திருநாவுக்கரசர் (திருக்கயிலையில் அருள் பெற்ற நிகழ்வு):

நாவுக்கரசு சுவாமிகள் வாரணாசியினின்றும் தனியே புறப்பட்டுத் திருக்கயிலை நோக்கிச் செல்கின்றார். எவருமே செல்ல அஞ்சும் கானக மார்க்கத்தில் இரவும் பகலும் சிவசிந்தையுடன் முன்னேறிச் செல்கின்றார். ஒரு நிலையில் காய்; கனிகள்; நீர் என்றிவற்றையும் தவிர்த்துச் சரீர சிந்தையொழித்துத் திருவருளை வழுத்தியவாறு பயணிக்கின்றார். பாதங்கள் கணுக்கால் வரையில் தேய்கின்றது, கரங்களின் உதவி கொண்டு முன்னேறிச் செல்கின்றார். 

மணிக்கட்டு வரையில் தசைகள் தேய்கின்றன. எனினும் அன்பு குன்றாதவராய் மார்பினால் தேய்த்துச் செல்கின்றார். மார்பின் தசைகளும் அழிந்து பட்டு எலும்புகளும் முறிகின்றன. திருவருளை நினைத்தவாறே புரண்டு செல்லத் துவங்குகின்றார். அதுவும் ஒரு நிலையில் இயலாது போக, அந்நிலையிலேயே அசைவற்று இருக்கின்றார். 

(1)
கயிலை முதல்வர் 'சுவாமிகளைக் கொண்டு மேலும் சில தேவாரப் பனுவல்களைப் பாடுவிக்கத் திருவுள்ளம் கொண்டிருந்த காரணத்தால், அடிகளை இதற்கு மேல் கயிலையை நெருங்க அருளாதவராய்', குளம் ஒன்றினைத் தோற்றுவித்து, முனிஒருவரின் உருவில் அங்கு எழுந்தருளித் தோன்றுகின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 361)
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்(கு) அருளார்
மன்னு தீந்தமிழ் புவியின்மேல் பின்னையும் வழுத்த
நன்னெடும் புனல் தடமும் ஒன்றுடன்கொடு நடந்தார்
பன்னகம் புனை பரமரோர் முனிவராம் படியால்

முனிவரான முதல்வர் 'திருக்கயிலையை அடைவது அரிது' என்று எடுத்துரைத்தும், அப்பர் அடிகள் உளஉறுதியோடு 'திருக்கயிலை நாதரைத் தரிசிக்காமல் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்' என்று உறுதிபடப் புகல்கின்றார். 

(2)
இறைவர் திருவுருவம் மறைத்து அசரீரியாய் 'ஓங்கு நாவுக்கரசனே எழுக' என்றருள் புரிய, தாண்டக வேந்தர் ஒளிமிகு தேகநலம் பெற்றெழுகின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 367)
ஆங்கு மற்றவர் துணிவறிந்(து) அவர்தமை அறிய
நீங்கு மாதவர் விசும்பிடைக் கரந்துநீள் மொழியால்
ஓங்கு நாவினுக்கரசனே எழுந்திர் என்றுரைப்பத்
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டெழுந்(து) ஒளி திகழ்வார்

அடிகள் அகம் குழைந்துருகி, 'அண்ணலே, விண்மிசை மறைந்து அருள் புரிகின்ற முதல்வா, உன் கயிலைக் கோலத்தினை காட்டியருள் புரிவாய் ஐயனே' என்று பணிய, இறைவரும் 'இங்குள்ள பொய்கையில் மூழ்கித் திருவையாறில் நமது கயிலைக் கோலம் காண்பாய்' என்றருள் புரிகின்றார்.

(3)
சுவாமிகள் கண்ணருவி பாய, உச்சி கூப்பிய கையினராய் 'வேற்றாகி விண்ணாகி' எனும் போற்றித் திருத்தாண்டகத்தால் கயிலைப் பரம்பொருளைத் தொழுதேத்திப் பின்னர் திருஐந்தெழுத்தை உள்ளத்து இருத்தியவாறே அப்பொய்கையுள் மூழ்குகின்றார்,

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 370)
ஏற்றினார்அருள் தலைமிசைக் கொண்டெழுந்(து) இறைஞ்சி
வேற்றுமாகி விண்ணாகி நின்றார் மொழி விரும்பி
ஆற்றல் பெற்றவர் அண்ணலார் அஞ்செழுத்தோதிப்
பால்தடம்புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்

