சுந்தரர் (பொன் பெற்ற திருத்தலங்கள்):

நம் தலைவரான சுந்தரனார் பிரதானமாய் நான்கு திருத்தலங்களில் சிவபெருமானிடத்துப் பொன் வேண்டிப் பெற்று மகிழ்ந்துள்ளார், 

(திருப்புகலூர்):
சோழ நாடு, காவிரி தென்கரைத் தலம். பொன் வேண்டிப் பாடிய திருப்பதிகம் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை எனினும் செங்கற்கள் யாவும் செம்பொன் கட்டிகளாக மாறுமாறு அருளிய இறைவரைப் போற்றிய 'தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்' எனும் திருப்பதிகத்தைப் பாராயணம் புரிந்து மகிழலாம். 

(திருமுதுகுன்றம்):
நடுநாட்டுத் தலம், இப்பதியில் இறைவர் பன்னீராயிரம் பொன் அளித்தருளியதாகச் சேக்கிழார் பெருமான் பதிவு செய்கின்றார் (ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல்கள் 105; 106; 107). 'நஞ்சி இடை', 'மெய்யை முற்றப் பொடிப் பூசியொர் நம்பி' என்று துவங்கும் இத்தலத்திற்கான இரு திருப்பதிகங்கள் பொன் வேண்டும் குறிப்புடன் பாடப் பெற்றுள்ளவை. 
(திருப்பாச்சிலாச்சிரமம்): 
சோழ நாடு, காவிரி வடகரைத் தலம். முதலில் பொன் அருளாது திருவிளையாடல் புரிந்துப் பின் சுந்தரனார் 'இவரலாது இல்லையோ பிரானார்' என்று உரிமையோடு முறையிட்டுப் பாடிய பின்னர் பெரும் பொற் குவியலை அளித்தருள் புரிகின்றார் ('விழுநிதிக் குவைஅளித்தருள' என்றிதனைத் தெய்வச் சேக்கிழார் 'ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 82ல் பதிவு செய்கின்றார்). 
(திருஓணகாந்தன்தளி): 
முதல் காஞ்சி யாத்திரை சமயத்தில், 'நெய்யும் பாலும்' என்று துவங்கும் திருப்பதிகம் பாடி விண்ணப்பிக்க, முக்கண் முதல்வர் எண்ணிலடங்கா செல்வத்தினை அளித்தருள் புரிகின்றார் ('எண்ணில் நிதிபெற்றினிதிருந்தார்' என்று சேக்கிழார் பெருமான் 'ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 191ல் பதிவு செய்கின்றார்).
சில விளக்கங்கள், திருமுருகன்பூண்டியில் சுந்தரர் பொன் வேண்டி விண்ணப்பிக்கவில்லை, சேரமான் பெருமாள் நாயனார் தமக்களித்திருந்த பொற்குவியலை வேடர்கள் பறித்துச் சென்று விட, அது குறித்து முறையிட்டுத் திருவருளால் மீண்டும் அவைகளைப் பெற்று மகிழ்கின்றார். விண்ணப்பம் இல்லாமையால் பொன் பெற்ற திருத்தலமாக இது குறிக்கப் பெறுவதில்லை. 

இறுதியாய்த் திருநாகைக்காரோணத்தில், முத்தாரம்; மாணிக்க வயிர மாலைகள்; கத்தூரிச் சாந்து; பட்டாடை;  பொற்கட்டிகள்; நறுமணப் பொருட்கள்; திருவாரூர் செல்வத்தில் மூன்றிலொரு பங்கு; குதிரை; பொன்னாலான உடைவாள்; பொற்றாமரைப் பூ, பட்டுக் கச்சம்; காய்கறிகளோடு கூடிய சுவையான நெய்யுணவு; முத்து மாலைகள் முதலிய எண்ணிறந்த செல்வங்களை விண்ணப்பித்துப் பாடுவதால், பொன் மட்டுமே பெற்ற திருத்தல வரிசையில் இத்தலமும் பொதுவில் குறிக்கப் பெறுவதில்லை, குறித்தாலும் அது ஏற்கக் கூடியதே.

சுந்தரர் (ஒற்றியூர் திருக்கோயிலில் ஒரு காதல் திருக்காட்சி):

சுந்தரர் ஒற்றியூர் திருக்கோயிலில் படம்பக்கப் பெருமானைத் தொழுத பின்னர் ஆலய வளாகத்தில் ஆங்காங்கே பல்வேறு திருப்பணிகள் புரிந்திருப்போரை வணங்கியவாறு மலர் மண்டபத்தினை அடைகின்றார். அங்குத் திருமாலைகள் தொடுத்துக் கொண்டிருக்கும் அடியவர்களைத் தொழுது செல்லுகையில், பண்டைய விதிப்பயன் கூட்டுவிக்க, திரையைக் விலக்கி, முக்கண் முதல்வருக்கு அதுவரை தொடுத்திருந்த திருமாலைகளைக் கொடுத்துப் பின் மின்னலென மறையும் சங்கிலியாரைக் கண்டு அக்கணமே காதல் கொள்கின்றார்.  

