விவரிக்கின்றது. 

(பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்)
சுந்தரரின் சமகாலத்து நாயனார். 'வன்தொண்டரை அகக் கண்களால் மட்டுமே தரிசித்து அவரைத்தம் ஞானகுருவெனக் கொண்டு போற்றி, தம்பிரான் தோழருக்கு ஒரு நாள் முன்னரே திருக்கயிலை ஏகிய' அற்புத நிகழ்வு இப்புராணத்தில் மட்டுமே பேசப் பெறுகின்றது. 

(வெள்ளானைச் சருக்கம்):
சுந்தரர் 2ஆம் அஞ்சைக்கள யாத்திரையில் துவங்கி, முதலை வாயியினின்றும் மாண்ட பிள்ளையை மீண்டெழச் செய்தல்; சேரர்கோன் அரண்மையில் தங்கியிருத்தல்; அவதார நிறைவிற்காக இறைவரிடம் விண்ணப்பித்தல்; வெள்ளை யானையில் திருக்கயிலை யாத்திரை; சேரர்கோனுடன் திருக்கயிலைப் பதம் பெற்று மகிழ்தல்; ஆகிய பிரதான நிகழ்வுகள் இப்பகுதியில் விவரிக்கப் பெறுகின்றன. 

உபமன்யு மாமுனிவர் போற்றும் ஆடி சுவாதி நாயகன்:

தெய்வச் சேக்கிழார் அருளியுள்ள பெரிய புராணம் சுந்தரரில் துவங்கி சுந்தரரிலேயே நிறைவுறுகின்றது. இனி இப்பதிவில் சுந்தரனார் தொடர்பான பெரிய புராணத் துவக்க நிகழ்வுகளை சிந்தித்து மகிழ்வோம்,

(1)
திருக்கயிலை மலையடிவாரத்தில், எவரொருவராலும் இத்தன்மையர் என்றறியவொண்ணா சிவபரம்பொருளை இடையறாது தியானிக்கும் பெருஞ்சிறப்பினை உடைய உபமன்யு முனிவர், சிவயோகியர் திருக்கூட்டத்தின் நடுநாயகமாய் எழுந்தருளி இருக்கின்றார்,  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 23)
அன்ன தன்திருத் தாழ்வரையின் இடத்து
இன்ன தன்மையன் என்றறியாச் சிவன்
தன்னையே உணர்ந்(து) ஆர்வம் தழைக்கின்றான்
உன்னரும் சீர் உபமன்னியமுனி

(2)
இம்மாமுனிவர், யாதவ குலத் தோன்றலாகவும்; துவாரகை வேந்தராகவும்; கீதாச்சாரியனாகவும் விளங்கியருளும் மாபாரதக் கண்ணனுக்கு சிவதீட்சை அளித்தருளி, சிவசகஸ்ரநாமத்தையும் உபதேசித்து அருளிய பெரியர். நான்மறை முதல்வரான சிவமூர்த்திக்கான திருத்தொண்டில் ஆதிஅந்தமற்ற தனிச்சிறப்போடு விளங்கும் பெற்றியர்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 24)
யாதவன் துவரைக்(கு) இறையாகிய
மாதவன்முடி மேலடி வைத்தவன்
பூத நாதன் பொருவரும் தொண்டினுக்கு
ஆதியந்தம் இலாமை அடைந்தவன்

(3)
அவ்வேளையில் அங்கு ஓராயிரம் கதிரவர்கள் சேர்ந்தாற்போல் பேரொளிப் பிழம்பொன்று தோன்றக் கண்ட அம்முனிவோர்கள் 'இதென்ன அதிசயம்' என்று வியக்கின்றனர், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 26)
அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு
பொங்கு பேரொளி போன்றுமுன் தோன்றிடத்
துங்க மாதவர் சூழ்ந்திருந்தார்எலாம்
இங்கிதென் கொல் அதிசயம் என்றலும்

(4)
பிறைமதிப் பரம்பொருளின் திருவடிகளை இடையறாது சிந்திக்கும் தவ மேன்மையினால் அவ்வொளியின் மூலத்தை உணரப் பெறும் உபமன்யு முனிவர், 'நாவலூர் வேந்தரான வன்தொண்டப் பெருந்தகையார் தம்முடைய அவதாரம் நிறைவுற்றுத் திருவருளால் மீளவும் திருக்கயிலைக்கு எழுந்தருளி வருகின்றார்' என்று அறிவிக்கின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 27)
அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
சிந்தியா உணர்ந்(த) அம்முனி தென்திசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன்
எந்தையார் அருளால் அணைவான் என

(5)
அவ்வொளி தோன்றும் திசை நோக்கித் தொழும் உபமன்யு முனிவரின் செயல் குறித்து அம்முனிவர்கள் அதிசயமுற்று வினவுகின்றனர், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 28)
கைகள் கூப்பித் தொழுதெழுந்(து) அத்திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிடச்
செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர்