(குறிப்பு: திருக்கயிலைக்கான மற்ற இரு போற்றித் திருத்தாண்டகங்களைத் திருவையாறில் கயிலைக்கோல தரிசன சமயத்தில் சுவாமிகள் பாடியதாக சேக்கிழார் பெருமானார் பதிவு செய்கின்றார்)

திருநாவுக்கரசர் (திருவையாறு குளத்திலிருந்து வெளிப்பட்ட அற்புத நிகழ்வு)

(1)
முக்கண் முதல்வரின் ஆணையை ஏற்று, இறைவர் கயிலையில் தோற்றுவித்த குளத்தில் மூழ்கி, மறுகணமே திருவையாற்றுத் திருக்குளத்தினின்றும் வெளிப்பட்டு வருகின்றார் நம் அப்பர் சுவாமிகள். 'ஆதிப் பரம்பொருளான சிவபெருமானின் திருவருள் பெருமையை யாரே அறிந்துணர வல்லார்?' என்று இந்நிகழ்வினை வியந்து போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார்.  

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 371)
ஆதி தேவர்தம் திருவருள் பெருமை யார்அறிவார்
போத மாதவர் பனிவரைப் பொய்கையில் மூழ்கி
மாதொர் பாகனார் மகிழும் ஐயாற்றிலோர் வாவி
மீது தோன்றி வந்தெழுந்தனர் உலகெலாம் வியப்ப

(2)
சுவாமிகள் கரைக்கு வந்து 'கயிலை நாயகரின் திருவருளும் இதுவோ?' என்று விழிநீர் பெருக்கி நெகிழ்கின்றார் ('இறைவர் தன் அருளினால் கயிலையில் ஒரு குளத்தைத் தோற்றுவிக்க, நம் சுவாமிகளோ இங்கு அன்பினால் பெருகும் கண்ணீரினால் மற்றொரு பொய்கையைத் தோற்றுவிக்கின்றார்' என்றிதனைச் சேக்கிழார் பெருமான் நயம்பட விவரித்துப் போற்றுகின்றார்).   

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 372)
வம்புலா மலர் வாவியின் கரையில் வந்தேறி
உம்பர் நாயகர் திருவருள் பெருமையை உணர்வார்
எம்பிரான் தரும் கருணைகொல் இதுஎன இருகண்
பம்பு தாரைநீர் வாவியில் படிந்தெழும் படியார்

(3)
குளக்கரையிலிருந்து திருவையாறு திருக்கோயில் நோக்கிச் செல்லுகையில், யானை; கோழி; குயில்; பேடை; மயில்; பகன்றில்; மான்; நாரை; கிளி; காளை இவைகள் யாவும் தத்தமது துணையோடு விளங்கியிருக்கக் காண்கின்றார். 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 373)
மிடையும் நீள்கொடி வீதிகள் விளங்கிய ஐயா(று)
உடைய நாயகர் சேவடி பணிய வந்துறுவார்
அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவுமான
புடை அமர்ந்ததம் துணையொடும் பொலிவன கண்டார்

(4)
காட்சி யாவும் சிவசக்தி மயமாய் விளங்கக் காண்கின்றார். எத்திசையிலும், எவ்வுயிரிலும் சிவசக்தியர் உயிர்க்குயிராய் எழுந்தருளி இருப்பதை காட்சி பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் தரிசித்தும் உணர்ந்தும் சிவானந்தம் எய்தியவாறே, ஐயாறு ஆலய வாயிலை வந்தடைகின்றார். 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 374)
பொன் மலைக் கொடியுடன்அமர் வெள்ளியம் பொருப்பில்
தன்மையாம் படி சத்தியும் சிவமுமாம் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே
மன்னு மாதவர் தம்பிரான் கோயில்முன் வந்தார்

திருநாவுக்கரசர் (திருவையாறில் கண்ட கயிலைக் காட்சி):

அப்பர் சுவாமிகள் கயிலை நாதரின் ஆணையினை ஏற்று, கயிலையில் இறைவர் தோற்றுவித்திருந்த குளத்தில் மூழ்கித் திருவருளால் திருவையாற்றுத் திருக்குளத்தினின்றும் வெளிப்பட்டு ஐயாறு ஆலய வாயிலை வந்திடைகின்றார். 