'மலர்களோடு என் இன்னுயிரையும் சேர்த்துப் பிணைக்கும் இவளை இறைவரிடமே வேண்டிப் பெறுவேன்' என்று மீண்டுமொரு முறை திருச்சன்னிதியுள் சென்று, 'இடபாகத்தில் உமையன்னையோடு மகிழ்ந்துறையும் நிலையிலும், கங்கையெனும் மற்றொரு நங்கையை திருமுடியில் வைத்துள்ள காதலுடையீர், முழுமதி போலும் சங்கிலியைத் தந்து அடியவனின் வருத்தத்தை மாற்றி அருள்வீர்' என்று நயம்பட விண்ணப்பித்துப் பணிகின்றார்.  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 232):
மங்கைஒருபால் மகிழந்ததுவும் அன்றி மணிநீள் முடியின்கண்
கங்கை தன்னைக் கரந்தருளும் காதலுடையீர் அடியேனுக்கு 
இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்தென் உள்ளத் தொடைஅவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத் தந்தென் வருத்தம் தீருமென

சைவ சித்தாந்தம் போற்றும் சுந்தரமூர்த்தி நாயனார்:

'மோகத்தினைத் துறந்தால் முத்தி அளிப்போம்' என்று சிவாகமங்கள் வாயிலாக எந்த இறைவர் அருளியுள்ளாரோ, அம்மூர்த்தியையே ஒரு பெண்ணின் நல்லாள் மீது கொண்டிருந்த மையலின் பொருட்டுத் திருவாரூர் திருவீதிகளில் தூதாகச் செல்லுமாறு அனுப்புவித்த 'வன்தொண்டரின் திருத்தொண்டினை என்னென்று போற்றுவது?' என்று திருக்களிற்றுப்படியாரின் ஆசிரியரான 'உய்யவந்த தேவனார்' வியந்து பணிகின்றார்.  

(திருக்களிற்றுப்படியார் - திருப்பாடல் 72):
மோகம் அறுத்திடின்நாம் முத்தி கொடுப்பதென
ஆகமங்கள் சொன்ன அவர் தம்மைத் தோகையர்பால்
தூதாகப் போகவிடும் வன்தொண்டன் தொண்டுதனை
ஏதாகச் சொல்வேன் யான்

சுந்தரர் (திருவாரூரில் குவிந்த நெல்மலைகள்)

சுந்தரனார் திருவமுது செய்தற் பொருட்டு, செந்நெல்; பருப்பு வகைகள்; சர்க்கரை முதலிய பல்வேறு வளங்களை பன்னெடு நாட்களாய்ப் பரவையாரின் திருமாளிகைக்கு அனுப்புவித்து வரும் குண்டையூர் கிழார் என்பாரின்  திருத்தொண்டு மழையின்மையால் தடையுறுகின்றது. பெரிதும் வருந்திப் பரிதவிக்கும் கிழாரின் கனவினில் தோன்றும் சிவபெருமான் 'சுந்தரனின் பொருட்டு உனக்கு நெல் தந்தோம்' என்றருள, சிவமூர்த்தியின் ஏவலால் குபேரன் குண்டையூர் முழுவதும் நெல்மலைகளைக் குவிக்கின்றார்.  

சிவபெருமான் அறிவிக்க இதனையறியும் சுந்தரரும் குண்டையூர் சென்றடைந்து, நெல்மலைகளைக் கண்ணுற்று வியக்கின்றார். அருகிலுள்ள கோளிலி ஆலயம் சென்று, 'அந்நெற்குன்றுகளைத் திருவாரூரில் சேர்ப்பிக்க ஆணையிடுமாறு' வேண்டிப் பாடுகின்றார், 
நீள நினைந்தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள்வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவைஅட்டித் தரப்பணியே.
பிறைமதிப் பரம்பொருளின் திருவருளால், சிவபூத கணங்கள் அன்றிரவே அந்நெல் மலைகளைத் திருவாரூர் முழுவதும் நிறையுமாறு குவித்துச் செல்கின்றன. திருவருட் திறத்தினை வியந்து போற்றும் பரவையார், அவரவர் இல்லத்தின் எல்லையிலுள்ள நெற்கதிர்களை அவரவர்களே கொள்ளுமாறு பறையறிவிக்கச் செய்கின்றார். பின்னர், இவ்வற்புதங்கள் யாவும் நடந்தேறக் காரணமான, தம் கணவரான சுந்தரரை வணங்கி மகிழ்கின்றார்.