(6)
'ஐய, ஆதிமுதற் பொருளான சிவமூர்த்தியின் திருவடிகளன்றிப் பிறிதொருவரைத் தொழாத நியமமுடைய நீங்கள் இத்தன்மையில் தொழும் காரணம் யாதோ? என்று பணிந்து வினவ, உபமன்யு முனிவரும், 'முக்கண்ணுடை அண்ணலைத் தம்முடைய உள்ளத்தில் அளப்பரிய காதலுடன் இடையறாது போற்றிவரும் நம்பியாரூர் நம் அனைவராலும் தொழப்பெறும் தன்மையர்' என்றுரைத்துத் தம்பிரான் தோழர் எழுந்தருளி வரும் அத்திருக்காட்சியைப் பணிகின்றார்,  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 29)
சம்புவின் அடித்தாமரைப் போதலால்
எம்பிரான் இறைஞ்சாய் இஃதென் எனத்
தம்பிரானைத்தன் உள்ளம் தழீஇஅவன்
நம்பியாரூரன் நாம்தொழும் தன்மையான்

சுந்தரர் (கயிலையில் தோன்றிய காதலும், அவதார நோக்கமும்):

(1)
திருக்கயிலையில், சிவசாரூபம் பெற்றிருந்த உத்தமத் தொண்டரொருவர், சிவபரம்பொருள் சூடியருளும் திருமாலையினைத் தொடுத்தல்; அம்பிகை பாகனாருக்கு அருகில் திருநீற்றுப் பேழை தாங்கி நிற்றல் முதலிய அணுக்கத் தொண்டுகளைப் புரிந்து வருகின்றார்,     

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 31)
உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
வெள்ள நீர்ச்சடை மெய்ப் பொருளாகிய
வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்தணைவான் உளன்

(2) 
'ஆலால சுந்தரர்' எனும் திருநாமமுடைய அவர், திருமாலைத் தொண்டிற்கான மலர்களைக் கொய்துவரும் பொருட்டு திருக்கயிலைச் சாரலிலுள்ள நந்தவனமொன்றிற்குச் செல்கின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 32)
அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்
முன்னம் ஆங்கொரு நாள் முதல்வன் தனக்கு
இன்னவாம்எனும் நாள்மலர் கொய்திடத்
துன்னினான் நந்தனவனச் சூழலில்

(3)
அங்கு சுந்தரர் வரு முன்னமே; நால்வேதத் தலைவியாரான உமையன்னைக்கு அணுக்கத் தொண்டு புரிந்து வரும், அழகும் திருவும் பொலிந்து விளங்கும் பாவையர் இருவர் வருகை புரிகின்றனர்,  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 33)
அங்கு முன்னெமை ஆளுடை நாயகி
கொங்கு சேர்குழல் காமலர் கொய்திடத்
திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார்
பொங்குகின்ற கவினுடைப் பூவைமார்

(4)
கமலினி; அனிந்திதை எனும் திருநாமமுடைய அவ்விரு தேவியரும் அங்கு மலர் பறித்திருக்கையில், கயிலைப் பரம்பொருளான சிவமூர்த்தியின் திருவருள் ஏவ, 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 34)
அந்தமில்சீர் அனிந்திதை ஆய்குழல்
கந்த மாலைக் கமலினி என்பவர்
கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி
வந்து வானவர் ஈசர் அருளென

(5)
மாதவம் செய்த தென்திசை உய்வு பெற்றுச் சிறக்கவும்; ஒப்புவமையில்லா திருத்தொண்டர் தொகை எனும் பனுவலை அருளிச் செய்யவும், ஆலால சுந்தரரின் கண்களும் கருத்தும் கணநேரம் அம்மாதரின் பால் செல்கின்றது. அவ்விரு பாவையரின் காதல் பார்வையும் அணுக்கத் தொண்டரின் மீது பொருந்துகின்றது,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 35)
மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப்
போதுவார்அவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்

(6)
சுந்தரனார், மறுகணமே தன்னிலை உணர்ந்து, மலர் பறித்து மீண்டு ஆலமுண்டருளும் அண்ணலின் திருமுன்னர் சென்று தொழுகின்றார். பிறைமதிப் பரம்பொருளும் 'சுந்தரா! மாதர் மேல் மனம் வைத்தாய், ஆதலின் தென்னக பூமியில் பிறந்து அம்மாதருடன் காதலால் அணைவாய்' என்று கட்டளையிட்டு அருள் புரிகின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 37)
ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே
மாதர் மேல்மனம் வைத்தனை தென்புவி
மீது தோன்றிஅம் மெல்லியலாருடன்
காதல் இன்பம் கலந்(து) அணைவாய்என

(7)
'மன்மத தகனம் நிகழ்ந்தேறிய திருக்கயிலையில் காமமெனும் உணர்வு தோன்ற வாய்ப்பேயில்லை' என்று நம் வாரியார் சுவாமிகள் தெளிவுறுத்துவார். மேற்குறித்துள்ள 34ஆம் திருப்பாடலின் இறுதியில் 'ஈசர் அருளென' என்று தெய்வச் சேக்கிழார் குறித்துள்ளமையால், 'இச்செயல் சிவமூர்த்தியின் திருவருள் ஏவலால் நிகழ்ந்தேறியுள்ளது' என்பது தெளிவு ('ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே' என்பார் நம் அப்பர் அடிகள்).