(1)
அக்கணமே ஐயாறு திருக்கோயில் மறைந்து, திசைகள் யாவிலும் திருக்கயிலைக் காட்சி நிறைந்து தோன்றுகின்றது. அங்கு அஷ்டலக்ஷ்மி நாயகரான ஸ்ரீமன் நாராயண மூர்த்தி; நான்முகக் கடவுள்; தேவேந்திரன் ஆகியோர் கயிலைப் பரம்பொருளான சிவமூர்த்தியைப் போற்றி செய்து வணங்கியிருக்கவும், ரிக்; யஜுர்; சாம; அதர்வணமாகிய நான்மறைகள் தனித்தனியே முழங்கியிருக்கவும் காண்கின்றார். 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 375)
காணும் அப்பெரும் கோயிலும் கயிலைமால் வரையாய்ப்
பேணு மால்அயன் இந்திரன் முதற்பெரும் தேவர்
பூணும் அன்பொடு போற்றிசைத்தெழும் ஒலி பொங்கத்
தாணு மாமறை யாவையும் தனித்தனி முழங்க

மேலும் தேவர்; தானவர்; சித்தர்; விச்சாதாரர்; இயக்கர்; மாதவ முனிவர்கள் ஆகிய எண்ணிறந்தோர் இருமருங்கிலும் நிறைந்து விளங்கிப் போற்றியிருக்கவும், தேவ அரம்பையர்கள் நடமிடவும், முழவொலி முழங்கியிருக்கவும், கங்கை உள்ளிட்ட நதி தேவதைகள் யாவும் வணங்கியிருக்கவும், சிவகணத் தலைவர்கள் பணிந்திருக்கவும், பூத வேதாள கணங்கள் சிவவாத்தியங்களை முழக்கியவாறு போற்றியிருக்கவும், இடப வாகனம் நின்றிருக்கவும், திருநந்திதேவர் அங்குள்ளோரை முறைப்படுத்தியிருக்கவும் பெருவியப்புடன் காண்கின்றார்.  

(2)
இறுதியாய் அவ்வெள்ளி மாமலையின் மிக உயர்ந்ததோர் பீடத்தில், இறைவரின் இடபாகத்து உரிமையுடைய; மரகதக் கொடி போலும்; உலகீன்ற நம் உமையன்னை அருகில் வீற்றிருக்க, பவளமலை போல் எழுந்தருளி இருக்கும்; ஆதிமுதற்பொருளான கயிலை மன்னவரைத் தரிசிக்கப் பெறுகின்றார் (வாக்கின் தனிஅரசரான) நம் சுவாமிகள். 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 379)
வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும்
தெள்ளு பேரொளிப் பவள வெற்பென இடப்பாகம்
கொள்ளு மாமலையாளுடன் கூட வீற்றிருந்த
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்

(3)
அம்மையப்பரின் தரிசனமாகிய அப்பேரின்பக் கடலைத் தன் இருவிழிகளாலும் முகர்ந்து முகர்ந்து பருகித் திளைக்கின்றார். உச்சி கூப்பிய கையினராய் எதிர் வீழ்ந்து பணிகின்றார். அகம் குழைந்துருக; மெய்யுணர்வினால் உடல் விதிர்விதிர்க்க, அச்சிவானந்தப் பெருநிலையில் சுவாமிகள் ஆடுகின்றார்; பாடுகின்றார்; அழுகின்றார்; தொழுகின்றார். 'இதற்கு மேல் சுவாமிகளுக்கு அங்கு நிகழ்ந்தவற்றை யாரே விளக்க வல்லார்? என்று நெகிழ்கின்றார் தெய்வச் சேக்கிழார். 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 380)
கண்ட ஆனந்தக் கடலினைக் கண்களால் முகந்து
கொண்டு கைகுவித்(து) எதிர் விழுந்தெழுந்து மெய்குலைய
அண்டர் முன்பு நின்றாடினார் பாடினார் அழுதார்
தொண்டனார்க்(கு) அங்கு நிகழ்ந்தன யார்சொல வல்லார்