சுந்தரர் (கயிலையில் தோன்றிய காதல் - திருமுருக வாரியார் சுவாமிகளின் விளக்கம்):

(திருமுருக வாரியார் சுவாமிகளின் பெரியபுராண விரிவுரை நூலில் இடம் பெற்றுள்ள விளக்கத்திலிருந்து சில வரிகள், பக்கம் 94,95 - குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்):

காமனை எரித்த ஞான பூமியில் காம எண்ணம் உண்டாகாதன்றோ? நுட்பமாக நுனித்து உணராதார் சுந்தரர் காமுற்று நோக்கினார் என்பர். காம தகனம் புரிந்த இடத்தில காமத்திற்கு வலிமை ஏது? கண்ணுதற் கடவுளது திருவருள் அங்கனம் தூண்டியது. மாதவம் செய்த தென்திசை வாழவும், தீதிலாத் திருத்தொண்டத் தொகை தரவும் போதுவார் அவர்மேல் மனம் போக்கினார். "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே" இக்கருத்தைச் சேக்கிழார்அடிகள் இனிது கூறுமாறு காண்க,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 35)
மாதவம்செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப்
போதுவாரவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியிற் கண்ணினார்

அன்றியும் எத்துணைப் பெரியவர்களே ஆயினும் மாதர் மேல் மனம் வைத்தவர் தமது உயர்நிலையினின்றும் தாழ்வுறுவர் என்பதனையும் எம்பெருமான் உணர்த்துவாராயினார். திருக்கைலாய மலையிலிருந்த சுந்தரர் ஒரு கண நேரம் சிறிது பார்வையைப் பாவையர் மீது செலுத்தியதனால் அவ்வுலகை விட்டு இவ்வுலகிற்கு வந்தார் எனின், இவ்வுலகினின்று அங்கனம் செலுத்துவோர் எவ்வுலகிற்கு ஏகுவது என்பதனையும் அன்பர்கள் சிறிது உற்று நோக்குக. ஆவி ஈடேற வேண்டும் என்ற கருத்தும் கவலையும் உடையார்க்கு இது சிந்தனைக்கு வாராமற்  போகாது.

சுந்தரர் (திருப்புகலூரில் செம்பொன் கட்டிகளாக மாறிய செங்கற்கள்):

சுந்தரர், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருநாளன்று பரவையார் புரிந்து வரும் திருத்தொண்டிற்குப் பொன் வேண்டிப் பெறும் கருத்துடன் திருப்புகலூருக்குச் செல்கின்றார். 

ஆலயத்துள் புகலூர் இறைவரைத் தரிசித்துத் தம்முடைய உள்ளக் குறிப்பையும் விண்ணப்பித்துப் பணிகின்றார்.  பின் கருவறையினின்றும் வெளிப்பட்டு ஆலயத்தின் முற்பகுதியினை அடைகின்றார். திருவருட் செயலால் களைப்பு தோன்ற, சிறிது ஓய்வு கொள்ள முனைகின்றார். திருப்பணிக்கென ஆலயத்தில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த செங்கற்கள் சிலவற்றை எடுத்து அதன் மீது மேலாடையை விரித்துத் துயில் கொள்கின்றார். 

துயில் நீங்கியெழுகையில், அச்செங்கற்கள் யாவும் செம்பொன் கட்டிகளாகத் திகழ்வதைக் கண்ணுற்றுத் திருவருள் திறத்தினை வியந்து போற்றித் திருப்பதிகம் பாடுகின்றார்,  
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்கினும் தொண்டர் தருகிலாப்
பொய்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

சுந்தரர் (திருத்தொண்டர் தொகை: பாராயணமும், பலன்களும்):

நம் சுந்தரனார் திருத்தொண்டர் தொகையைப் பாடிய பெரிய புராண நிகழ்வுகளை அறிந்து கொள்வதோடு நிறுத்தி விடாமல் அதனைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, அனுதினமும் அத்திருப்பதிகத்தைப் பாராயணம் புரிவதால், ஆன்மீக ஏற்றம் மற்றும் உலகியல் சார்ந்த அனைத்து நற்பலன்களையும் பெற்று மகிழலாம் என்பது திண்ணம். 

இத்திருப்பதிகம் பாடுவதையே 'சுந்தரரின் பிரதான அவதார நோக்கமாக' நம் தெய்வச் சேக்கிழார் குறித்துள்ளார் எனில் இதன் சிறப்பினை மேலும் விவரிக்கவும் வேண்டுமோ? திருத்தொண்டர்களைப் போற்றும் இப்பனுவலைப் பாடிய மேன்மை ஒன்றினாலேயே நம் தம்பிரான் தோழருக்கு, 'வேறெந்த அருளாளர்களுக்கும் கிட்டாத, வெள்ளை யானை வரவேற்புடன் திருக்கயிலை செல்லும் பெறற்கரிய பேறு சித்திக்கப் பெற்றது' என்பதனை உள்ளத்து இருத்தி இப்பனுவலைக் காதலுடன் ஓதி வருவோம். 

(திருப்பாடல் 1):
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க்கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற்கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 2):
இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற்கடியேன்
ஏனாதி நாதன்தன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற்கடியேன்
கடவூரிற் கலயன்தன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற்கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 3):
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 4):
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 5):
வம்பறா வரிவண்டு மணம் நாற மலரும்
மதுமலர் நற்கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 6):
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கடியேன்
கார்கொண்ட கொடைக் கழறிற்றறிவாற்கும் அடியேன்
கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 7):
பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையற்கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற்கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 8):
கறைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற்கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 9):
கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 10):
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே

(திருப்பாடல் 11):
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணாற்கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க்கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவலூர்க் கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமை கேட்டுவப்பார்
ஆரூரில் அம்மானுக்கன்பர் ஆவாரே