(4)
சுவாமிகள் இச்சமயத்தில் 'பொறையுடைய பூமிநீரானாய் போற்றி'; 'பாட்டான நல்ல தொடையாய் போற்றி' எனும் இரு போற்றித் திருத்தாண்டகங்களை அருளிச் செய்கின்றார் ('வேற்றாகி விண்ணாகி' திருத்தாண்டகத்தை சுவாமிகள் கயிலையிலேயே அருளிச் செய்து விட்டதாகத் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார்)

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 381)
முன்பு கண்டு கொண்(டு), அருளின்ஆர் அமுதுண்ண மூவா
அன்பு பெற்றவர்; அளவிலா ஆர்வம்முன் பொங்கப்
பொன் பிறங்கிய சடையரைப் போற்று தாண்டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார்; எல்லையில் தவத்தோர்
-
(இறுதிக் குறிப்பு: கயிலைக் காட்சி மறைந்த பின்னரே 'மாதர்பிறைக் கண்ணியானை' திருப்பதிகத்தை நம் சுவாமிகள் பாடியதாகவும் சேக்கிழார் பெருமான் குறிக்கின்றார்)

திருநாவுக்கரசர் (திருப்பூவணத்தில் பெற்ற சிவ தரிசனக் காட்சி):

நம் அப்பர் சுவாமிகள் சிவபெருமானை (பிரத்யட்சமாக, சுய உருவுடன்) நேரில் தரிசித்தது மூன்று திருத்தலங்களில். முதல் தரிசனம் திருவாய்மூரில் (இந்நிகழ்வில் ஞானசம்பந்தப் பெருமானும் உடனிருக்கின்றார்), பின்னர் திருவையாறில் (திருக்கயிலைக் காட்சி பெறும் சமயத்தில்), இறுதியாக திருப்பூவண ஷேத்திரத்தில். இனி இப்பதிவில் திருப்பூவண தரிசன நிகழ்வினைச் சிந்தித்து மகிழ்வோம். 

திருத்தொண்டின் அரசர் 'திருஆலவாய்' எனும் மதுரை மாநகரினின்றும் புறப்பட்டு, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பூவணம் எனும் திருத்தலத்தினை வந்தடைகின்றார் (தற்கால வழக்கில் திருப்புவனம்). இங்கு ஆலமுண்டருளும் ஆதி முதல்வர் 'புஷ்பவனேஸ்வரர்' எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றார். 

சுவாமிகள் ஆலயத்துள் புகுந்து சென்று திருக்கருவறையில் அருவுருவில் எழுந்தருளி இருக்கும் புஷ்பவனேஸ்வரப் பரம்பொருளைத் தொழுது நிற்க, அடிமுடி அறியவொண்ணா திருப்பூவண அண்ணல் வெளிப்பட்டுத் தோன்றுகின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - திருப்பாடல் 407)
கொடிமாடம் நிலவு திருப்பூவணத்துக் கோயிலினுள்
நெடியானுக்(கு) அறிவரியார் நேர்தோன்றக் கண்டிறைஞ்சி
வடிவேறு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப்
பொடிநீடு திருமேனிப் புனிதர்பதி பிற பணிவார்

நாவுக்கரசு சுவாமிகள் அகமெலாம் குழைந்துருக, கண்ணருவி ஆறாய்ப் பெருக, உச்சி கூப்பிய கையினராய் முக்கண் முதல்வரைப் பன்முறை பணிந்தெழுகின்றார். தன்வயமற்றுச் சிவமாம் பெருவெள்ளத்தில் கரைந்தவராய்க் காண்பதற்கரிய அத்திருக்கோல வடிவத்தினை 11 திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார்,

(திருப்பூவணம் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 1)
வடியேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
    வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் 
    காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
    எழில்திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே!!

திருநாவுக்கரசர் (புகலூரில் சிவஜோதியில் கலந்த அற்புத நிகழ்வு)

நாவுக்கரசு சுவாமிகள் பாண்டி நாட்டுத் தலங்கள் பலவும் தரிசித்துப் பரவியவாறு சோழ தேசத்திலுள்ள திருப்புகலூரைச் சென்றடைகின்றார். இது சுவாமிகளின் 2ஆம் புகலூர் வருகை, அவதார நிறைவிற்கான யாத்திரை.  

இச்சமயத்தில் சுவாமிகள் கைத்தொண்டுகள் பலவும் புரிந்தவாறு, பல்வேறு தமிழ்மாலைகளை அருளிச் செய்துள்ள குறிப்புகளைச் சேக்கிழார் பெருமானார் பதிவு செய்கின்றார். அடிகள் புகலூரில் பாடியருளிய திருப்பதிகங்கள் மொத்தம் 24, அவற்றுள் 5 புகலூர் தலத்திற்கானவை, மீதமுள்ளவை பொதுப் பனுவல்கள்,

1. செய்யர் வெண்ணூலர்
2. பகைத்திட்டார் புரங்கள்
3. துன்னக் கோவண
4. தன்னைச் சரணென்று 
5. எண்ணுகேன் என்சொல்லி

(பொது)
6. இரு நிலனாய்த் தீயாகி 
7. அப்பன்நீ அம்மைநீ
8. தில்லைச் சிற்றம்பலமும்
9. வென்றிலேன் புலன்கள் ஐந்தும்
10. தம்மானம் காப்பதாகி
11. தொண்டனேன் பட்டதென்னே
12. மருளவா மனத்தனாகி
13. கடும்பகல் நட்டமாடி  
14. முத்தினை மணியை 
15. எட்டாம் திசைக்கும் 
16. பருவரை ஒன்று 
17. பற்றற்றார் சேர் 
18. சிவனெனும் ஓசை 
19. சாம்பலைப் பூசி 
20. விடையும் விடை 
21. வெள்ளிக் குழை 
22. பவளத் தடவரை 
23. அண்டம் கடந்த 
24. பொய்ம்மாயப் பெருங்கடலில் 

இவ்வாறு இருந்து வரும் நிலையில், புகலூருறைப் பரம்பொருளின் திருவருள் பரிபூரணமாய்க் கூடி வர, சிவபதம் பெற இருப்பதைத் திருவருட் குறிப்பினால் சுவாமிகள் உணரப் பெறுகின்றார். 'புகலூர் மேவும் புண்ணியனே, புகலொன்றிலா அடியேனுக்கு உன் திருவடி நிலைகளை அருள்வாய் ஐயனே' என்று அகம் குழைந்துருகிப் பாடுகின்றார்,  

(திருப்புகலூர் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 1)
எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ
    எம்பெருமான் திருவடியே எண்ணினல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
    கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
    ஒக்க அடைக்கும் போதுஉணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
    பூம்புகலூர் மேவிய புண்ணியனே

சித்திரைச் சதய நன்னாளொன்றில் நாம் வாழ, இவ்வையம் சிறக்க, சைவ நெறி செழித்தோங்க, திருத்தொண்டின் திறம் வாழ, திருக்கூட்டம் செம்மையுற்று விளங்க இப்புவிமிசை அவதரித்தருளிய நம் சுவாமிகள் திருக்கருவறையுள் தோன்றும் சிவஜோதியில் சென்று கலந்து, சிவமாம் பெருவாழ்வினைப் பெறுகின்றார்.

திருநாவுக்கரசர் (திருவீழிமிழலை தரிசன அனுபவம் - படிக்காசு பெற்று வறுமை போக்குதல்):

(1)
சோழ நாட்டின் காவிரித் தென்கரையில், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருவீழிமிழலை. தல யாத்திரையாக செல்லும் வழியில் ஞானசம்பந்த மூர்த்தியும், நாவுக்கரசு சுவாமிகளும் வீழிமிழலையைச் சென்றடைகின்றனர். அங்குள்ள சிவ வேதியர்களும், அடியவர் பெருமக்களும் சைவத்துறை சிறக்கத் தோன்றிய இருபெரும் குருநாதர்களை எதிர்கொண்டு வரவேற்றுப் பணிகின்றனர். 

(2)
சம்பந்தப் பெருமானாரும் உடன்வர, அப்பர் சுவாமிகள் ஆலயத்துள் புகுந்து, திருச்சன்னிதியை வலமாகச் சென்று வணங்கி, இறைவரின் திருமுன்பாக வீழ்ந்து பணிந்து எழுகின்றார், அதீத நெகிழ்ச்சியினால் அகம் குழைந்துருகி விம்முகின்றார்,

(திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 252)
சென்றுள் புகுந்து திருவீழிமிழலை அமர்ந்த செங்கனகக்
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து, திரு
முன்றில் வணங்கி முன்னெய்தி முக்கண் செக்கர்ச் சடைமவுலி
வென்றி விடையார் சேவடிக்கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார்

(3)
உச்சி கூப்பிய கையினராய், இறைவரின் பால் கொண்டுள்ள அன்பு மென்மேலும் பெருகிய வண்ணமிருக்க, கண்ணருவி பாய, 'திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே' எனும் கருத்தமைந்த திருப்பதிகத்தினால் வீழிமிழலைப் பரம்பொருளைப் போற்றி செய்கின்றார், 

(திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 253)
கைகள் குவித்துக் கழல்போற்றிக் கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியும் கண்ணருவி விரவப் பரவும் சொல்மாலை
செய்ய சடையார் தமைச்சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று 
உய்யு நெறித் தாண்டகம் மொழிந்தங்கு ஒழியாக் காதல் சிறந்தோங்க

(திருவீழிமிழலை - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 1)
போரானை ஈருரிவைப் போர்வையானைப்
    புலியதளே உடையாடை போற்றினானைப்
பாரானை மதியானைப் பகல்ஆனானைப்
    பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற
நீரானைக் காற்றானைத் தீயானானை
    நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்
தேரானைத், திருவீழிமிழலையானைச்
    சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

(4)
சில தினங்கள் அப்பதியிலேயே தனித்தனி திருமடங்களில் எழுந்தருளியிருந்து, வீழிமிழலை முதல்வரை முப்போதும் போற்றி வருகின்றனர். அச்சமயம் அப்பகுதி முழுவதிலும் மழையின்மையால் கடும் பஞ்சம் நிலவத் துவங்குகின்றது, அனைவரும் வறுமையினால் வாட்டமுறுகின்றனர். 

(5)
அன்றிரவு இரு சமயக் குரவர்களின் கனவிலும் வீழிமிழலை அண்ணலார் எழுந்தருளிச் சென்று 'இவ்வறுமையின் தீமை உங்களை அண்டாது எனினும் உம்மை வழிபடும் அடியவர்களின் பொருட்டு நாள்தோறும் பொற்காசு தருவோம்' என்றருளிச் செய்கின்றார்,  

(திருநாவுக்கரசர் புராணம் - திருப்பாடல் 257)
கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டமுறீர் எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று
கோலம் காண எழுந்தருளிக் குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார்

(6)
அன்று முதல் அருளாளர்கள் இருவரும், திருக்கோயிலின் இருவேறு பலி பீடங்களின் மீது இறைவர் அருளும் பொற்காசினைக் கொண்டு, தத்தமது திருமடங்களில் அன்பர்கள் அனைவருக்கும் உணவளித்து அருள் செய்கின்றனர்.

திருநாவுக்கரசர் (கருவறையில் கண்ணீர்மழை பொழிய வழிபட்ட திருத்தலங்கள்):

நாவுக்கரசு சுவாமிகளின் வரலாற்று நிகழ்வுகளை 429 பெரிய புராணத் திருப்பாடல்களில் தெய்வச் சேக்கிழார் விவரித்துப் போற்றியுள்ளார். இவற்றுள் சுவாமிகள் கருவறை தரிசன சமயத்தில் கண்ணருவி பொழிய வழிபட்டுள்ள திருத்தலங்களை இப்பதிவில் சிந்திப்போம். இத்திருப்பாடல்களின் பொருளினைக் கற்றறிகையில், சுவாமிகளுக்கு எத்தகைய அற்புத அனுபவம் இத்தலங்களில் கிட்டியுள்ளது என்பதோடு, நாம் எவ்வித மனநிலையில் உளமுருகி ஆலய வழிபாடு புரிதல் வேண்டும் என்பதும் தெள்ளென விளங்கும்,  

(1) தில்லை: (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 167)
கையும் தலைமிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழிமழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங்களுமுடன் உருகும் பரிவின பேறெய்தும்
மெய்யும் தரைமிசை விழுமுன்(பு) எழுதரும் மின்தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர் கும்பிடும்அவர் ஆர்வம் பெருகுதல் அளவின்றால்

(2) சீர்காழி (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 186) 
பண்பயில் வண்டறை சோலை சூழும் காழிப்
பரமர்திருக் கோபுரத்தைப் பணிந்துள் புக்கு
விண்பணிய ஓங்குபெரு விமானம் தன்னை
வலம்கொண்டு தொழுது விழுந்தெழுந்த எல்லைச்
சண்பைவரு பிள்ளையார் அப்பர் உங்கள்
தம்பிரானாரைநீர் பாடீர் என்னக்
கண்பயிலும் புனல்பொழிய அரசும் வாய்மைக்
கலைபயிலும் மொழிபொழியக் கசிந்து பாடி

(3) திருவாரூர் (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 222)
கண்டு தொழுது விழுந்து கர சரணாதிஅங்கம் 
கொண்ட புளகங்களாக எழுந்தன்பு கூரக் கண்கள்
தண்டுளி மாரி பொழியத் திருமூலட்டானர் தம்மைப்
புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து

(4) புகலூர் (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 238)
அத்திரு மூதூர் மேவிய நாவுக்கரசும் தம்
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம்
மொய்த்திழி தாரைக் கண்பொழி நீர்மெய்ம் முழுதாரப்
பைத்தலை நாகப் பூண் அணிவாரைப் பணிவுற்றார்

(5) திருவீழிமிழலை (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 253)
கைகள் குவித்துக் கழல்போற்றிக் கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியும் கண்ணருவி விரவப் பரவும் சொல்மாலை
செய்ய சடையார் தமைச்சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்(று)
உய்யு நெறித் தாண்டகம் மொழிந்தங்(கு) ஒழியாக் காதல் சிறந்தோங்க

(6) திருவோத்தூர் (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 316)
செக்கர்ச் சடையார் திருவோத்தூர்த் தேவர் பிரானார் தம்கோயில்
புக்கு வலம் கொண்டெதிர் இறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல்பொழிய
முக்கட் பிரானை விரும்புமொழித் திருத்தாண்டகங்கள் முதலாகத்
தக்க மொழி மாலைகள் சாத்திச் சார்ந்து பணி செய்தொழுகுவார்

(7) திருக்கச்சி ஏகம்பம் (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 323)
வார்ந்து சொரிந்த கண்ணருவி மயிர்க்கால் தோறும் வரும்புளகம்
ஆர்ந்த மேனிப் புறம்பலைப்ப அன்பு கரைந்(து) என்புள் அலைப்பச்
சேர்ந்த நயனம் பயன்பெற்றுத் திளைப்பத் திருஏகம்பர் தமை
நேர்ந்த மனத்தில் உறவைத்து நீடும் பதிகம் பாடுவார்

(8) திருவொற்றியூர் (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 335)
எழுதாத மறைஅளித்த எழுத்தறியும் பெருமானைத்
தொழு(து) ஆர்வமுற நிலத்தில் தோய்ந்தெழுந்தே அங்கமெலாம்
முழுதாய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க
விழுதாரை கண்பொழிய விதிர்ப்புற்று விம்மினார்

(9) திருக்காளத்தி (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 346)
மலைச்சிகரச் சிகாமணியின் மருங்குற முன்னேநிற்கும்
சிலைத்தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்திறைஞ்சி
அலைத்துவிழும் கண்ணருவி ஆகத்துப் பாய்ந்திழியத்
தலைக்குவித்த கையினராய்த் தாழ்ந்துபுறம் போந்தணைந்தார்

(10) - திருப்பூந்துருத்தி (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 387)
சேர்ந்து விருப்பொடும் புக்குத் திருநட மாளிகை முன்னர்ச்
சார்ந்து வலம் கொண்டிறைஞ்சித் தம்பெருமான் திருமுன்பு
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்தொழியா அன்பு பொங்க
ஆர்ந்த கண்ணீர்மழை தூங்க அயர்வுறும் தன்மையரானார்

(இறுதிக் குறிப்பு)
கருவறை தரிசனம் அல்லாத பிற சமயங்களில் சுவாமிகள் திருவருளை நினைந்து கண்ணீர்மழை பொழிந்துள்ள திருத்தலங்கள் (திருவதிகை - சூலை நோய் நீங்கப் பெறுகையில், தூங்கானை மாடம் - இடப சூல முத்திரை பொறிக்கப் பெறுகையில், தில்லை - உழவாரத் தொண்டு புரிகையில், திருப்பைஞ்ஞீலி - ஆலய வாயிலில் இறைவர் திருவுருவம் மறைத்த சமயத்தில், ஐயாறு - குளத்தினின்று வெளிவருகையில் மற்றும் கயிலைக் காட்சி பெறுகையில்)